TT02 அடிப்படைத் தமிழ் இலக்கணம்
5.3 திறனாய்வு நூல்களும் கட்டுரைகளும்
திறனாய்வு நூல்களும் கட்டுரைகளும்
தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் தம்மை எப்போதும் தமிழ் வளர்ச்சிப் போக்கினை அறிந்தவராகத் திகழ வேண்டும்.
அரசு அமைப்பு, தனியார் அமைப்புகள் எனப் பல தமிழ் வளர்ச்சிக்கு அரும் தொண்டாற்றி வருகின்றன. அவை ஆய்வகங்களை நடத்தியும் ஆய்வுகளையும் நிகழ்த்தியும் . வருகின்றன. ஆய்வுக் கட்டுரைகளும் ஆய்விதழ்களும் வெளிவருகின்றன. இவையெல்லாம் கற்பித்தலுக்கான வளமூலங்கள்.
சங்ககாலம் தொடங்கி இந்நாள்வரை வளர்ச்சிக்கெனப் பல அமைப்புகள் இயங்கி வருகின்றன. இயக்கமுள்ள தமிழாசிரியர் தம்மை இவ்வமைப்புகளுள், ஒன்றுடனோ, பலவற்றுடனோ இணைத்துக் கொண்டால் தமிழ் உலகில் நிகழ்வனவற்றை அறிந்து கொள்வதோடு தம்மையும் வளர்ச்சிப் பணியில் உட்படுத்திக் கொள்ள இயலும். ஆசிரியர் · பெறும் வளர்ச்சி அவரோடு நின்றுவிடுவதில்லை. அவரை வழிகாட்டியாகக் கொண்ட மாணவர்களையும் வளர்க்கிறது. தமிழ்த்தொண்டின் தலையாயது, தமிழ் உணர்வு மிக்க தலை முறையினரை உருவாக்குதலாகும். எனவே, ஆசிரியர்கள் தமிழ் வளர்ச்சி அமைப்புகளை நாடிச் சென்று தங்கள் பணித்திறத்தை வெளிப்படுத்த வேண்டும்.
தமிழ் வளர்ச்சிக்காக இயங்கும் அமைப்புகளை, அரசு அமைப்புகள், அரசு சார் அமைப்புகள், தனியார் அமைப்புகள் என வகைப்படுத்திக் காணலாம்.
அரசு அமைப்புகளாக, நடுவண் அரசுக்குரியதும் மாநில அரசுக்குரியதும் தமிழ் வளர்ச்சிக்காக இயங்கி வருகின்றன.
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் எனும் மொழி வளர்ச்சி நிறுவனம் மைசூரில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் இந்தி, வடமொழி (சமஸ்கிருதம்) ஆகியவை தவிர, பிறமொழிகளின் வளர்ச்சிக்குரிய பணிகளையும் செயல் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிறுவனம் தொடங்கப்பெற்ற காலம் முதல் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மொழியியல் அறிஞர்கள் பணியாற்றியதால் இதன் பல பணிகள் செம்மொழியாம் தமிழ் வளர்ச்சி நோக்கில் அமைந்தன. தற்போதுங்கூட தமிழ்நாட்டைச் சார்ந்த முனைவர் பொன். சுப்பையா அவர்கள், மொழிக் கல்வியில் சிறப்பாக, தமிழ்க் கல்வியில் மேற்கொள்ளத்தக்க மதிப்பீட்டு முறைகள் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
பாடத்திட்ட அமைப்பு, தேர்வுமுறை, மொழி இலக்கியங்களால் விளையும் பண்பாட்டுப் பயன் ஆகியனவற்றின் தொடர்பானவை அவர் பொறுப்பேற்றுள்ள மதிப்பீட்டு முறைமத்தின் அளப்பரிய பணிகளாகும்.
இந்நிறுவனத்தில் இயக்குநராகவும் துணை இயக்குநராகவும் பணியாற்றிய முனைவர். இ. அண்ணாமலை, முனைவர். க. திருமலை ஆகியோரின் தமிழ் சார்ந்த மொழியியல் தொண்டுகள் பல.
அந்நிறுவனம், அரிச்சுவடி முதல் ஆராய்ச்சி வரைக்கும் தேவையான நூல்களை வெளியிட்டு வருகிறது. தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், மொழியில் வெளியாகும் நூல்களை வாங்கிப் பல நூலகங்களுக்கு இலவசமாக அனுப்புகிறது.
தமிழ்நாடு அரசின் பண்பாட்டுத் துறையின் மேற்பார்வையில் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சிப் பணிக்கான பல்வேறு திட்டங்களைக் கொண்டுள்ளது. இவ்வியக்கம் அறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாகும். இது சிறந்த நூல்களை வெளியிடுவதற்கு நிதி உதவி வழங்குகிறது. அலுவலகங்களில் எல்லா நிலைகளிலும் தமிழ் பயன்படுவதை உறுதி செய்வதற்கான பணிகளையும் இது மேற்கொண்டு வருகிறது.
அரசு நேரடியாக ஈடுபடாமல், நிதி உதவி வழங்கி இயக்கும் அமைப்புகள் அரசுசார் அமைப்புகளாகும். தமிழ் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட அரசுசார் அமைப்புகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழப் பல்கலைக்கழகம் ஆகியனவாகும்.
சென்னை, தரமணியில் இயங்கி வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ஏடுகளில் முடங்கிக் கிடக்கும் தமிழ் இலக்கியங்களை வெளியிடுதல், மொழி இலக்கிய ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல் போன்ற பணிகளை ஆற்றி வருகிறது. தமிழ் வளர்ச்சிகான செயல் திட்டங்களை (Projects) மேற்கொள்வோருக்கு நிதி உதவியும் இந்நிறுவனம் வழங்குகிறது.
தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழ்ப்பல்கலைக் கழகம், எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் தமிழகத்தில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதாகும். மொழி பெயர்ப்பு, சுவடி, மலைவாழ் மக்கள் முன்னேற்றம் போன்ற பல புலங்களைக் கொண்டியங்கும் இப்பல்கலைக் கழகம், தமிழ் வளர்ச்சிக்காகப் பல்முனைச் செயல்களை மேற்கொண்டு வருகிறது.
இப்பல்கலைக் கழகத்தின் ஓர் உறுப்பாக, தமிழ் இணையம் இயங்கி வருகிறது. பிற நாட்டிலுள்ளோர் தமிழ் கற்பதற்கான வளி வழி பாடங்களை (On Air) இந்நிறுவனம் உருவாக்கி அவற்றை இணையத்தின் வழியாக (Through Internet) அனுப்புகிறது.
சென்னை போன்ற பல்கலைக் கழகங்களில் தமிழ் வளர்ச்சிக்காகத் தனி ஆய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் ஆய்வு மையம், கிறித்துவ இலக்கிய ஆய்வு மையம், மதுரை செந்தமிழ்க் கல்லூரி போன்றன குறிப்பிடத்தக்க தமிழ் வளர்ச்சி வளர்ச்சி ஆய்வு மையங்களாகும்.
தமிழ் வளர்ச்சிக்காக, செயலூக்கமும் தமிழ் ஆர்வமும் கொண்ட பலர், பல அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். தலைநகர் தமிழ்ச்சங்கம், நண்பர்கள் கழகம், மாணவர் மன்றம் போன்ற பல அமைப்புகள் தமிழ் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தனியார் அமைப்புகளில் தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் அரும்பணியாற்றி வரும் தனியார் அமைப்புகளில் குறிப்பிடத்தக்கன ஆய்வுப் பேரவை, புத்தொளி ஆராய்ச்சிக் கழகம், மனித நேய ஆராய்ச்சிக் கழகம், தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் என்பனவாகும். இவ்வமைப்புகள் சென்னை நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்றன.