முகப்பு

5.1 நிகண்டுகள், அகராதிகள், கலைக்களஞ்சியம்

நிகண்டுகள், அகராதிகள், கலைக்களஞ்சியம்

இந்தப் பகுதியில் நிகண்டுகள், அகராதிகள் மற்றும் கலைக்களஞ்சியம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

'தமிழ்மொழியில் அகராதியே இல்லை' என்னும் தவறான கருத்து பரப்பப்பட்டுள்ளதோடு, அகராதி இல்லாக் குறையைப் போக்கச் 'சதுரகராதி' எழுதப்பட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.

‘அகராதி’ எனும் சொல் ‘அகரத்தை, ஆதியாகக் கொண்ட நூல்' எனும் பொருள்படும் ஆங்கிலச் சொல்லான 'Dictionary' என்பதற்கு இணையாகத் தமிழில் ஆக்கப்பட்ட சொல். இச்சொல் தமிழில் ஆக்கப்பட்டிருப்பினும், இச்சொல்லின் பின்பகுதியான 'ஆதி' என்பது வடசொல் சார்பானது எனக் கருதி, அகராதி என்னும் சொல்லுக்கு இணையாக அகராதி ‘அகரமுதலி’ எனும் சொல் ஆக்கப்பட்டுள்ளது. அகரத்தை முதலாகக் கொண்டு, மொழியிலுள்ள சொற்களைத் தொகுத்துப் பொருள் தரும் போக்கில் நூல்கள் அக்காலத்தில் இல்லையெனினும், சொற்களைப் பல்வேறு வகைக்குள் உட்படுத்தி அவற்றிற்குப் பொருளைப் பாடல் வடிவில் தந்த நூல்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தொடங்கி, 'நிகண்டுகள்’ எனும் பெயரில் தமிழில் எழுந்துள்ளன. அறியப்படும் நிகண்டுகளில் முதல் நூல் சேந்தன் திவாகரம். இதனுள் “தெய்வப் பெயர்த் தொகுதி' முதலாக, 'பல்பொருள் கூட்டத்து தொகுதிகள் உள்ளன. இவற்றுள் ஏறக்குறைய 9500 சொற்களுக்குப் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது.

பிற நிகண்டுகளும் பெரும்பகுதி திவாகரத்தை யொட்டியும் சிறுபகுதி மாறுபட்டும் உள்ளன. நிகண்டுகளுள் தலை சிறந்ததாகக் கி.பி. 15ஆம் நூற்றாண்டினரான மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டைக் குறிப்பர்.

நிகண்டுகளைப் போலப் பிற்காலத்தில் தோன்றி வளர்ச்சி பெற்றது அகராதியாகும். தமிழில் தோன்றிய முதல் அகராதி சதுரகராதி என்பர். 1670ஆம் ஆண்டில் ஆந்தம் தெ. பிரோயன் என்பவர் தமிழ் போர்ச்சுக்கீசிய அகராதியை வெளியிட்டார் (இரண்டாவது உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடு, கையேடு - ப. 53) எனவும் அறிய முடிகிறது.

1732ஆம் ஆண்டு பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் சதுரகராதியை வெளியிட்டுள்ளார். 'சதுர்' என்பது நான்கு என்னும் பொருள் தரும் சொல். சதுரகராதியில் பெயர், பொருள், தொகை, தொடை என நால்வகைச் சொற்களுக்குத் தனித்தனியாகப் பொருள் கொடுக்கப்பட்டுள்ளதால் அது சதுரகராதி எனப்பட்டது. இதில் 12 ஆயிரம் சொற்களுக்கு மேல் பொருள் விளக்கப்பட்டுள்ளது.

சதுரகராதிக்குப் பின்னர் வீரமாமுனிவரால், 'தமிழ் இலத்தீன் அகராதி', 'இலத்தீன் - தமிழ் அகராதி', 'தமிழ் பிரெஞ்சு', 'தமிழ் - ஆங்கிலம்', 'போர்ச்சுக்கீசியம் - இலத்தீன் 'தமிழ்', 'வட்டார வழக்கு அகராதி' ஆகியனவும் தொகுக்கப் பெற்றன. பின்னர், 'தமிழ் - ஆங்கிலம்', 'ஆங்கிலம் - தமிழ் அகராதிகளும் பெருமளவில் வெளிவந்தன. 1842இல் தமிழ் தமிழ் அகராதி முதன் முதலில் வெளியிடப்பட்டது. அறுபதினாயிரம் சொற்கள் இடம்பெற்றுள்ள அந்த அகராதி, ஸ்பால்டிங் என்னும் பாதிரியாரால் தொகுத்து வெளியிடப்பட்டது. தொடர்ந்து 1883இல் விசயரங்க முதலியார் என்பவரால் தமிழ் - தமிழ் மாணவர் அகராதி வெளியிடப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் ன் தொடக்கத்தில் நா. கதிரைவேற்பிள்ளை அகராதி வெளிவந்தது. தொடர்ந்து பல அகராதிகள் வெளிவந்தாலும் தற்போது சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சாந்தா பப்ளிஷர்ஸ், மணிவாசகர் நூலகம், க்ரியா போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள அகராதிகளே கிடைக்கின்றன. இவ்வகராதிகளின் ஒன்றோ, பலவோ தமிழாசிரியருக்கு உதவும் பொதுப் பார்வை நூல்களாகும்.

தமிழ் - தமிழ் அகராதிகள் மூலம் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய சொற்களுக்குப் பொருள்களையும், சொல் இணக்கத்தையும் தெளிவாக அறிய முடியும்.

இவை தமிழாசிரியருக்கு மிகச் சிறந்த செய்திகளைத் தரவல்லன. தமிழில் பெருமளவிலான கலைக் களஞ்சியங்கள் வெளிவரவில்லை. ஆங்கில மொழியில் ஒவ்வொரு துறைக்கும் கலைக் களஞ்சியங்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழில் வெளியிடப்பட்டுள்ள கலைக் களஞ்சியங்களைப் பார்ப்பவரின் எண்ணிக்கை மிகக் குறைவு. அபிதான சிந்தாமணி, அபிதான கோசம் என்பனவும் தமிழாசிரியருக்குப் பயன் தரக்கூடிய கலைக் களஞ்சிய வகைகளாகும்.

• தமிழ்க் கலைக் களஞ்சியம்

தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் தமிழ்க் கலைக் களஞ்சியம் 10 தொகுதிகளாக வெளியிடப்பட்டது. 10ஆவது தொகுதி 1968ஆம் ஆண்டும், பிற தொகுதிகள் அவ்வாண்டுக்கு முன்னரும் வெளியிடப்பட்டன. அகர வரிசையில் சிறப்பு வாய்ந்த பல்வேறு பெயர்கள், பண்புகள், நிகழ்ச்சிகள் பற்றிய விரிவான விளக்கங்களைக் கலைக் களஞ்சியம் தருகிறது.

எ.கா :

சீகன் பால்க் (Ziegenbalg 1683 - 1719)

டேனிஷ் மிஷனைச் சேர்ந்த ஜெர்மானியப் பாதிரி : லியூசேயாவில் (Lusatia) 1683இல் பிறந்தார். டென்மார்க் நாட்டு மன்னர் ஆணையின் பெயரில் இவர் 1706இல் இந்தியாவுக்கு வந்து 1714 வரை தங்கியிருந்தார். மீண்டும் 1716 இல் இந்தியாவுக்கு வந்து 1719இல் தரங்கம்பாடியில் காலமானார். இவர் தமிழ் இலக்கணம் (Grammatical Tamulica) ஒன்றை வெளியிட்டார். கிறித்துவ வேத நூலாகிய பைபிளை இவரும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். பார்க்க : பைபிள் 7-64.

இதுபோன்றே சான்றோர்கள், இலக்கியங்கள், வரலாற்று நிகழ்ச்சிகள் போன்றன பற்றியும் அரிய தகவல்களை விளக்கமாகத் தரும் கலைக்களஞ்சியத் தொகுதிகள் தமிழாசிரியர்களுக்குரிய சிறந்த பார்வை நூல்களாகும்.

தமிழாசிரியர், தேவைக்கேற்ப பல கலைக் களஞ்சியங்களைப் படித்து அரிய தகவல்களை மாணவர்களுக்குக் கூற வேண்டும். கலைக் களஞ்சியத்துள் அரிய படங்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றையும் கற்பிப்பில் பயன்படுத்தலாம்.

• அபிதான சிந்தாமணி

தனி ஒருவரின் அரிய முயற்சியால் 1910ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்க் களஞ்சியம் அபிதான சிந்தாமணி. இதைப் படைத்து வெளியிட்டவர் பெருமைக்குரிய ஆ. சிங்கார வேலு முதலியார்.* 1600க்கு மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்நூல், தமிழாசிரியர்கள் ஒவ்வொருவரும் கைக் கொண்டிருக்க வேண்டிய தகவல் பெட்டகமாகும்.

அபிதான சிந்தாமணியின் முதற் பதிப்பின் முன்னுரையில் ஆ. சிங்காரவேலு முதலியார் அவர்கள் கீழ்வரும் செய்தியைத் தருகிறார்.

Gentlemen and lovers of Tamil Literature.

I began to write this Abittana Chinthamani the Encyclopaedia of Tamil Literature some twenty years ago. For the materials of this book, I went to several places in Madras Presidencey and secured the needed information. This book does not treat a single subject but treats of many. It contains among other things.

  1. Biographical sketches of dieties, saints and illustrious personages.
  2. Description and explanattory notes on places of sanctity anna and
  3. antiquity.
  4. Explanation of illusions to Hindu mythology.
  5. Grammar, Literature and Logic.
  6. Generalogical, Geographical and Historical facts.
  7. Description of different systems of philosophy and religion.
  8. Description of the birth and growth of the Hindu sects and creeds that are Estimate.
  9. Genealogy of the principal characters that figure in our Mythology.
  10. Origin of precious stones.
  11. Physiognomy, Astrology and Medicine.
  12. History of illustrious Tamil Authors and Madathipathis.

தந்தை பெரியார் அவர்கள் தம் வாழ்க்கைக் குறிப்பில் அபிதான சிந்தாமணி பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவருடைய பரந்துபட்ட அறிவு வேட்கைக்குப் பெருமளவில் ஈடுகொடுத்த நூல் அபிதான சிந்தாமணி என இதன் அருமை பெருமைகளை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு குழுவின் இடையறாப் பணியால்தான் கலைக் களஞ்சியம் வெளிவர இயலும். ஆனால் அபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியார் எனும் தமிழாசிரியர் ஒருவரால் 20 ஆண்டு உழைப்பால் 1910ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது.

இதனுள் அகத்தியர் தொடங்கி வௌவால்வரை பல்வேறு செய்திகள் அரிய முறையில் கூறப்படுகின்றன.

அபிதான சிந்தாமணி குறிப்புகளுள் ஒன்று அட்ட வசுக்கள்

அனலன், அணிலன், ஆபத்சைவன், சோமன், தரன், துருவன், பிரத்தியூஷன், பரபாசன் முதலியோர். இவர்கள் பிரமன் புத்திரர்கள் எனவும் தக்ஷன் குமாரிகளாகிய பதின்மரில் வசு என்பவளுக்குப் பிறந்தார்கள் எனவும் கூறுவர்.

• உரைநூல்கள்

சங்க காலத்திலும், அதற்கு முன்பும் தமிழ் உரைநடை எவ்வாறு இருந்தது என்பதனை நாம் அறிய முடியவில்லை. இலக்கண, இலக்கிய நூல்களும், சமய நூல்களும் செய்யுள் வடிவிலேயே அமைந்திருந்தன. தமிழ் மொழி இலக்கிய வளம் மிகுந்தது. இலக்கண வரம்புடன் காலந்தோறும் வளர்ந்து வரும் இயல்புடையது. இலக்கண, இலக்கிய வளங்களைப் பெற்றிருப்பது போலவே நல்ல உரை நூல்களையும் பெற்றிருக்கிறது. இந்நூல்களைக் கற்றறிந்தவர் அந்நூலின் நுட்பங்களைக் கூறி வந்தனர். இவ்வாறு வாய்மொழியாகப் பல தலைமுறைகளாக வளர்ந்து வந்த உரை விளக்கத்தைச் சிலர் ஏடுகளில் எழுதி வைக்கத் தொடங்கினர். இலக்கியங்களைப் போலவே என்றும் அழியாத சிறப்புடைய உரைகளைப் படைத்து உரையாசிரியர் பலர். தமிழ் மொழியும், இலக்கியமும் உரையாசிரியர்கள் எழுதிய உரைகளால் வளர்ந்துள்ளன. தமிழ் உரைநடை வளர்ச்சி மட்டுமன்றித் தமிழ் மொழி, பண்பாடு, நாகரிகம் முதலிய அனைத்தையும் நமக்குக் காட்டுவதாக உள்ளது.

வளமிக்க தமிழ் இலக்கியங்களுக்குச் சுவைமிக்க எண்ணற்ற திறனாய்வு நூல்கள் எழுந்துள்ளன. பல்வேறு இலக்கியக் கொள்கைகளுக்கேற்பவும் தங்கள் இலக்கியப் பார்வைகளுக்கு ஏற்பவும் தமிழ் இலக்கியங்களில் தோய்ந்த அறிஞர்கள் விளக்கங்களையும் திறனாய்வுகளையும் தந்துள்ளனர்.

திருக்குறள், சங்கத் தொகை நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெரியபுராணம், கம்பராமாயணம், நாலடியார் போன்றனவும் பிறவும் தொடக்க வகுப்புகளிலிருந்து பட்ட வகுப்புகள்வரை கற்பிக்கப்படும் இலக்கியங்களாகும். இவற்றைக் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் கற்பிப்பதற்கு மூல நூல்கள் மட்டும் போதா. உரை விளக்கங்கள், திறனாய்வுகள் போன்றவற்றை ஆசிரியர் படித்தால்தான் அவ்விலக்கியங்கள் பற்றித் தெளிவான, விரிவான, ஆழமான கருத்துகளைக் கற்பவர் உள்ளத்தில் பதிக்கவியலும்.

இன்றைய நடைமுறையில் எல்லா நிலைகளிலும் வினா விடைகளைத் தாங்கிய பாடநூல் உரைகளை மட்டுமே மாணவர்கள் படிக்கிறார்கள். அவற்றைப் படிப்பதை ஆசிரியர்களும் ஊக்கப்படுத்துகிறார்கள். விரும்பத்தகாத இந்நடைமுறை கற்பிப்புச் சூழல் களைந்தெறியப்பட வேண்டும். ஆசிரியர் மாணவர்களுக்கு இலக்கியக் கருத்துகளை அள்ளித்தரும் 'அமுதசுரபி'யாகத் திகழ வேண்டும்; கருத்தூட்டம் தரும் 'கல்வியாளர்'களாக விளங்க வேண்டும்; ஈர்க்கும் தன்மையராய் மாணவர் இதயங்களில் இடம் பிடித்தல் வேண்டும். இந்நிலையை எய்திடப் பெரிதும் உதவுவது திறனாய்வு நூல்களே. பாட உரை நூல்கள் படிப்பதை விடுத்து, தினறாய்வு நூல்களை ஆசிரியர்கள் படிக்கத் தொடங்கினால் இலக்கியக் கற்பிப்புச் செழுமையுறும். இல்லையாயின் ஆசிரியர்கள் தகவல் அறிவிப்பாளராகக் காணப்படுவர்.

திறனாய்வு நூல்களைப் படிக்க, ஆசிரியர் நூலகத்தின் துணையை நாட வேண்டும். தமிழகத்தில் அனைத்து வட்டத் தலைநகர்களிலும் தேவநேயப் பாவாணர் நூலகத்தின் கிளைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான திறனாய்வு நூல்கள் வாங்கப்படுகின்றன. அந்நூலகங்களை ஆசிரியர்கள் பயன்படுத்தலாம். பள்ளி நூலகத்தையும் திறனாய்வு நூல்கள் கொண்டு வளப்படுத்திக் கற்பிப்புப் பணியை மேம்படுத்தலாம். உயர்நிலைப் பள்ளி நூலகங்களுக்கு ஆண்டு தோறும் நூல்கள் வாங்கி அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் அருகிலுள்ள உயர்நிலைப் பள்ளி நூலகங்களோடு அலுவலக முறையில் தொடர்பு கொண்டு, அப்பள்ளிகளின் நூலகங்களைப் பயன்படுத்த இயலும்.

பொதுவாக, ஆசிரியர்கள் தத்தம் பள்ளியிலேயே தங்கள் பணித் தொடர்புகளை முடக்கிக் கொள்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும். பல்வேறு பள்ளிகளிலும் கற்பிப்புத் தொடர்புகளை ஆசிரியர்கள் பெருக்கிக் கொள்வார்களாயின், பார்வை நூல் பயன்பாடுகளும் பெருகும். பரந்துபட்ட அறிவும் வளரும்.