ஆகுபெயர்
பாடம்
Lesson

தேர்த் திருவிழா
'கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. ஊரே தேர்த் திருவிழா பார்க்க வந்தது' என்ற தொடரில்
'ஊரே வந்தது’ என்பதைக் கவனிக்க.
ஊர் வரவில்லை. ஊரில் உள்ள மக்கள்தான் திருவிழாவிற்கு வந்தனர். ஊர் என்ற இடப்பெயர் ஊரில் உள்ள மக்களைக் குறிப்பதாக ஆகிவந்தது. எனவே இது ஆகுபெயர் ஆகும். இவ்வாறு ஒன்றன் பெயர் மற்றொன்றனுக்கு ஆகிவருவது ஆகுபெயர் எனப்படும்.
ஊர் என்ற இடம் ஊரில் உள்ள மக்களுக்கு ஆகி வந்ததால் இடம் + ஆகுபெயர் = இடவாகுபெயர் எனப்படும்.
ஆகுபெயர் பல வகைப்படும். அவற்றில் பின்வரும் ஆறும் முக்கியமானவை. அவை,
(1) பொருளாகு பெயர்
(2) இடவாகு பெயர்
(3) காலவாகு பெயர்
(4) சினையாகு பெயர்
(5) பண்பாகு பெயர்
(6) தொழிலாகு பெயர்
என்பனவாகும்.
• பொருள் ஆகுபெயர்

வாழை மரம்

வாழைப் பழங்கள்
வாழை இனிப்பானது.
'வாழை' என்பது வாழைமரம் முழுவதையும் குறிப்பது. ஆனால் இங்கு இனிப்பானது எனச் சொல்வதன் மூலம் வாழைப் பழம் என்பது தெரிய வருகிறது. எனவே வாழை என்ற முழு மரத்தையும் குறிக்கும் சொல் வாழைப் பழத்திற்கு மட்டும் ஆகி வருவதால் இது பொருள் ஆகுபெயர் ஆகும்.
• இட ஆகுபெயர்

பட்டுச்சேலை
சேலைகளில் காஞ்சிபுரம் மிக அழகு.
இங்குக் காஞ்சிபுரம் என்பது காஞ்சிபுரம் என்ற இடத்தில் தயாராகும் பட்டுச் சேலைகளைக் குறிக்கிறது. இடத்தின் பெயர் பொருளுக்கு (சேலைக்கு) ஆகிவருவதால் இது இடவாகு பெயர் ஆகும்.
• கால ஆகுபெயர்
![]() |
![]() |
|
டிசம்பர் பூத்தது |
பூக்களில் டிசம்பர் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் பூக்கும்.
இங்கு டிசம்பர் என்ற ஆங்கில மாதத்தின் பெயர் அம்மாதத்தில் பூக்கும் பூவிற்கு ஆகி வந்ததால் இது காலவாகு பெயர் ஆகும்.
• சினை ஆகுபெயர்
தலைக்கு ஒரு மாம்பழம் கொடு.
இதில் 'தலை' என்பது மனிதன் என்பதைக் குறிக்கிறது. தலை என்பது ஒரு (சினைப் பெயர்) உறுப்பின் பெயர். அது முழு உருவத்திற்கும் ஆகி வருவதால் (சினையே ஒரு முழுப் பொருளுக்கு ஆகிவருவதால்) இது சினை ஆகுபெயர் எனப்படுகிறது.
• பண்பாகு பெயர்
வீட்டிற்கு வெள்ளை அடித்தான்.
இங்கு வெள்ளை என்பது ஒரு பொருள் அன்று, ஒரு பண்பு. வீட்டிற்குச் சுண்ணாம்பு அடித்தான் என வர வேண்டும். அதற்குப் பதிலாகச் சுண்ணாம்பின் பண்பான வெள்ளை நிறம் சுண்ணாம்பு என்பதற்குப் பதிலாக ஆகிவருவதால் இது பண்பாகு பெயர் எனப்படுகிறது.
• தொழில் ஆகுபெயர்
வற்றல் நன்றாக இருக்கும். வற்றல் என்பது ஒரு தொழில். அதாவது காயில் உள்ள நீரெல்லாம் வற்றச் செய்ததால் அது வற்றல் என்ற பெயர் பெற்றது. வற்றல் என்னும் தொழில் அந்தப் பொருளைக் குறிப்பதால் இது தொழில் ஆகுபெயர் ஆனது.