தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Document-மேல்



பதிப்புரை

இந்நூல் அருக சமயத்து அறிஞர் முனைப்பாடியார் என்பார் இயற்றியது. இருநூற்றிருபத்தாறு வெண்பாக்கள் கொண்டது. வெண்பாக்களின் அமைப்பும் பொருளும் அறிஞருள்ளத்தைக் கவரும் மாண்பின. அருகக் கடவுளும் அருக சமயமும் அருக ஆகமும் சிறப்பாகக் கொண்டுரைக்கும் வெண்பாக்கள் நீங்க, அறம் ஒழுக்கம் முதலியன கூறும் ஏனைய பாக்கள் செம்பாகமாய்ச் சுருங்கச் சொல்லல் விளங்கவைத்தல் முதலிய அழகு நிறைந்து சமய வெறுப்பின்றி எவரும் பயின்று மேற்கொள்ளத் தக்கனவாயிருக்கின்றன. உருவக முகத்தால் விளக்கியிருக்கும் பாடற் கருத்துக்கள் பசுமரத்தாணிபோல் மனத்திற் பதிந்து நிலைக்கும் பண்பு வாய்ந்தவை.

சங்கச் செய்யுள்கள் முதல் கம்பராமாயணம், நளவெண்பா முதலிய பிற்காலத் திலக்கியங்கள் வரை பன்னூல்களினின்றும் எடுத்த பாக்களின் தொகுப்பே புறத்திரட்டு. அதில் இந் நூலிற் காணும் வெண்பாக்களிற் சில காணப்படுகின்றன. இத்திரட்டு ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகட்கு முன் திரட்டப்பெற்றது. ஆகவே, இவ் அறநெறிச்சாரம் ஐந்நூறு ஆண்டு கட்கு முற்பட்டதொரு பழைய நூல்.
இந்நூல் மூலமட்டும் ஏட்டுச்சுவடியிலுள்ளபடி இற்றைக்கு முப்பத்து மூன்று ஆண்டுகட்கு முன்னர், திருசிரபுரம் நேஷனல் உயர்நிலைப்பள்ளித் தமிழ்ப்பண்டிதர் திரு. தி. ச. ஆறுமுக நயினார் அவர்களால் வெளியிடப்பெற்றுள்ளது. அவர்கள் பதிப்புக் குறிப்பில் “விரைவில் வெளியிட வேண்டி நேர்ந்தமையால் தக்காரெடுத்து ஒழுங்குபடுத்தி வெளியிடற்கு ஒரு துணையாக இது வெளியிடப் பெறுவதாயிற்று” என்று குறித்துள்ளார்கள்.

பின்னர், சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தலைமைத் தமிழ்ப்புலமைச் செல்வர் திருமணம். செல்வக்கேசவராய முதலியார் எம். ஏ., அவர்கள், இந்நூலின் செய்யுளமைதி, நீதி, உருவக வுயர்வு முதலியன கண்டு மகிழ்ந்து, யாவரும் விரும்பி ஏற்றுப் பயின்று அயின்று மகிழ்ந்திடுமாறு நாலடியார்போற் பாகுபடுத்தி வெளியிட முயன்று, அருங்கலச் செப்பின் றுணைகொண்டும், இந்நூல் பதினொன்றாஞ் செய்யுளாகிய “காட்சி யொழுக்கொடு ஞானந்தலை நின்று” என்னுஞ் செய்யுளின் பகுப்புக் கிணங்கவும் பாகுபடுத்தி, அருஞ்சொற் குறிப்புடனும் சில மேற்கோள்களுடனும் 1905 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். குறித்த இவர்கள் வெளியீடு, பின்னிரண்டு பதிப்புகளும் பெற்றுள்ளன.

அருகசமய அருங்கொள்கை விளக்கத்துடன் நல்லொழுக்கம், இல்லறம், துறவறம் ஆகிய இவற்றி னியல்புகளை எளிய தீந்தமிழில் விளக்கி வீடெய்து மாற்றையும் அடைவிக்கும் இந்நூற்கு, காலத்தில் வேண்டப்பெறும், பதவுரை, குறிப்புரை, அருஞ்சொல் விளக்கம் முதலியவற்றை அமைத்தும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்போற் பள்ளி மாணவரும் பிறரும் பயின்று தேர்தற்குத் துணையாக வெளியீடொன்றை விரைவில் வெளியிட்டுதவும்படி தமிழறிஞர்கள் பலர் கேட்டுக்கொண்டார்கள். அதற்கிணங்க இதுகாறும் வெளியிடப்பெற்ற மூலநூல்களையும் ஏட்டுச் சுவடிகளையும் ஒப்புநோக்கிச் சிறந்த மூலபாடங் கண்டோம்; பதவுரை விளக்கவுரை முதலியன எழுதி முடித்தற்கு ஏற்றவர் சேலம் மாவட்டம், இராசிபுரம், நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியர் திரு. ஆ. பொன்னுசாமிப் பிள்ளை அவர்கள் என்பதை மேற்படி மாவட்டக் கல்வித்துறைத் தலைவரும், நம் கழக வாயிலாகத் தம் அரும்பெறற் புலமை விளக்கும் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிட்டு வருபவருமாய் முன் விளங்கிய காலஞ்சென்ற திரு. T.B. கிருஷ்ணசாமி முதலியார், எம்.ஏ., பி.எல்., அவர்கள் வாயிலாக அறிந்து அவர்களைக் கொண்டே பதவுரை முதலியன எழுதி வாங்கலானோம்.

எளிதில் உரைத்தெளிவு காணமுடியாத இந்நூல் 44, 47, 127, 131, 147, 185, 210 ஆம் செய்யுள்களுக்கு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள், திருச்சி, துரைத்தன மகம்மதிய உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் திரு. அ. நடராச பிள்ளை யவர்கள் ஆகிய இவ்விருவரும் வேண்டும் மேற்கோள்களுடன் உரை விளக்கம் செய்து உதவியுள்ளார்கள்.
இந் நூற் பொருட்பாகுபாடு திருமணம், செல்வக்கேசவராய முதலியாரவர்கள் பதிப்பு முறையைத் தழுவியிருப்பினும், செய்யுட்கள் தனித்தனி நுதல்பொருள் அமைப்பைக் கொண்டிலங்குவது பயில்வார்க்கு இன்பம் பயப்பதாம். குறிப்பு மொழிவழிப் பொருள் நயம் தோற்றுவிக்கும் ஆசிரியரின் ஆற்றல் 207, 208 ஆம் செய்யுட்கள் முதலியவற்றால் விளங்கும். இப் பதிப்பில் அருக சமயத் துணிபுகள் கொண்டு எளிதில் பொருட்டுணிபு விளக்கம் பெறாதிருக்கும் ஆறு செய்யுட்கள் இறுதியில் மூலபாடமாக இணைக்கப்பெற்றிருக்கின்றன.

கழகம் ஏற்பட்ட காலத்திலிருந்தே சங்கமருவிய நூல்களில் பதினெண் கீழ்க்கணக்கைத் திருத்தமான முறையிற் பதிப்பித்து வெளியிடவேண்டித் தாம் அரிதின் ஆராய்ந்து எழுதிவைத்த கையெழுத்துப் படிகளைக் கழகத்திற் குதவி ஊக்கிவந்த தமிழ்ப்பெரும் புலவர் திரு. தி. த. கனகசுந்தரம் பிள்ளை, பி. ஏ., அவர்கள் மூலப்படி யொன்றும் இந்நூல் அச்சிட்டு முடியுங்காலத்தில் ஒப்புநோக்கக் கிடைத்தது. அதிற் கண்ட பாட வேற்றுமைகளும் அடிக்குறிப்பாகச் சேர்க்கப்பெற்றுள்ளன; இதற்கு முந்திய பதிப்புக்களிற் காணாத செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை இந்நூலிற் சேர்க்கப்பட்டுள்ளமை பயில்வார்க்கு உறுதுணையாம். பதவுரையிலும் மூலபாடத்திலும் சிறந்த விளக்கக் குறிப்புகள் கிடைக்குமாயின், அடுத்த பதிப்பை இதனினும் திருத்தமாகப் பதிக்க விரும்புகின்றோம்.

தமிழ்மக்கள் இத்தகைய வெளியீடுகளைப் போற்றி ஊக்க முன் வருவார்களாக.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 03:01:58(இந்திய நேரம்)