தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kutrala Kuravanji


பதிப்புரை

பாரத நாடெங்கும் மிகப் பழைய காலந்தொட்டுப் பரவி நிலைபெற்று வந்துள்ள கதைகள் பாரதமும் இராமாயணமும் ஆம். இந்த இரு பெரு நூல்களும் 'இதிகாசம்' என்று சிறப்பித்துக் கூறப்படுவன. வடமொழியில் தோன்றிய இந்தப் பெருநூல்களைப் பாரத நாட்டு மொழிகள் பலவற்றில், கவிதை வடிவிலும் பிறவாறாகவும், மொழிபெயர்த்தும், சுருக்கியும், அங்கங்கே வழங்கிய புதிய கதைகளை உடன் பிணைத்தும், நாட்டு நடப்பு, சூழ்நிலை முதலியவற்றிற்கு ஏற்பச் சிற்சில மாறுதல்கள் செய்தும், புலவர் பெருமக்கள் பற்பல காலங்களில் ஆக்கிவந்துள்ளார்கள். இந் நூல்களில் அடங்கிய பல நிகழ்ச்சிகளையும் கிளைக்கதைப் பகுதிகள் சிலவற்றையும் தனித்தனி நூலாகவும் சிலர் செய்துவந்துள்ளனர்.

இவ்விரண்டிலும் பாரதக்கதைகள் நம் நாட்டில் மிகுதியாகப் போற்றப் பெற்று வந்துள்ளன. இராம சரிதத்தால் இராமாயணம் ஏற்றம் பெற்றது போலவே, கண்ணன் சரிதத்தோடு ஒன்றிப் பாரதம் ஏற்றம் பெற்றுள்ளது. 'மகாபாரதத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது' என்று பெரியார்கள் கூறியுள்ளனர். ஆழ்வார்கள் முதலியோரும் கண்ணன் தூது நடந்த நிகழ்ச்சியில் பெரிதும் ஈடுபட்டுள்ளனர். பகவத் கீதையின் தோற்றத்திற்கு நிலைக்களமாய் அமைந்தது பாரதப் போர் என்பர். 'மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப் பாரினில் சொன்ன இராமாநுசன்' என்பது இராமாநுச நூற்றந்தாதி (68). பாரதத்தை நான்கு வேதங்களோடு ஒக்க வைத்து ஐந்தாம் வேதம் என்று மக்கள் போற்றிவந்துள்ளார்கள். 'பாரத: பஞ்சமோ வேத:' என்பது ஒரு பழமொழி.

நீடு ஆழி உலகத்து மறை நாலொடு ஐந்து என்று நிலைநிற்கவே
வாடாத தவ வாய்மை முனிராசன் மாபாரதம் சொன்ன நாள்

என வில்லி பாரதத்தின் சிறப்புப் பாயிரப் பாடல் புகழ்தலும் கவனிக்கத்தக்கது. இப் பெரிய இதிகாசத்தின் பெருமை கருதி இதனை 'மகாபாரதம்' என்றும், 'மாபாரதம்' என்றும் சிறப்பித்துக் கூறிவருகின்றனர்.

பாரதக் கதைகள் பொதுமக்களைப் பெரிதும் பிணித்து வந்துள்ளன. ஏதேனும் விரிவான கதையையோ வேறு நிகழ்ச்சியையோ மக்கள் குறிப்பிடும்பொழுது 'இது என்ன! பாரதமாயிருக்கிறதே! என்பது உலக வழக்கு. சிவப்பிரகாசரும் தம் சகோதரரது திருமணக்காலத்தில் வாழ்த்திய வாழ்த்து ஒன்றில், 'சிவன் ஒருவர் தூது என்ன; அத் தூது சென்ற கதை செப்பில் ஒரு பாரதம் என' என்று பாரதம் என்பதைச் சிலேடைப் பொருள்பட அமைத்துள்ளமையும் நோக்கத் தகும். பட்டி தொட்டிகளில் வாழும் எழுத்தறிவில்லாத மாந்தரும் இக்கதையின் பல பகுதிகளை அறிவர்; இதில் வரும் முக்கியமான சில கதாபாத்திரங்களின் செயல்களையும் அறிவர். இப் பாத்திரங்களோடு தம் காலத்தவரை ஒப்பிட்டுப் பேசுதலும் உண்டு. 'கொடைக்குக் கர்ணன்' என்பதும், நெறி தவறா நேர்மையாளனைத் 'தருமன்' என்று புகழ்தலும், வலிமையிற் சிறந்த புகழுடையாரை 'வீமவிசயர் போல' என்று ஒப்பிடுதலும் எங்கும் உண்டு. கலகம் மூட்டித் திரியும் ஒருவனைச் 'சகுனி மாமன்' என்று சொல்வது பெரு வழக்கு. தருமன், விசயன், சகாதேவன், பாஞ்சாலி, திரௌபதி, முதலிய பெயர்களை மக்களுக்கு இட்டு வழங்குகின்றனர்.

II

இவ்வாறு மக்களிடையே இக் கதை பெரிதும் பரவவே, வியாசர் வழங்கிய பாரதமும் எங்கும் பயிலப்பெறுவதாயிற்று. இதனைப் பிரசங்கம் புரிதலையே தொழிலாக உடைய பெருமக்களும் அங்கங்கே பெருகினர். அதனால் இவவிதிகாசமும் நாளடைவில் வளர்ச்சி பெறுவதாயிற்று. இந்தப் பேரிதிகாசத்தில் இடைச் செருகல்கள் மிகப் பலவாக ஏற்பட்டுள்ளன என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அவ்வக்காலங்களில் அங்கங்கே வழங்கிய பல கதைகளும் நிகழ்ச்சிகளும் வியாசர் வாக்குடன் பின்வந்தவர்களால் பாடிச் சேர்க்கப்பெற்றன. மதவாதிகளாலும் தத்துவ நூற் புலவர்களாலும் பல செய்திகள் இதனுள் புகுத்தப்பெற்றிருத்தல் இயல்பே. சிற்சில பிரதேசங்களில் மட்டும் வழங்கிய சில கதைகளும் அந்தந்தப் பிரதேச பண்டிதர்களால் பிணைக்கப்பெற்றிருக்கலாம். இதன் பகுதிகளைக் கோவில்களில் ஓதிப் பொருள் சொல்லிவந்தவர்களாலும் இதனைப் பிரசங்கித்து வந்தவர்களாலும் காலப்போக்கில் பல மாறுதல்கள் இந் நூலில் ஏற்பட்டன. இதனால் வியாச பாரதத்தில் இடைச்செருகல்கள் பல ஏற்பட்டுள்ளதோடு, நூலும் மிகமிக விரிவடைவதாயிற்று. பிரதேசத்துக்குப் பிரதேசம் நூற்பகுதிகள் வேறுபட்டுக் காண்பதோடு, பாடல்கள் பற்பல மாறுபாடுகளையும் பெற்றுள்ளன. இவ்வகை மாறுபாடுகள் எல்லாம் இந் நூல் மக்களிடையே பெரிதும் வழங்கிவந்தமையையே புலப்படுத்துகின்றன.

நம் நாட்டில் மட்டுமின்றி, சுமாத்திரா, ஜாவா, முதலிய தூரக் கிழக்குத் தேசங்களிலும் பாரதக்கதைகள் பரவியுள்ளன. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் சம்பா என்னும் இடத்தில் வியாச பகவானுக்குக் கோவில் கட்டியிருந்தமை சாசனங்களால் தெரியவருகிறது. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காம்போஜ நாட்டிலே பாரதம், இராமாயணம், புராணங்கள் முதலிய நூல்களைக் கோவில்களில் படிப்பதற்கு அந்த நாட்டு அரசன் ஏற்பாடு செய்திருந்தமையும் சாசனங்களால் வெளியாகிறது. எனவே, இந்திய நாட்டில் பிறந்த இக் கதை மக்களின் வாணிகம், குடியேற்றம் ஆகியவற்றால் கீழை நாடுகளில் மிக முற்பட்ட காலத்திலேயே பரவியுள்ளமை புலனாம். இப்பொழுது, இப் பெருங் கதை உலகில் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பெற்றுப் போற்றும் பெருமை எய்தியுள்ளது.

III

பாரதம் பாடிய பெருந்தேவனார் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, என்னும் ஐந்து தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடியுள்ளார். இவர் பாரதத்தை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக இயற்றினர் என்று தெரிகிறது. தொல்காப்பியப் பொருளதிகார உரையில் நச்சினார்க்கினியராலும், யாப்பருங்கல விருத்தியுரைகாரர் முதலியோராலும், 'இது பெருந்தேவனார் பாட்டு', 'இது பாரதப் பாட்டு' என எடுத்தாளப்பெறுகின்ற பாடல்கள் இந் நூலைச் சார்ந்தனவாதல் கூடும். இந் நூல் முற்றும் நமக்குக் கிடைக்கப் பெறாமையினாலே இதன் கதைப் போக்கு , நடை, முதலிய பிற இயல்புகளை நாம் தெரிந்து கொள்ளக் கூடவில்லை.

பழந் தமிழ் நூலாகிய புறநானூற்றிலும் பாரதப் போரில் தமிழரசர்கள் உதவி செய்தது பற்றி ஒருகுறிப்பு உள்ளது. பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்பான் பாரதப் போரில் சோறு வழங்கினான் என்று முரஞ்சியூர் முடிநாகராயர் என்பவர் பாடியுள்ளார்.

அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம் தலைக் கொண்ட பொலம் பூந் தும்பை
ஈர்-ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழியப்
பெருஞ் சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்! (213-16)

என்பது இப் புலவரின் வாக்கு. சங்க நூல்களில் இவர் பாடியதாகக் காண்பது இந்தப் பாடல் ஒன்றே. புறம் 366-ஆம் பாடல் தருமபுத்திரனைக் கோதமனார் பாடியது. அப்பாடலில் கோதமனார் தருமபுத்திரனை, 'அறவோன் மகனே! மறவோர் செம்மால்!' என்று விளிக்கின்றார். 'அறவோன் மகன்' என்பதனால் ஐவருள் ஒருவனாகிய தருமபுத்திரனைக் குறித்ததாகுமோ என்னும் ஐயுறவு எழுதல் இயல்பே. டாக்டர் உ.வே. சாமிநாதையர், 'இவன் ஓர் அரசன்' என்றே பாடப்பட்டோர் வரலாற்றில் குறித்துள்ளார். எனவே, தரும புத்திரனது பெயர் பூண்ட ஒரு தமிழ் மன்னன் என்றே இவனைக் கொள்ளலாம். இதனால் பாரத வீரர்களின் பெயரை மக்கள் தங்கள் பெயராக மேற்கொள்ளுதல் மிகப் பழங்காலந்தொட்டே வரும் மரபு என்பது போதரும். பெரும்பாணாற்றுப்படையில்,

ஈர்-ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய,
பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந் தேர்
ஆராச் செருவின் ஐவர் போல       (415-417)

இளந்திரையன் பகை வென்றான் என்பது குறிக்கப்பட்டுள்ளது. விசயன் காண்டவ வனம் எரித்த செய்தியும், வீமன் வகுத்த மடைநூல் (பாக சாஸ்திரம்) நெறிப்படி பற்பல உணவு ஆக்கியமையும்,

கா எரியூட்டிய கவர் கணைத் தூணி
பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்,
பனிவரை மார்பன், பயந்த நுண் பொருட்
பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில்  (238-241)

என வரும் சிறுபாணாற்றுப்படை அடிகளால் புலனாகின்றன.

கலித்தொகையில்உவமை வாயிலாகப் பாரதக் கதை நிகழ்ச்சிகள் பல காட்டப் பெற்றுள்ளன. அரக்கு இல்லில் ஐவரைக் குடிபுகச் செய்து துரியோதனன் அதற்குத் தீயிட்டது(25:1-4), அந்தப் பேராபத்திலிருந்து வீமன் தன் கிளைஞரைக்காப்பாற்றியது (25:5-8), துச்சாதனன் திரௌபதியின் கூந்தலைப் பற்றியது (101:18-20), அவனது நெஞ்சத்தை வீமன் பிளந்தது (101:18-20), துரியோதனன் துடையை வீமன் முறித்தது (52:2-3), பாரதப் பொருகளம்(104:57-59), முதலியவற்றைப் பற்றிய குறிப்புக்களைக் காணலாம். சிலப்பதிகாரத்தில், 'இலங்கையில் எழுந்த சமரமும், கடல்வணன் தேர் ஊர் செருவும், பாடி' (26:238-239) என இராமாயண பாரதப் போர்கள் இரண்டும் சுட்டப்பெற்றுள்ளன. அன்றியும், பாரதப் போர் பதினெட்டு நாள் நடந்தமை குறித்தும் (27:7-10), அப் போரில் சேரன் பெருஞ் சோறு அளித்தமை குறித்தும் (29:24), கண்ணன் பாண்டவர்க்குத் தூது நடந்தமை குறித்தும் (17:34,37) குறிப்புகள் வந்துள்ளன. விராடனது நகரில் விசயன் பேடியாக வாழ்ந்தமை பற்றி மணிமேகலையில் குறிப்பு உள்ளது (3:146-147).

   தேவார, திவ்யப் பிரபந்தங்களிலும் பாரதக் கதை நிகழ்ச்சிகளைக் காணலாம். அருச்சுனன் பன்றியின்பொருட்டுச் சிவபெருமானுடன் போர் புரிந்ததும், அப் பெருமான் அவனுக்குப் பாசுபதம் அளித்ததும் ஆகிய நிகழ்ச்சிகள் தேவாரத் திருப் பாட்டுக்களில் உள்ளன (1,20,6;1,48,6;4,7,10;,6,34,3;7,66,4;7,98,9) திவ்யப்பிரபந்தப் பாசுரங்களிலே கண்ணனோடு இயைபுடைய பாரத சரித நிகழ்ச்சிகள் யாவுமே அங்கங்கே குறிக்கப்படுதல் காணலாம். ஐவர்க்காகக் கண்ணன் புரிந்த செயல்கள் எல்லாம் ஆழ்வார்களால் குறிக்கப்பெற்றுள்ளன. முக்கியமாகப் பெரியாழ்வார், திருமங்கை மன்னன் பாசுரங்களிலே பாரதக் கதைகள் மிகுதியும் இடம் பெற்றுள்ளன.

   பிற்காலச் சோழர் காலத்துத் தோன்றிய கலிங்கத்துப்பரணி,

தங்கள் பாரதம் முடிப்பளவும் நின்று தருமன்-
தன் கடற்படைதனக்கு உதவி செய்த அவனும் (194)

என்றும்,

தேவாசுர ராமாயண மாபாரதம் உளவென்று
ஓவா உரை ஓயும்படி உளது, அப் பொரு களமே (472)

என்றும், சோழரின் முன்னோன் ஒருவன் தருமன் பக்கம் நின்று உதவிய வகையையும், பாரதப் போரையும் பற்றிக் கூறுதல் கவனிக்கத்தக்கது.

அரக்கரைப் பொருத முரட்போர் வில்லும்,
பாரதம் பொருத பேர் இசைச் சிலையும்,
தாருகற் கடிந்த வீரத்து அயிலும்
பாடிய புலவன் பதி அம்பர்ச் சேந்தன்

என வரும் திவாகரத்தின் பத்தாவது ஒலிபற்றிய பெயர்த் தொகுதி இறுதிக் கட்டுரையால் திவாகர நிகண்டின் ஆசிரியர் பாரதம் பொருத விசயனது வெற்றி வில்லைப் பாடினார் என்பது தெரிகிறது. இவர் பாரதக் கதை முற்றும் பாடினரா' அல்லது அதன் பகுதிகளுள் ஏதேனும் ஒன்றைப் பாடினரா' என்பது துணியக்கூடவில்லை. சேந்தனாரின் புலமைக்கு எடுத்துக்காட்டாகக் கூறுவதனால் எல்லோரும் மதித்துப் போற்றிய ஓர் இலக்கியமாகவே இவருடைய நூல் இருந்திருக்கவேண்டும் என்று ஊகிக்கலாம். இங்ஙனமாக, சங்கநூல் தொடங்கிப் பாரதக் கதைப்பகுதிகள் தமிழ் நூல்களில் புலவர் பெருமக்களால் விதந்தோதப் பெற்றுள்ளமை மக்களிடையே இக்கதையின் பெரு வழக்கினையே புலப்படுத்தும்.

     நூலாசிரியர்களைத் தவிர, பழைய உரையாசிரியர்களும் இந்த மாக் கதை பற்றிக் கூறியதோடு பழைய பாரதப் பாடல்கள் சிலவற்றையும் மேற்கோள் காட்டியுள்ளார்கள். நச்சினார்க்கினியர் தமது உரையில், 'இராமாயணமும், பாரதமும் போல்வன இலக்கியம்' என்று (புறத். 20) குறிப்பிடுகின்றார். யாப்பருங்கல விருத்தியுரைகாரர் 'தொன்மை' என்னும் வனப்பிற்கு 'பாரதமும் இராமாயணம் முதலாயினவும் கொள்க' (95) என்று உதாரணம் காட்டுகின்றார். நச்சினார்க்கினியர் உரையில் காட்டும் பாரதப் பாட்டுக்கள் பழைய பாரதத்தைச் சார்ந்தனவாக இருத்தல் கூடும். வீரசோழிய உரையிலும் பாரதப் பாடல்கள் மேற்கோளாகக் காட்டப் பெற்றிருக்கின்றன. இக்கதை நிகழ்ச்சி பற்றிய தனிப்பாடல்கள் சிலவும் உள்ளன.

IV

    தமிழ்ச் சாசனங்களிலும் மகாபாரதம் பற்றிய செய்திகள் வந்துள்ளன.

மாபாரதம் பொருது மன்னவர்க்குத் தூது சென்று
தேவாசுர மதுகை தரித்துத் தேனாரு மறையும் கொண்டருளி

(T.A.S. ii,19)


என்று வீரபாண்டியன் மெய்க்கீர்த்தியிலும்,

மாரதர் மலை களத்து அவியப் பாரதத்தில் பகடு ஓட்டியும்
விசயனை வசுசாபம் நீக்கியும் வேந்தழியச் சுரம் போக்கியும்
                (சின்னமனூர்ச் சாசனம், செந்தமிழ், தொ. 23)

என்று இராசசிங்க பாண்டியன் மெய்க்கீர்த்தியிலும் (சின்னமனூர்ச் சாசனப் பகுதி) வந்துள்ள பகுதிகள் முன்னோன் செயலைப் பின்னோனாகிய பாண்டியனுக்கும் ஏற்றி மொழிந்த சிறப்புக்களாகும். தவிர, இராச சிங்க பாண்டியன் மெய்க்கீர்த்தியில்,

        மாபாரதம் தமிழ்ப்படுத்து மதுராபுரிச் சங்கம் வைத்து

என்று கூறப்பட்டுள்ளது. இவன் மதுரையில் நிறுவிய சங்கத்தைக் குறித்தும், தமிழில் இவன் ஆக்குவித்த மகாபாரதம் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை. ஒருகால் இவைகளும் இவனுடைய முன்னோரைப்பற்றிய செய்திகளாதலும் கூடும். எவ்வாறாயினும், பாண்டியன் ஒருவன் மகாபாரதத்தைத் தமிழ்ப்படுத்தச் செய்தான் என்பது உண்மை நிகழ்ச்சியாகலாம். மேலும், அருணிலை விசாகன் என்போன் பாரதத்தை இனிய செந்தமிழ்ப் படுத்திய செய்தி திருவாலங்காட்டுச் சாசனத்தால் தெரிய வருகிறது (சாஸனத் தமிழ்க்கவி சரிதம், பக். 90).

V

தெள்ளாற்றுப் போர் வென்ற மூன்றாம் நந்திவர்மப் பல்லவன் காலத்தில், பெருந்தேவனார் என்பவரால் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக ஒரு பாரதம் தோன்றியுள்ளது. இதில் பெரும்பாலும் வெண்பாக்களும் ஒரு சில ஆசிரியப் பாக்களும் இரண்டொரு விருத்தங்களும் உள்ளன. இதனைப் 'பெருந் தேவனார் பாரதம்' என்றும், 'பாரத வெண்பா' என்றும் வழங்கி வருகின்றனர். இவரது நூலில் இப்பொழுது உத்தியோக பருவம் முதல் துரோண பருவத்தில் பதின்மூன்றாம் நாட் போர் முடிய, 830 பாடல்களே கிடைத்துள்ளன. எஞ்சிய பகுதிகள் இறந்துபட்டமையால், இவரது பாரத நூலில் தொடக்கம் முடிவு முதலிய கதைப் போக்குப் புலனாக இடமில்லை. 'மாவிந்தம்' என்னும் பெயருடைய நூல் ஒன்று தஞ்சைச் சரஸ்வதி மகால் வெளியீடாக வந்துள்ளது. இது பெருந் தேவனார் பாரத வெண்பாவின் பிற்பகுதி என்று தெரியவருகிறது. பாரத வெண்பாச் செய்யுட்களை உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ளார்கள். புறத்திரட்டு என்னும் செய்யுள்-தொகைநூல் செய்தவர் வெண்பாவால் ஆன பாரதப் பாடல்களை (33) நூலுள் தொகுத்துள்ளார். இவை பெருந்தேவனார் பாரத வெண்பாவைச் சார்ந்தனவாகலாம்.

வில்லிபுத்தூரர் காலத்திற்குச் சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட இந்தப் பாரத வெண்பாவைச் குறித்து, அவர் தமது நூலுள் யாதும் குறிப்பிடவில்லை.

மண்ணில் ஆரணம் நிகர் என வியாதனார் வகுத்த
எண் இலா நெடுங் காதையை யான் அறிந்து இயம்பல் (குருகுலச். 4)

என்றும்,
 

முன் சொலாகிய சொல் எலாம் முழுது உணர் முனிவன்-
தன் சொலாகிய மாப் பெருங்காப்பியம்தன்னைத
தென்சொலால் உரைசெய்தலின் (குருகுலச். 5)

என்றும், அவர் வியாசர் தந்த பெருங் காப்பியத்தைத் தமிழில் பாடுவதாகவே கூறுகின்றார். ஆயினும், பாரத வெண்பாவையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார் என்பது இரு நூல்களையும் ஒப்பு நோக்குவார்க்குப் புலனாகும். பாரத வெண்பாவிலுள்ள சிற்சில செய்யுட்களின் போக்கையும், அதன்கண் வரும் உரைநடைப் பகுதிகளில் சிலவற்றையும் வில்லி மேற்கொண்டிருக்கிறார். (பெருந். 140: வில்லி. கிருட். 47; பெருந் 234; வில்லி, கிருட் 232; பெருந். 614; வில்லி. ஒன்பதாம் போர்ச். 5; பெருந். 372; வி்ல்லி. சஞ்சய 16; பெருந் 34; வில்லி. உலூகன். 4) தவிரவும், பாரது நிகழ்ச்சி பற்றி வழங்கிய பல தனிப் பாடல்களும் வில்லியின் நூலுக்கு உதவியிலுக்கலாம்.

VI

வடமொழியில் உள்ள மற்றொரு நூலும் வில்லிக்கு வழிகாட்டியிருக்கின்றது. அதுவே, அகஸ்திய பட்டர் பாடிய 'பால பாரதம்'. இப் பாலபாரதம் இருபது சருக்கங்களில் பாரதக் கதையைச் சுருக்கமாகத் தருகிறது. எளிய இனிய வடமொழி நடையை இது மேற்கொண்டுள்ளது. இந்நூலைச் சுலோகத்துக்குச் சுலோகம், சொல்லுக்குச் சொல், அப்படியே வில்லி தழுவியுள்ளார் என்றும், பாலபாரதத்தின் மொழிபெயர்ப்பாய் அமைந்ததே வில்லிபாரதம் என்றும் சிலர் கூறிவருகின்றனர். இது முற்றிலும் உண்மை அன்று. பாலபாரதத்தின் முதல் ஆறு சருக்கங்களுக்கும் வில்லிபாரதத்துக்கும் பெரிதும் ஒற்றுமை காணப்படுகிறது. ஆனால், போகப் போக இரண்டும் இடையிடையே வேறுபட்டுச் சென்று, இறுதியில் முற்றும் வேறுபட்டு விடுகின்றன. எனவே, விரிந்த பாரதக் கதையைச் சுருக்கமாகத் தமிழில் அமைப்பதற்குப் பாலபாரதத்தின் சுருக்கமுறை வில்லிக்குப் பயன்பட்டிருக்கலாம். 'வில்லி புத்தூராரின் பாரதம் முழுவதும் பாலபாரதத்தின் மொழிபெயர்ப்பாக அமைந்தது என்று சொல்ல இயலாது' என்று கூறி, இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும் தமது வில்லிபாரத உரைப் பதிப்பின் முகவுரையில் வை. மு. கோபால கிருஷ்ணமாசாரியர் விளக்கியுள்ளார்.

இங்கனமாக, வில்லிபுத்தூரர் பாரதம் பாடுவதற்கு முன் வடமொழியிலும் தமிழிலும் முதல் நூலை ஒட்டிச் சிற்சில நூல்கள் தோன்றி, நாட்டில் வழங்கிவந்துள்ளமையைப் பார்த்தோம். தம் காலத்து மிகுதியாகக் காப்பியங்களில் வழங்கிய விருத்த யாப்பில், பல்வேறு சந்தங்களையும் மேற்கொண்டு, சிறந்த முறையில் பாரதத்தை வில்லி அளிக்கவே, பாரத வெண்பா போன்ற முந்திய தமிழ் நூல்கள் மக்களால் பெரிதும் விரும்பிக் கற்கப் பெறவில்லை. வில்லிபுத்தூரர் காலம் முதல் வில்லி பாரதமே தமிழுலகில் தலைசிறந்து விளங்குவதாயிற்று. வில்லிபுத்தூரர் பாடல்களை அங்கங்கே பயன்படுத்திக் கொண்டு பாரதக் கதையை விரிவாகப் பாடிய நல்லாப் பிள்ளை பாரதமும், வில்லியின் நூலைத் தொடர்ந்து பாரதத்தை முற்றுவித்த அட்டாவதானம் அரங்கநாத கவிராயர் பாரதமும் வில்லிபாரதத்தைப்போல அத்துணையாகப் புலவர் பெருமக்களால் வரவேற்கப்பெறவில்லை. இங்கனமே, வேறு சிலர் பிற்காலத்துப் பாடிய பாரத நூல்கள் சில பெயரளவினால்கூட அறியப்படாது மறைந்து விட்டனவும் உண்டு. உதாரணமாகப் பழைய காஞ்சிப் புராண ஆசிரியர் இயற்றிய பாரதம், 'மாவிந்தம்' முதலியவற்றைக் கூறலாம். இவ்வாறு வில்லிபுத்தூரருக்கு முன்னும் பின்னும் தோன்றிய பாரத நூல்களெல்லாம் வழக்கொழியுமாறு கவிதைப் பெருமையினால் சிறந்து, இன்றும் புலவர் பெருமக்களால் போற்றப்பெற்று வருவது வில்லிபுத்தூரரின் பாரதம் ஒன்றே.

VII

வில்லிபுத்தூரரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக எடுத்தியம்புவது அவர்தம் புதல்வர் வரந்தருவார் பாடிய சிறப்புப் பாயிரம். இப்பாயிரத்துள் காணும் செய்திகளுக்கும் புலவர் புராணத்தில் வில்லிபுத்தூரர் சருக்கத்தில் காணும் வரலாற்றிற்கும் சிற்சில மாறுபாடுகள் உள்ளன. வில்லியின் வரலாற்றோடு இயைபுடைய செய்திகளைத் தெரிவிக்கும் சில தனிப்பாடல்களும் உள்ளன.

    இவரது பெயரைச் சிறப்புப் பாயிரம் 'வில்லிபுத்தூரன்' என்றும், அரங்கநாத கவிராயர் 'வில்லிபுத்தூராழ்வார்' என்றும் குறித்தல் காணலாம். இவர் திருமால் பக்தர் என்பது கொண்டு வில்லிபுத்தூராழ்வார் என்று இக்காலத்தும் சிலர் வழங்குகின்றனர். தமிழ்விடு தூதும் தனிப்பாடலும் இவரை வில்லி என்றே குறிக்கின்றன.

    இவர் திருமுனைப்பாடி நாட்டில் சனியூரில் தோன்றியவர். இந் நாட்டை நடு நாடு, சேதிநாடு, மாகதக் கொங்கு, என்றும் வழங்குவது உண்டு. பெண்ணையாற்றினால் வளம் சிறத்தலின், இது பெண்ணை நாடு என்னவும் பெறும். அறநெறிச் சாரம் பாடிய திருமுனைப்பாடியார் இந்த நாட்டைச் சார்ந்தவரே. சனியூர் என்ற ஊர் எது என்பது இப்பொழுது விளங்கவில்லை. இவ்வூரில் அந்தணர் குலத்தில், வந்த வைணவராகிய வீரராகவர் என்பவரே இவர்தம் தந்தையார். வட்டமாமணி என்னும் குடியில் இவர் பிறந்தவர் என்பர். 'வட்டமாமணியினன்' என்னும் வரந்தருவார் பாயிரக் குறிப்பு இதனைப் புலப்படுத்தும். வில்லி திருமால் பத்தியில் சிறந்தவரே.

    மன்னுமாதவன் சரிதமும் இடைஇடை வழங்கும்
    என்னும் ஆசையால் யானும் ஈது இயம்புதற்கு இசைந்தேன்.

என்னும் இவரது அவையடக்கச் செய்யுள் (குருகுலச். 6) இவரது பத்தியின் பெருமையை விளக்குதல் காணலாம். திருமால் பத்தியில் விஞ்சிய இவர் அருச்சுனன் தீர்த்த யாத்திரைச் சருக்கம், அருச்சுனன் தவநிலைச் சருக்கம், முதலிய பல இடங்களில் சிவ பெருமானைக் குலதெய்வமாகக் கொண்டுள்ளவர் போன்று துதிக்கின்றார். மும்மூர்த்திகளில் முதல்வன் சிவனே என்றும் ஒரு சில இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அன்றியும், சூரியன், வாயு, முதலிய தெய்வங்களையும் புகழ்கின்றார். இங்கனமாக வரும் பல குறிப்புகளினால் சைவ வைணவ சமரச ஞானியாய் இவரைப் பாரதத்தில் காண்கிறோம். எனவே, இவரை மதக் காழ்ப்பு இல்லா வைணவர் என்று கொள்ளுதல் பொருந்தும்.

இவரது பெருங் காவியத்திலிருந்து இவரது வடமொழி தென்மொழிப் புலமைத் திறம் நன்கு விளங்கும். தமிழிலுள்ள முந்து நூல்கள் பலவற்றையும் இவர் நன்கு கற்றவர். பல நூல்களிலுமிருந்து இவர் எடுத்தாளும் கருத்து, சொல், தொடர் முதலியவற்றால் இது விளங்கும். விருத்தப்பாவில் கதையின் சுதிக்கு ஏற்பப் பல்வேறு வகையான சந்தங்களை இவர் மேற்கொண்டிருப்பது இவருக்கே உரிய ஒரு தனிச் சிறப்பாகும்.

    ஐந்து பாவுடை நால்வகைக் கவிக்கு அதிபதியாய்
    வந்து, வட்டமாமணியினன் மணி முடி புனைந்து

என்று சிறப்புப்பாயிரம் (15) இவரது கவிதையின் ஆற்றலைப் புலப்படுத்தியுள்ளது. காளம் முதலிய வெற்றி விருதுகளை இவர் படைத்தவர் என்பது, 'தீர காகளம் பெறுதலின் யாரினும் சிறந்தோன்' என்னும் பாயிரப் பகுதியால் (17) தெரியவரும். மேலும், இவர் தமிழ் நாட்டு மூவேந்தர்களிடமும் பரிசுகள் பல பெற்றுத் திகழ்ந்தார் என்றும் பாயிரத்தால் அறிகிறோம்.

இவ்வாறு தமிழகம் எங்கும் புகழ் பரவ இவர் வாழ்ந்துவரும் காலத்தில், இவர் வாழ்ந்த நாட்டின் அதிபதியாம் குறுநில மன்னன் ஆட்கொண்டான் இவரை வரவேற்று ஆதரித்தான். இவனது தலைநகர் வக்கபாகை. எனவே, இவன் வக்கபாகை வரபதியாட்கொண்டான் என்றும் குறிப்பிடப்படுகின்றான்.

சாணர்க்கு முன்னிற்கும் ஆட்கொண்ட நாயன் தமிழ்க் கொங்கர் கோன்
பாணுற்ற வரி வண்டு சேர் வக்கை நகர் ஆதி பக்கத்திலே
ஊணுக்கு வாராதிருப்பாய், விருப்பாகி உயர் வானிலே;
வீணுக்கு நின் ஆகம் மெலிகின்றது இவ்வாறு, வெண் திங்களே!
(தமிழ் நாவலர் சரிதை, 107)              

என இரட்டையர் இவனது கொடைத் திறத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.

   இந்த வக்கபாகை வரபதி ஆட்கொண்டான் வேண்டுகோளினாலேயே பாரதப் பெருங் கதை வில்லி வாக்கினின்று பிறந்தது. '

பிறந்த திசைக்கு இசை நிற்பப் பாரதமாம்
    பெருங்கதையைப் பெரியோர்தங்கள்
சிறந்த செவிக்கு அமுதம் எனத் தமிழ்மொழியின்
    விருத்தத்தால் செய்க!'

என ஆட்கொண்டான் வேண்டியதாகப் பாயிரம் (22) அறிவிக்கின்றது. வில்லியின் பாரதத்தால் ஆட்கொண்டான் இசையும் இறவாது நிலைபெறுவதாயிற்று.

துன்னு மறைப் பொருள் எல்லாம் பொதிந்து, சுவை முதிர்ந்து,
பன்னு புகழ் பெறு ஐந்தாம் வேதம் என்னும் அப் பாரதத்தைத்
தென்னன் மொழியிற் சொலச் செய்து கன்னடற் செற்ற தமிழ்
மன்னன் வலியன் ஆட்கொண்டான் முனோர் கொங்கு மண்டலமே

என வரும் கொங்கு மண்டலச் சதகச் செய்யுளும் (32) ஆட்கொண்டான் பாரதம் செய்வித்தமையை அறிவிக்கின்றது.

   வில்லியோ தமது நூலுள் ஆசைபற்றிப் பாரதப் பெருங்கதையைப் பாட முற்பட்டதாகக் கூறுகின்றார்.

   மன்னும் மாதவன் சரிதமும் இடை இடை வழங்கும்
   என்னும் ஆசையால் யானும் ஈது இயம்புதற்கு இசைந்தேன் (குருகுலச். 6)

என்பது அவர் வாக்கு. எனினும், நூலுள் நான்கு இடங்களில் தம் நன்றியைப் புலப்படுத்தும் வகையில் வரபதியாட்கொண்டானைச் சிறப்பித்துள்ளமையினால் (காண்டவ, 50, நிரைமாட்சி 103, பதினாறாம் போர் 90, பதினேழாம் போர் 33), இம்மன்னன் வோண்டுகோளும் ஆதரவும் பாரதம் பாடுவதற்குத் துணைக்காரணங்களாய் அமைந்தன என்பது தெளிவாம்.

வில்லிபுத்தூரர் புலமையில்லாத போலிப்புலவர்களோடு வாதிட்டு வென்று, அவர்கள் காதுகளைத் துறட்டினால் அறுத்து வந்தார் என்றும் ஒரு கர்னபரம்பரைக்கதை உண்டு. இதனைத் தமிழ்விடு தூதும், ஒரு தனிப்பாடலும் குறித்துள்ளன. தெய்வ பக்தியில் விஞ்சிய இப் புலவர் இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டார் என்றல் பொருத்தமாகத் தோன்றவில்லை. ஒட்டக்கூத்தர் முதலிய வேறு புலவர் சிலரைப் பற்றியும் இத்தகைய கதைகள் உண்டு. இக் கதையைக் குறிப்பிடும்,

மேலோரில்,                                       
பாத் தனதாக்கொண்ட பிள்ளைப் பாண்டியன், வில்லி, ஒட்டக்-
கூத்தன், இவர் கல்லாது கோட்டிகொளும் சீத்தையரைக்
குட்டி, செவி அறுத்து, கூட்டித் தலைகள் எல்லாம்
வெட்டி, களைபறிக்க, . . . . . . . . (65-67)

என வரும் தமிழ் விடு தூதுப் பகுதிக்குக் குறிப்புரை வகுத்த டாக்டர் உ.வே. சாமி நாதையர், 'இவற்றிற் கூறப்பட்ட செய்திகள், "குடடு்தற்கோ" என வரும் தனிப்பாடலை ஒட்டி எழுந்தன போலும்; பெரியோர் பலர்க்கு இக் கதைகள் உடன்பாடு அல்ல' என்று எழுதியிருத்தலும் நோக்கத்தகும்.

VIII

இனி, வில்லி வாழ்ந்த காலத்தை நோக்குவோம்; இவர் தழுவிய நூல்களுள் ஒன்றாகிய பாலபாரதம் இயற்றிய அகஸ்திய பட்டர் தெலுங்கு தேசத்தில் அரசாண்ட காகதீயப் பிரதாப ருத்திரனுடைய காலத்தில் (கி.பி. 1232-1323) இருந்தவர் என்று ஆராய்ச்சியாளர் துணிகின்றனர். எனவே, வில்லி இக்காலத்திற்குப் பிற்பட்டவர் என்பது போதரும்.

'நான்காம் சங்கம் என முச்சங்கத் தண்டமிழ் நூல் தலைகண்டான்' என்று வரந்தருவாரால் பாயிரத்துள் (18) சிறப்பிக்கப் பெறும் ஆட்கொண்டானை இரட்டைப் புலவரும் பாடியுள்ளனர். எனவே, ஆட்கொண்டான் வில்லிபுத்தூரரைத் தவிர வேறு பல புலவர்களின் மதிப்புக்கும் உரியவனாய் விளங்கியிருக்கின்றான். இரட்டையர்களால் பாடப்பெற்ற மற்றொருவன் இராசநாராயண சம்புவராயன் என்பவனாவன். இவன் கி.பி. 1331 முதல் 1383 வரை ஆட்சி புரிந்தான் என்று சாசன ஆராய்ச்சியாளர் கூறுவர். எனவே, வரபதியாட்கொண்டானும் வில்லியும் இக்காலப் பகுதியைச் சார்ந்தவர் என்றும், வில்லி 14-ஆம் நூற்றாண்டுப் புலவராவர் என்றும் கொள்ளலாம்.

IX

வியாச பாரதம் பதினெட்டுப் பருவங்களைக் கொண்டு மிக விரிந்த நூலாய் உள்ளது. அதில் பாரதக் கதையோடு எத்தனையோ கிளைக் கதைகளும் வேறு பல இடைப்பிறவரல்களும் உள்ளன. அதனை முற்றக் கற்றுப் பாரதக் கதையைப் புரிந்து கொள்ளுதல் ஓரளவு கற்றோருக்கே அத்துணை எளிய செயலன்று. ஆகவே, பாரதக் கதையை யாவரும் எளிதில் உணருமாறு சுருக்கமாகச் செந்தமிழில் சந்த விருத்தத்தில் அமைக்க முற்பட்டுள்ளவர் வில்லியே. பாரதப் போர் முடிவது வரையிலுள்ள கதைப் பகுதி மட்டுமே இவர் கூறியுள்ளார்.

இருக்கு ஆதி மறை மொழிந்தோன் இயம்பிய இப்
    பெருங் கதையைப் பலரும் கேட்ப,
சுருக்காகப் புராண முறை சொல்லுக என்றலின்,
    இவன் சொல்லலுற்றான்

என்ற பாயிரச் செய்யுட் பகுதி (23) ஆட்கொண்டான் பாரதத்தைச் சுருக்கிப் புராண முறையில் அருளுமாறு வேண்டிக்கொண்டதாகவே கூறுகிறது. அதற்கு இசையவே வில்லியும் தமது நூலை யாத்தனர் என்பது தோன்றுகிறது. பாரதத்தைச் சுருக்கித் தந்தமை குறித்துப் புலவர்புராணத்தில் (வில்லிபுத்தூரர் சருக்கம்),

    காவியப் புலமை வாய்ந்தோர் கணக்கு இல் பற்பலர் ஆனாலும்,
    தா இல் சீர் வில்லிபுத்தூர்த் தமிழ்ப் புலவரை ஒவ்வாரே!       (16)

என்றும்,

இருந்ததற்கு ஒருபாட்டு, அப்பால் எழுந்ததற்கு ஒரு பாட்டு, ஓதிப்
பெருந் தொகைப் படுத்துவாரைப் பேதையர் வியந்து கொள்வார்;
மருந்து உறழ்கவி ஒன்றால் பல் வான் பொருள் தெளிவாச் சொல்லும்
திருந்து இயல் பாரதச் சீர் தெரிபவர் சிலர்தாம் அன்றே'       (17)

என்றும் முருகதாச சுவாமிகள் வில்லியைப் புகழ்ந்துள்ளார். இவர் குறித்தவண்னமே ஒரு பாடலில் சில வரலாறுகளை அழகாக அமைத்துள்ளார் வில்லி; பல பொருள்களைத் தெளிவுற ஒரு பாடலில் அடக்கிப் பாடும் திறம் இவருக்கு இயல்பாய் அமைந்துள்ளது. இவர் சில செய்திகளை முன்னர்க் கூறவேண்டுமிடத்துக் கூறாது, மேல் நிகழும் நிகழ்ச்சியோடு பிணைத்துப் பின்னர்க் காட்டியும், முன் ஓர் இடத்துக் குறிப்பாகச் சுட்டியதைப் பின்பு மற்றோரிடத்தில் விளக்கியும் கதையை விடாது கொண்டு செல்கின்றார். விளக்கமாக வருவிக்கவேண்டிய இடங்களை இவர் விட்டுவிடவும் இல்லை. அவசியமாக கதைப் பகுதிகளை எல்லாம் விடாது தொடர்புபடுத்தி, சுமார் 4,000 பாடல்களிலே மாபாரதக் கதையை வில்லி தந்தது மிகவும் போற்றுதற்குரியது.

வில்லியும் வியாசரைப் போலவே பதினெட்டுப் பருவங்களையும் பாடினர் என்றும் பிற்பகுதி காலவெள்ளத்தில் மறைந்துபட்டது என்றும் சிலர் கருதுகின்றனர். இவர்கள் இதற்கு ஆதாரமாகக் காட்டும் பாடல் வருமாறு;

கலியுக வியாதன் சொல்லக் கணபதி எழுது பாடல்
பொலிவுறு தமிழின் ஆறாயிரம் என விருத்தம் போற்றிச்
சலிவு அறு வில்லிபுத்தூர் இறைவனாம் சார்வ பூமன்
ஒலி கெழு மறையோர் கோமான் உயர்ந்தவர் உவப்பச் சொன்னான்.


இத் தனிப்பாடல் பாரதம் முழுவதையும் ஆறாயிரம் பாடல்களில் வில்லி செய்தனர் என்று குறிக்கின்றது.

அப்படிச் சிறிதுநாள் அங்கு அவன் வசத்தினரா வைகி,
முப்பழச் சாறும், பாகும், முதிரவே அட்ட பாலும்,
ஒப்பவே வண்ணப் பாட்டும் உடனுடன் கலந்து பாடி,
எய்ப்பு அறு கவிகள் ஆறாயிரம் என முடித்திட்டாரே.

என்று ஆறாயிரம் பாடல் பாடியதாகப் புலவர் புராணமுடையாரும் கூறுகின்றார். இவர் மேலே காட்டிய தனிப்பாடலை ஆதாரமாகக் கொண்டு மொழிந்தார் என்றே தோன்றுகிறது. பரிசோதித்த பாரத ஏடுகள் பலவற்றில் இத்தனிப்பாடல் காணப் பெறவில்லை. ஒருசில ஏடுகளிலேதான் இப்பாட்டும் வரந்தருவார் பாயிரத்துடன் கலந்து வந்துள்ளது. அச்சுப்பிரதிகளில் மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பைத் தவிர வேறு பதிப்புக்களில் இப்பாடல் தரப்பெறவில்லை. எனவே, இதனை உறுதியான ஆதாரமாகக் கொள்ளுதற்கு இல்லை.

    மேலும், வில்லி பாரதத்தின் இறுதிப் பாடலில் வரும் 'கனைகடற் பார் அளித்து, அவரும் அந் நகரில் அறநெறியே கருதி வாழ்ந்தார்' எனவரும் ஈற்றடிக்கு, 'கனை கடற்பார் அளித்து, அவரும் அந் நகரில் வாழ்ந்த செயல் கழறுவோமே' என்றொரு பாடபேதம் உளதாகக் காட்டுகின்றனர். இதனால் பிற்பகுதியையும் வில்லி பாடி இருக்கவேண்டும் என்று எண்ணுவர். பாடபேதத்தைக் கொண்டு மட்டும் துணிதல் இயலாது. இப்பொழுதும் நூலின் பின் இணைப்பாக, இரண்டொரு ஏடுகளில், 'மாதர்கள் களம் புகுந்து வான் அடைந்த சருக்கம்', 'முடி புனைச் சருக்கம்', 'முடி சூட்டுச் சருக்கம், 'மௌவி சூட்டுச் சருக்கம்' என்ற பெயர்களில் வேறு வேறு பாடல்கள் காணப்பெறுகின்றன. இவற்றை வில்லி வாக்கு என்றல் சிறிதும் ஒவ்வாது. இவ்வாறு கதையை வளர்த்து, கம்பன் திருமுடி சூட்டுப் படலம் அமைத்ததுபோல பாடமே ஈற்றடியில் காணும் பாடபேதம் என்பது மனம்கொள்ளத்தகும். 'பாரத சம்பு' முதலிய நூல்களிலும் போருக்குப் பிந்திய கதைப் பகுதி காணப்படவில்லை. இவ்வாறு பலவற்றையும் சிந்திக்கும் காலத்து, போர்ப் பகுதியோடு வில்லி தம் பெரு நூலை முற்றுவித்தார் என்று கொள்வதே உண்மை நிகழ்ச்சியாகும்.

வில்லி பாரதத்திற்குப் பல பதிப்புகள் வந்துள்ளன. இவற்றுள் முற்பட்டனவாக்க் கருதப்படுவன ஆகிய ஆறுமுகநாவலர் பதிப்பும் கோமளபுரம் இராசகோபாலப் பிள்ளை பதிப்பும் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளி வந்தன. ஏட்டுப் பிரதிகள் ஒன்றிலும் காணப்பொறாத பல செய்யுட்கள் இவர்கள் பதிப்பில் உள்ளன. எனவே, இவை பிரதிகளின்படி நன்கு பரிசோதித்து வெளியிடப் பெற்றனவாக எண்ணக்கூடவில்லை. அடுத்து, மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பைக் (1907) கூறலாம். பதினான்கு பிரதிகளைக் கொண்டு சேற்றூர் ரா.சுப்பிரமணியக் கவிராயரால் பரிசோதிக்கப்பெற்றது இப் பதிப்பு. முக்கியமான பாடவேறுபாடுகளும் சில பிரதிகளில் காணப்பெறாத செய்யுட்கள் முதலியன பற்றிய குறிப்புக்களும் அங்கங்கே அடிக்குறிப்பில் தரப்பட்டுள்ளன. நூல் முழுமைக்கும் அரும்பதவுரை சிறந்த முறையில் உள்ளது. தவிரவும் விஷய சூசிகை, அபிதான அகராதி, தொகை அகராதி என்னும் தலைப்புக்களில் தரப்பெற்றுள்ள பொருள்களும் நூலை ஆராய்வார்க்கு அவசியமான குறிப்புக்களாகும். இங்ஙனம் பல சிறப்புக்களையும் பெற்று விளங்கும் இப் பதிப்பு மூலப்பதிப்புக்களுள் முதன்மையாக வைத்து எண்ணத் தகுவது.

இனி, தனிப்பட எடுத்துக் கூறத் தக்கது வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியரின் உரைப் பதிப்பு. வில்லி பாரதத்தின் பெரும்பான்மைப் பகுதிகள் வை.மு. சடகோப ராமாநுஜாசாரியராலும், சே. கிருஷ்ணமாசாரியராலும் உரைவகுக்கப் பெற்றுப் பகுதி பகுதியாக முன்னரே வெளிவந்துள்ளன. இவர்கள் உரை எழுதாத ஆதி பருவம், ஆரணிய பருவம், விராட பருவம் என்னும் பகுதிகளுக்கு வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர் உரை எழுதி முற்றுவித்து, முற்குறித்த இருவர் உரைகளையும் நன்கு பரிசோதித்து, பாரதம் முழுவதற்கும் உரை நூல் அச்சிட்டுள்ளார். பதவுரை, கருத்துரை, விளக்கவுரை முதலிய பலவும் கொண்டு விரிந்த உரைநூலாய் இது அமைந்துள்ளது. பாடல்களில் பயின்றுவரும் கதைகளை அங்கங்கே விளக்கி எழுதியதோடு வியாசபாரதம், பால பாரதம் முதலியவற்றோடுள்ள ஒற்றுமை வேற்றுமைப் பகுதிகளை ஆங்காங்கே விளக்கியுள்ளார். பாட வேறுபாடுகளை அந்தந்தப் பாடல்களின் கீழ்ச் சுட்டியதோடு பிரதிகளில் காணும் பிற வேறுபாடுகள் பற்றியும் சிற்சில இடங்களில் குறிப்புத் தந்துள்ளார். அரும்பத அகராதி, அபிதான சூசிகை அகராதி, ஆகியவற்றைப் பாடல் எண் குறிப்புடன் ஒவ்வொரு தொகுதியிலும் தந்திருப்பது இப் பதிப்பிற்குரிய ஒரு தனிச் சிறப்பு.

இங்கனமாக வெளிவந்துள்ள பதிப்புக்களில் மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பும், வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியரின் பதிப்புமே இந்தப்பதிப்பின் பரிசோதனைக்குப் பெரிதும் பயன்பட்டன. சென்னை அடையாற்றிலுள்ள மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை அரசாங்கச் சுவடி நிலையம், தஞ்சைச் சரசுவதிமகால், மதுரைத் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரத்திலுள்ள அரசாங்க நூல் நிலையம் ஆகியவற்றில் இப்பொழுது கிடைக்கும் சுவடிகள் ஒப்பு நோக்கப்பெற்றன. இதனால், நூல் அமைப்பிலும், சருக்கங்களின் வரிசைமுறையிலும் பாடல்களின் அடைவிலும் சிற்சில மாறுபாடுகள் காணப்பெற்றன. பாட ரூப பேதங்களின் விரிவு கருதி அவை இப் பதிப்பில் தரப்பெறவில்லை.

XI

நூற் பெயர் சில ஏடுகளில் குறிக்கப்பெறவில்லை. பெரும்பாலான ஏடுகளில் பாரதம், மகாபாரதம்என்னும் பெயர்களைத் தொடக்க முடிவுகளில் குறித்துள்ளனர். முற்பதிப்பாசிரியர்கள், 'வில்லிபுத்தூராழ்வார் இயற்றியருளிய மகாபாரதம், வில்லிபுத்தூராழ்வார் அருளிச்செய்த மகாபாரதம், வில்லிபுத்தூரர் இயற்றிய மகாபாரதம், பாரதம்-வில்லிபுத்தூராழ்வார் இயற்றியது' என்று இவ்வாறு நூல் முகப்பில் தந்துள்ளனர். மகாபாரதம் என்ற பெயர் முதல் நூலால் பெற்ற பெயர். ஆனால் இந் நூலை 'வில்லி பாரதம்' என்று குறித்தலே பெருவழக்காய்ப் புலவர்களிடையே பயின்று வருகிறது. தமிழிலுள்ள பிற பாரத நூல்களையும் பெருந் தேவனார் பாரதம், நல்லாப்பிள்ளை பாரதம் என்று இவ்வாறு ஆசிரியர் பெயருடன் இணைத்தே வழங்குகின்றனர். ஆகவே, 'கம்ப ராமாயணம்' என்பது போல 'வில்லி பாரதம்' என்பதே இப் பதிப்பில் நூற் பெயராகப் கொள்ளப்பட்டது.

    நூலாசிரியர் மகனார் வரந்தருவார் பாடிய 'சிறப்புப் பாயிரம்' எல்லாப் பிரதிகளிலும் நூல் தொடங்குவதற்கு முன்னாகவே உள்ளது. இப் பாயிரம் ஆசிரியரைப் பற்றியும் அவர் நூல் பாடிய காரணம் முதலியன பற்றியும் விளக்கிக் கூறும் ஒரு செய்யுள் முன்னுரையாய் உள்ளமையின், ஏடுகளில் காண்கின்றபடியே நூல்-முகப்பில் மேற்கொள்ளப்பெற்றது.

XII

அச்சுப்புத்தகங்களில் பருவப் பெயர் சுட்டியிருப்பதுபோல ஏட்டுப்பிரதிகளில் பருவப்பெயர்குறிக்கப்பெறவில்லை. இது முதல் நூலை ஒட்டிப் பதிப்பாசிரியர்கள் அமைத்துக் கொண்ட புத்தமைப்பே. பதினெட்டாம் போர்ச் சருக்கத்தின் பிற் பகுதிப் பாடல்களைப் பத்தாவது சௌப்திக பருவம் எனக் கொண்டிருத்தலும், இதில் செய்யுள் எண்ணிக்கை பதினெட்டாம் போர்ச் சருக்கத்தின் தொடர்ச்சியாய் 205 முதல் தொடர்ந்து செல்லுதலும் நோக்கின், மேற்கூறியதன் உண்மை புலனாம். எனவே, இப்பதிப்பில் பருவப் பெயர்கள் கொடுக்கப்படவில்லை.

சருக்க அமைப்பு, பாடல் தொகை, முதலியவற்றில் நூல் முதலலும், ஆரணிய பருவக் கதைப் குதியிலும     இந்த முதற் செய்யுள் அயன், அரி, அரன் மூவர்க்கும் பொதுவாய் அமைந்துள்ளது. பின் வரும் சருக்கங்களிலுள்ள வாழ்த்துப் பாடல்களோ திருமாலை பற்றியே கூறுகின்றன. பின் வரும் சருக்கங்களில் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இல்லாமலும் ஒருசில ஏடுகள் உள்ளன. இராசகோபாலப் பிள்ளை பதிப்பிலேதான் எல்லாச் சருக்கங்களுக்கும் கடவுள் வாழ்த்து உள்ளது. பிற்பதிப்புகளில் இடையிடையேில சருக்கங்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல் இல்லை. இங்கனம் விடுபட்ட இடங்களில் இராசகோபாலப் பிள்ளை கொடுத்துள்ள பாடலுக்குப் பிரதியாக ஒரு சில ஏடுகளில் வேறு பாடல்கள் காணப்படுகின்றன. இன்னும் சில ஏடுகள் ஒரு சருக்கத்திற்கு உரியதாகத் தந்துள்ள பாடலை வேறு சருக்கத்தின் வாழ்த்தாகவும் கொண்டுள்ளன. இவ்வகை மாறுபாடுகளினால், 'கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் யாவும் ஆசிரியர் பாடியவைதாமா'' என்னும் ஐயம் எழுகின்றது.

இனி, சருக்கங்களின் பெயர், அமைப்பு முதலியவற்றில் காணும் மாறுபாடுகளைக் கவனிப்போம். ஆரணிய பருவக் கதைப் பகுதியில் 'முண்டகச் சருக்கம்' என்பது 'புட்பயாத்திரைச் சருக்கம்' என்று அச்சுப் பிரதிகளில் உள்ளது. தாமரைப் பூவைக் கொணரவே வீமன் செல்வதாக இந்தச் சருக்கத்தின் கதை உள்ளது. இதை விளக்கும் வகையில் முண்டகச் சருக்கம் என்ற பெயர் பெரும்பான்மைப் பிரதிகளில் உள்ளமை கருதி, அப் பெயரே மேற்கொள்ளப்பெற்றது. இப் பருவத்தில் தரப் பெற்றுள்ள 'மணிமான் வதைச் சருக்கம்' பெரும்பான்மையான பிரதிகளில் இல்லை. முண்டகச் சருக்கத்தில் வரும் கதையே சில மாறுதல்களுடன் விரிவாக இதில் தரப் பெறுகிறது. ஆகவே, கூறியது கூறலாக வரும் இச்சருக்கம் நூலின் பகுதியாகக் கொடுக்கப்பெறவில்லை. இச் சருக்கத்தில் இறுதிப் பாடலாகப் பதிப்புகளில் காணும் 'அப்பொழுது வானுலகம்' என்னும் பாடல் மணிமான் வதை இன்றியுள்ள பிரதிகளில், சடாசுரன் வதைச் சருக்கத்தின் ஈற்றயல் பாடலாகப் உள்ளது. அது போன்றே இப் பதிப்பிலும் காணப்பெறும். ஆரணிய பருவத்தின் இறுதிச் சருக்கமாக அச்சுப் பிரதிகளில் காணப்பெறும் நச்சுப்பொய்கைச் சருக்கம் பல ஏடுகளில் சடாசுரன் வதைச் சருக்கத்தை அடுத்து உள்ளது. அவ்வாறே இப்பதிப்பிலும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. படை எழுச்சிச் சருக்கத்தின் பின், முகூர்த்தம் கேள்விச் சருக்கம், களப்பலியூட்டு சருக்கம், அணிவகுப்புச் சருக்கம் என்னும் மூன்று சருக்கங்கள் அச்சுப் பிரதிகளில் காணப்பெறுகின்றன. இவற்றுள் முகூர்த்தம் கேள்விச் சருக்கம் முதலிய மூன்றும் இன்றி, யாவற்றையும் படையெழுச்சிச் சருக்கமாகவே பல பிரதிகள் மேற்கொண்டுள்ளன. முகூர்த்தம் கேள்வி, களப்பலி, அணிவகுப்பு என்னும் மூன்றும் படையெழுச்சியின் அங்கங்களே. ஆதலின், இப் பதிப்பிலும் படையெழுச்சிச் சருக்கம் ஒன்றே கொள்ளப் பெற்றது.

XIII

நூல் இறுதியில் ஒரு சில ஏடுகளில் 'மாதர்கள் களம் புகுந்து வான் அடைந்த சருக்கம்' என்றும், முடி சூட்டுச் சருக்கம்' என்றும், 'மௌலி சூட்டுச் சருக்கம்' என்றும் வெவ்வேறு வகையில் பல பாடல்கள் உள்ளன. இவை அச்சுப்பிரதிகளில் இடம் பெறாதவை. இவற்றுள் மௌலி சூட்டுச் சருக்கம் என்பது சென்னை அரசாங்கச் சுவடி நிலையத்தின் தனி வெளியீடு ஒன்றில் (1949) வெளியிடப்பெற்றிருக்கிறது. இதற்கும் முடி புனை சருக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை. பெயர் ஒற்றுமை தவிர, பாடல்கள் எல்லாம் வேறு பட்டவை. இந்தச் சருக்கங்களும், மணிமான் வதைச் சருக்கப் பாடல்களும், பல பிரதிகளில் காணப்பெறாமலும் சந்தர்ப்பத்திற்கு ஒவ்வாமலும் அமைந்துள்ள பாடல்களும், 'மிகைப் பாடல்கள்' என்னும் தலைப்பின் கீழ் நூல் இறுதியில் அமைக்கப்பெற்றுள்ளன.

XIV

முந்திய பதிப்புக்களில் அரங்கசாமி நாயக்கர் பதிப்பில் மட்டும் நூல் முழுவதும் பாடல்கள் சீர் பிரித்துப் பதிப்பிக்கப்டிருக்கின்றன. வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர் பதிப்பில் ஒருசில பருவங்கள் சீர் பிரித்து அச்சிடப் பெற்றிருக்கின்றன. ஏனைய பதிப்புக்களில் அடிவரையறைப்படி பாடல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளனவே அன்றி, அடிகளினூடே இடைவெளி சிறிதும் விடப் பெறவில்லை. இம் முறைகளினால் பாரதப் பாடல்களைப் பொருளுணர்ச்சியோடு வாசிப்பது கற்றார்கே பெரிதும் இடர்ப்பாடு தருவது ஒன்றாம். இந்தப் பதிப்பில் பாடல்கள் சந்தி பிரித்து, ஏற்ற நிறுத்தற்குறியீடுகளுடன் தரப்பெற்றுள்ளன. கதைப்போக்கை விளக்கும் வகையில் தக்க தலைப்புகளும் இடையிடையே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றால் பாடல்களின் பொருள் முதலியவற்றை எளிதில் உணர்ந்துகொள்ளலாகும். நூல் முகப்பில் காணும் உள்ளுரைப் பகுதியில் தலைப்புகள் எல்லாம் ஒருசேரத் தரப்பெற்றுள்ளன. இவற்றைத் தொடர்ந்து வாசித்தால் வில்லியின் கதைப் போக்கு நன்கு தெளிவாம்.

XV

திருவாளர்கள் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, வி.மு. சுப்பிரமணியம், மு.சண்முகம் ஆகிய மூவரும் பிரதிகளுடன் ஒப்பு நோக்கி ஆராய்ந்து வில்லி பாரதத்தை அழகுறப் பதிப்பித்துள்ளார்கள். திருவாளர்கள் பெ.நா. அப்புஸ்வாமி, பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை, பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், பன்மொழிப் புலவர் வே. வேங்கடராஜுலு ரெட்டியார், கி.வா. ஜகந்நாதன், அ.ச. ஞானசம்பந்தன், சா. கணேசன், ஆகியோர் இப் பதிப்பு சம்பந்தமாகப் பற்பல ஆலோசனைகள் கூறியதோடு வேறு பல உதவிகளும் புரிந்தனர். இங்ஙனமாக, செவ்விய முறையில் இப்பதிப்பு வெளிவர உதவி புரிந்த அன்பர்கள் யாவர்க்கும் எங்கள் உளம் கனிந்த நன்றி உரியதாகுக.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:25:20(இந்திய நேரம்)