Primary tabs
பாண்டிய நாட்டிலேயுள்ள ஸ்ரீ வைகுண்டத்திலே சைவ வேளாளர் குலத்திலே சண்முக சிகாமணிக் கவிராயரும் அவர் மனைவியார் சிவகாமி அம்மையாரும் செய்த தவப்பயனாக நன்மகனாரொருவர் பிறந்தார். அம் மகனார் ஐந்தாண்டளவும் பேசாதிருந்தமை கண்ட பெற்றோர் திருச்செந்தூர் சென்று முருகக்கடவுளை வழிபட, அப்பெருமான் அருளால் அம் மகனார் ஊமை நீங்கிச், சைவ சித்தாந்த சாத்திரசாரமாய் விளங்கும் `கந்தர்கலி வெண்பா'ப் பாடலை அப் பெருமான்மீது புகழ் நூலாக அருளிச்செய்தார். முருகக் கடவுள் அவர் கனவிலே குமர வடிவங்கொண்டு தோன்றி, `நீ குமரகுருபானாக' என்றருளியதால், அன்று முதலாக அவர் குமரகுருபரரென அழைக்கப்பட்டார்.
முருகக் கடவுள் ஆணைப்படி குமரகுருபரர் ஒரு சமயம் வடதிசை செல்லும்போது மதுரையில், `மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்' பாட, அக்காலத்தரசராகிய திருமலை நாயகர் மீனாட்சியம்மையருளால் அதனைத் தெரிந்து அப் பிள்ளைத் தமிழை அம்மை திருக்கோயிலின்முன் அரங்கேற்றுவித்தார். அப்பிள்ளைத் தமிழின், வருகைப் பருவத்து ஒன்பதாவது செய்யுளாகிய, `தொடுக்குங் கடவுட் பழம்பாடற் றொடையின் பயனே' என்று தொடங்குஞ் செய்யுளுக்குக் குமரகுருபரர் பொருளுரைக்கும்போது மீனாட்சியம்மையார் அருச்சகரின் பெண் போலத் திருக்கோலங்கொண்டு அரசர் கழுத்தி லணிந்திருந்த மணிவடத்தைக் கழற்றிக் குமர குருபரர் கழுத்திலிட்டு மறைந்தருளினர், குமரகுருபரர் பின்னர் `மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம்' என்பவற்றையும் அங்கே இயற்றியருளினார்.
பின்பு திருவாரூர் சென்று தியாகராசப் பெருமானை வணங்கித் `திருவாரூர் நான்மணிமாலை' என்னும் நூலைக் குமர குருபரர் பாடினார். அப்பால், தருமபுரஞ் சென்று அங்கே நான்காவது குருவடிவா யெழுந்தருளியிருந்த மாசிலாமணிதேசிகரிடம் ஞானவுரை பெற விரும்பி அவராணைப்படி சிதம்பரஞ் செல்லப் புறப்பட்டு வைத்தீசுவரன் கோவில் அடைந்து குமரக்கடவுள்மீது `முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்' என்னும் நூலை அருளிச் செய்தார். பின் சிதம்பரஞ் சென்று நடராசப்பெருமான் மீது ழுசிதம்பர மும்மணிக் கோவை' `சிதம்பரச் செய்யுட்கோவை' என்னும் இரண்டு நூல்களையும் அம்மைமீது `சிவகாமியம்மை இரட்டை மணிமாலை' என்னும் நூலையும் தொடுத்தருளினார். பின்பு அவர் தருமபுரஞ் செல்ல, மாசிலாமணி தேசிகர் அவருக்கு ஞானவுரை அருளினார். அக் கருணையை வியந்து தம் ஆசிரியர்மீது, `பண்டார மும்மணிக் கோவை' என்னும் நூலைப்பாடி அதனை அவ்வாசிரியர்க்குக் காணிக்கையாகச் செலுத்தினார்.
பின்னர் அம் மாசிலாமணி தேசிகர் ஆணைப்படி தமக்குத் திருமலை நாயகராற் கொடுக்கப்பட்ட பொருளைக் கொண்டு காசிக்குப் போய், விசுவநாதப் பெருமான்மீது `காசிக்கலம்பகம்' என்னும் நூலை இயற்றினார். அந்நாட்டு மகம்மதிய அரசனிடம் மடங்கட்ட இடம்பெற விரும்பிக் கலைமகள்மீது `சகலகலாவல்லி மாலை' பாடி ஏத்தி அப்பிராட்டியார் அருளால் இந்துஸ்தான் மொழியை யறிந்து, அரசனிடம் சென்று பல அருஞ்செயல்கள் செய்து அவ்வரசனால் இடம் தரப்பெற்றுப் பல சைவ மடங்களும் கேதாரநாதர் திருக்கோயிலும் அமைத்தார்.
பின்னர் மூன்றுமுறை தருமபுரம் வந்து தம் ஆசிரியரை வழிபட்டுப் பின்னும் காசிக்குப்போய்ச் சைவசமய வளர்ச்சி கருதிப் பல நற்றொண்டுகள் புரிந்து விளங்கி, முடிவில் அத் திருப்பதியிலேயே ஒரு வைகாசித் திங்கள் தேய்பிறை மூன்றா நாளில் வீடெய்தினார்.