தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Agananuru

முகவுரை

அகம், புறம் என்னும் பொருட் பாகுபாடு பற்றித் தொகுக்கப் பெற்றவை அகநானூறும் புறநானூறும். இவ் இரண்டும் அகவற் பாக்களினால் இயன்றவை. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவை அகப்பொருள் பற்றியவையே ஆயினும், எட்டுத்தொகை நூல்களுள் ‘அகம்’ என்னும் பெயரையே இத் தொகைநூல் பெற்றிருத்தல் இதன் சிறப்பு நோக்கி எழுந்தது போலும். இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் எட்டுத் தொகை நூல்களைக் கூறுமிடத்து, ‘நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு. . .’ என இந் நூலை முதலாவதாக எடுத்து ஓதுதலும் நோக்கத் தக்கது.

அகவற் பாவில் அமைந்த ஏனைய நூல்களிலும் இதன்கண் அமைந்த பாடல்கள் அடி அளவால் மிகவும் நீண்டவை. இப் பாடல்கள் 13 அடிச் சிறுமையும் 31 அடிப் பெருமையும் கொண்டவை. எனவே, இதனை ‘நெடுந்தொகை’ எனவும் வழங்குவர்.

‘ஆய்ந்த கொள்கைத் தீம் தமிழ்ப் பாட்டு
நெடியவாகி அடி நிமிர்ந்து ஒழுகிய
இன்பப் பகுதி இன் பொருட் பாடல்
நானூறு எடுத்து நூல்நவில் புலவர்
. . . . . . . . . . . . . . . . . .
முன்னினர் தொகுத்த நல் நெடுந்தொகைக்கு’

என வரும் நூல் இறுதியிலுள்ள பாயிரப் பாடலும்,
‘நெடுந்தொகை நானூறும் கருத்தினொடு முடிந்தன’ என வரும் நூல் இறுதிக் குறிப்பும், இப் பெயரையே சுட்டியுள்ளன. மேலும், அகம், அகப் பாட்டு என்னும் பெயர்களாலும் உரையாசிரியர் முதலியோர் இத் தொகை நூலைக் குறித்துள்ளனர்.

கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து 400 பாடல்கள் இதில் உள்ளன. இந்த நானூறு பாடல்களும் களிற்றியானை நிரை (1-120), மணி மிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அன்றியும், இதன்கண் உள்ள பாடல்கள் தக்கதொரு நியமத்தை மேற்கொண்டு அமைந்துள்ளன. ஒற்றைப்பட்ட எண்களையுடைய பாடல்கள் (1, 3, 5, 7, 9, 11 முதலியவை) பாலைத் திணை பற்றியனவாகும். 2, 8, 12, 18 என்று இவ்வாறு இரண்டும் எட்டுமாக வரும் எண்கள் குறிஞ்சித் திணை பற்றிய பாடல்களாக உள்ளன. 4, 14, 24 என்று இவ்வாறுள்ள நான்காம் எண்கள் முல்லைத் திணைக்கு உரியன. 6, 16, 26, 36 என்று இவ்வாறு ஆறாவது எண்ணாக உள்ளவை மருதத் திணை பற்றிய பாடல்களாகும். 10, 20, 30 என்று இவ்வாறு வரும் பத்துப் பத்தான எண்கள் நெய்தல் திணைக்கு உரியனவாம். இவ்வகையான முறையில் ஐந்திணை அமைப்பு தொகைநூல்களில் இந் நூலுக்கு மட்டும் அமைந்திருத்தலும் சிந்தித்தற்குரியது.

இத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத் தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர். இம் மூன்று செய்திகளும் சில பழங்குறிப்புகளிலிருந்து நமக்குத் தெரியவருகின்றன. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை. ஏனைய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 142.

இத் தொகை நூலின் முதல் தொண்ணூறு பாடல்களுக்குப் பழைய உரை உள்ளது. இது மிகச் சிறந்த உரையாகும். நூல் முழுமைக்கும் இவ் உரை கிடைக்காமற் போனது ஒரு பெருங் குறையே. அகப்பொருள் நூலாயினும் இதில் வரும் வரலாற்றுக் குறிப்புகள் மிகப் பலவாகும்,

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 20:17:36(இந்திய நேரம்)