முகப்பு

5.5 வலைத்தளங்கள் (மின் அகராதி, வலைப்பூக்கள்….)

வலைத்தளங்கள் (மின் அகராதி, வலைப்பூக்கள்….)

தமிழ்மொழியின் வளர்ச்சிக்காகப் பெரிதும் துணைபுரியும் வலைத்தளங்களான மின் அகராதி, வலைப்பூக்கள் முதலானவற்றை குறித்து இப்பகுதியில் காணலாம்.

நவீன வசதிகளும் வாய்ப்புகளுமுள்ள மின் நூலகம் தமிழ்மொழி கற்பிப்பதற்கெனவும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் இணையக் கல்விக்கழகத்திலும் சில தனியார் நிறுவனங்களிலும் தமிழ்மொழி இலக்கியம், பண்பாடு ஆகியவற்றிற்கென மின் நூலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

• தமிழ் இணையக் கல்விக்கழக மின் நூலகம்

தமிழகத்தில் 1999ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்களில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாட்டின் விளைவாகத் தமிழக அரசால் 2001ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்களில் தொடங்கப்பட்டத் தமிழ் இணையக் கல்விகழகத்தின் மின் நூலகம், ஒரு மொழிக்கென நிறுவப்பட்ட மின் நூலகம் என்ற சிறப்புக்குரியது. மேலும், நூல்களும் மூலங்களும், தகவல்களும் மட்டுமல்லாமல் அகராதிகள், கலைச்சொல் தொகுப்புகள், தமிழ்ப் பண்பாட்டுக் களங்களான கோயில்கள், கலைகள் பற்றிய பண்பாட்டுக் காட்சியகம் ஆகியவையும் இடம் பெற்றுள்ள தனித்தன்மை வாய்ந்த ஒரு மின் நூலகம் என்ற பெருமைக்குரியது.

வகுப்பிற்குச் செல்லாமலே பாடங்களைக் கற்கும் வசதியும் வாய்ப்பும் வழங்கப்படும் இணைய வழிக் கல்வியைத் தரும் தமிழ் இணையக்கல்விக்கழகத்தில் நூலகத்திற்கு வராமலேயே நூல்களைக் கற்கும் வசதியையும் வாய்ப்பையும் வழங்குகிறது மின் நூலகம்.

மின்நூலகத் திரையில் மிதவை தமிழ் விசைப்பலகை ஒன்று தோன்றும். அதில், தமிழ் எழுத்துகள் கொண்ட பொத்தான்கள் இருக்கும். தேவைப்படும் பொத்தான்களை அழுத்தி, வேண்டிய தமிழ்ச் சொல்லை உருவாக்கலாம். அதன் வாயிலாகத் தேவையான, சொல்லுக்குரிய ஆங்கிலச் சொல்லைப் பெறலாம். இத்தகைய நவீன வசதிகள் இம் மின் நூலகத்திலுள்ளது.

தமிழ் இணையக் கல்விக்கழக நூலகத்தில், தமிழ் இலக்கண, இலக்கியங்கள், அகராதிகள், கலைச்சொல் தொகுப்புகள், பண்பாட்டுக் காட்சியகம் ஆகிய பல பிரிவுகள், தேடுதல் வசதிகளோடு அமைக்கப்பட்டுள்ளன.

சமூகவியல், வரலாறு, புவியியல், அரசியல், பொருளியல், வணிகவியல், வேதியியல், இயற்பியல், விலங்கியல், கணிதவியல், தாவரவியல், நிலவியல், புள்ளியியல், மருத்துவவியல், தகவல் தொழில் நுட்பவியல், கால்நடை மருத்துவவியல், மின்னணுவியல், வேதிப் பொறியியல், கட்டடப் பொறியியல், வேளாண்மைப் பொறியியல், உயிரிய தொழில் நுட்பவியல், மனை இயல் முதலிய பல்துறைக்குரிய கலைச் சொற்களுக்கு நிகரானத் தமிழ்ச் சொற்கள் அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

21ஆம் நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சியில் அசைக்கமுடியாத இடத்தைப் பெற்றிருப்பது இணையமாகும். தகவல் தொழில் நுட்ப உலகில் இணையம் மிகப்பெரிய உதவிகளை மொழி, இனம், பாராமல் உலக மக்களுக்குச் செய்து வருகின்றன. இது விஞ்ஞானம், அறிவியல், கணக்குகள் என்ற ஒரு குறிப்பிட்ட சிலவற்றிற்குப் பயன்படாமல் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றி வருகின்றன. நெடிய பாரம்பரிய மிக்க தமிழ்மொழியும் இவ் இணையத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்று வளர்ந்து வருகின்றது. இணையத்தில் எண்ணிலடங்கா இலக்கிய வகைகளைப் பெற்று வளர்ந்து வரும் தமிழ் மொழிக்கு வலைப்பூக்கள் என்ற புதிய இலக்கிய வகை தோன்றிப் பெரும் பங்காற்றி வருகிறது. வலைப்பூக்கள் என்றால் என்ன ? அதன் தோற்றம், தமிழில் தோன்றிய வரலாறு மற்றும் அதன் வகைகளாக இலக்கியம் சார்ந்த வலைப்பூக்கள், பக்தி, ஆன்மீகம், கணிப்பொறி, மருத்துவம், பல்சுவைச் சார்ந்த வலைப்பூக்கள் எனப் பகுக்கப்பட்டு ஒவ்வொன்றின் தமிழ்ப் பயன்பாட்டையும் எடுத்து விளக்குகிறது.

• வலைப்பூ – வலைப்பதிவு

“ஒரு சமுதாயம் இன்றைய பணிகளை இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும். இன்றைய பணியை நேற்றைய கருவிகொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு நலியும். இது தவிர்க்க முடியாதது” என்று டாக்டர் வா.செ.குழந்தைசாமி குறிப்பிடுவார். அவரின் கூற்றுபடி நாம் இன்றைய பணியை இன்றைய கருவி கொண்டு செய்யவேண்டும். அதன் அடிப்படையில் தான் நாம் இணையத்தை இன்று பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். அதில் வலைப்பூக்கள் என்ற ஒன்று தனி இலக்கிய வகையாகத் தோன்றியுள்ளது. ஒருவரிடமிருந்து பிறருக்குத் தெரிவிக்கப் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்க்கான எழுத்துகள், ஒலி, ஒளி வடிவக் கோப்புகள், ஓவியம், படங்கள் என்று அனைத்தையும் இணையம் வழியே தனிப்பட்ட ஒருவர் உலகில் இருக்கும் பிறருக்குத் தெரிவிக்க உதவும் இணைய வழியிலான ஒரு சேவையே வலைப்பூ என்பதாகும்.

வலைப்பூ என்பதை ஆங்கிலத்தில் பிளாக் (Blog) என்கிறார்கள். இதன் மூலம் வெப்ளாக் (Weblog) என்பதாகும். 17-12-1997ல் ஜார்ன் பெர்கர் (John Berger) என்பவர்தான் வலைப்பூவிற்கு ஆங்கிலத்தில் Webblog என்ற பெயரை உருவாக்கிப் பயன்படுத்தினார். இதன் பின்பு இதன் சுருக்க வடிவமான Blog எனும் பெயரைப் பீட்டர் மெர்ஹால்ஸ் (Peter Merholz) என்பவர் 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பயன்படுத்தத் தொடங்கினார். இவரது வலைப்பதிவின் பக்கப் பட்டையில் Webblog எனும் சொல் இரண்டாக உடைக்கப்பட்டு We blog என்று பிரித்துக் கையாளத் தொடங்கினார். இப்படியே வலைப்பூவிற்கு Blog எனும் பெயர் நிலைத்து விட்டது. தமிழில் வலைப்பூ என்ற பெயரை சிமென்ட்க் (Symantec) நிறுவனத்தின் இயக்குநர் மணி.மணிவண்ணன் சூட்டியுள்ளார்.

• தமிழ் வலைப்பூ

இந்த blog எனும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையாகத் தமிழில் ஒரு பெயர் உருவாக்க விரும்பிய போது தமிழ் உலகம் ராயர் காபி கிளப் மடலாடற் குழு (மின் குழுமம்) உறுப்பினர்கள் தங்கள் கலந்துரையாடல்களின் வழியாக blog-க்கு வலைப்பூ என்று தமிழில் பெயர் உருவாக்கினார். இன்று தமிழில் இந்த வலைப்பூ என்ற பெயரே பயன்பாட்டில் இருந்து வருகிறது.

• வலைப்பூ சேவை

வலைப்பூ வசதிக்கான சேவையை முதன்முதலாக 1996 ஆம் ஆண்டில் எக்ஸான்யா (Xanya) எனும் நிறுவனம் வழங்கத் தொடங்கியது. 1997 ஆம் ஆண்டில் சுமார் 100 நாட்குறிப்பேடுகள் இடம் பெற்றன. அதன் பிறகு சில நிறுவனங்கள் வலைப்பூவிற்கான இலவச இடவசதியைச் செய்து கொடுத்தன. இந்நிறுவனங்களில் ஒன்று பிளாக்கர்ஸ்.காம் எனும் பெயரில் வலைப்பூ அமைப்பதற்கான சேவையை இலவசமாக அளித்து அதிகமான வலைப்பூக்களை உருவாக்க வாய்ப்பளித்தன. இதன் மூலம் ஆங்கிலத்தில் பலர் தங்களுக்கான வலைப்பூக்களை உருவாக்கத் தொடங்கினர். இதன் வளர்ச்சியைக் கண்ட கூகுள் (Google) நிறுவனம் இந்நிறுவனத்தை விலைக்குப் பெற்றது. அதன் பிறகு அனைத்து மொழிகளிலும் வலைப்பூ அமைப்பதற்கான சேவை அளிக்கப்பட்டது.

• முதல் தமிழ் வலைப்பூ

தமிழ் மொழியிலான முதல் வலைப்பூவை நவன் என்கிற வலைப்பதிவர் 2003 ஆம் ஆண்டில் ஜனவரி 26ல் உருவாக்கினார் என்று அவருடைய வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2003ஆம் ஆண்டில் ஜனவரி முதல் தேதியன்றே கார்த்திக் ராமாஸ் என்பவர் முதல் வலைப்பூவை உருவாக்கினார் என்று சிந்தா நதி எனும் இணைய இதழில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த இரு வலைப்பூக்களில் நவன் வலைப்பூ பிளாக்கர்ஸ்.காம் தளத்திலும், (www.navan.name/blog/?p=18) கார்த்திக் ராமாஸ் வலைப்பூ பிளாக்டிரைவ் எனும் தளத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கார்த்திகேயன் ராமசாமி (கார்த்திக் ராமாஸ்) எனும் வலைப்பதிவர் தமிழில் செய்த முதல் வலைப்பூ என்று பேராசிரியர் மு.இளங்கோவன் எட்டாவது தமிழ் இணைய மாநாட்டு மலரில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவிலும் கார்த்திகேயன் ராமசாமி வலைப்பூதான் முதல் தமிழ் வலைப்பூ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (karthikramas.blogdrive.archive/21.html)

தமிழ் வலைப்பூக்கள் உருவாக்கம் மற்றும் பயன்கள் குறித்த கட்டுரை ஒன்று திசைகள் எனும் இணைய இதழில் வெளியானதைத் தொடர்ந்து தமிழ் வலைப்பூக்கள் குறித்துப் பலருக்கும் தெரியத் தொடங்கின. தமிழ் வலைப்பூக்களின் தொடக்கக் காலத்தில் தமிழ் எழுத்துருப் பிரச்சனைகள் இருந்ததால் இதன் வளர்ச்சி சற்றுக்குறைவாகவே இருந்தன. 2003ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரை சுமார் 1000 வலைப்பூக்கள் தோன்றியிருந்தன. அதற்கடுத்த 2005 முதல் 2007 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இந்த எண்ணிக்கை 4000 ஆக அதிகரித்தது என்று பேராசிரியர் க.துரையரசன் எழுதிய “இணையமும் இனிய தமிழும்” என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். 2007 லிருந்து 2012 வரை 15000 வலைப்பூக்கள் உருவாகியுள்ளன. 2012 முதல் இன்று வரை சுமார் 16.625 வலைப்பதிவுகள் இருப்பதாக நீச்சல்காரன் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார். (நன்றி.Neechalkaaran.com) இந்த கணக்கு எதிர்வரும் காலங்களில் மேலும் உயர்ந்து 50,000த்தை தொட்டுவிடும். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 3 அன்று உலக வலைப்பதிவாளர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழ் வலைப்பூக்களின் வகைப்பாடுகளும் வளர்ச்சிகளும்

தமிழ் வலைப்பூக்களின் உள்ளடக்கத்தைக் கொண்டு முக்கியமான சில தலைப்புகளின் கீழ் அவற்றை வகைப்படுத்தலாம். தமிழ் வலைப்பூக்களில் அதிகமாக கவிதைகளுக்கான வலைப்பூக்கள் தான் உருவாக்கியிருப்பது பல வலைப்பதிவர்கள் தங்கள் கவிதைகளை அவர்களுக்கான வலைப்பூக்களில் அதிக அளவில் வலையேற்றம் செய்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக

அ. ராமசாமி

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறைப்பேராசிரியர் முனைவர்.அ.ராமசாமி அவர்களால் ஒரு வலைப்பூ 2007 ஆம் ஆண்டு முதல் தொடங்கி வெளியிடப்பட்டு வருகிறது. இதில் 300 இடுகைகள் வரை இடம் பெற்றுள்ளன. இவர் நாள்தோறும் புதிய புதிய இடுகைகளைப் பதிவேற்றம் செய்த வண்ணம் உள்ளார். இவரது கட்டுரைகள் இலக்கியத்தரம் வாய்ந்ததும், தெளிந்த நடையுடையதுமாக அமைந்துள்ளன. முற்போக்குச் சிந்தனையை உடைய திறனாய்வுக் கட்டுரைகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. இதுவரை இவரது வலைப்பூவை 31875 பேர் பார்வையிட்டுள்ளனர். தரமான விமர்சனத்தையும் முன் வைத்துள்ளனர் (http://ramasamywritings.blogspot.in)

தொழில்நுட்ப வலைப்பூ

இணையப் பயன்பாட்டில் அதிகமாகப் பங்கு கொள்ளும் கணினிக்கான தொழில்நுட்பப் பணியிலிருக்கும் பலர் கணினி தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக உருவாக்கிய பல தமிழ் வலைப்பூக்கள் இருக்கின்றன. அவைகளில் ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இவ்வலைப்பூவில் தமிழில் கணிப்பொறியை எவ்வாறு இயக்குவது, தமிழ் மென்பொருட்களின் பட்டியல்கள் என பல தகவல்கள் அடங்கிய கட்டுரைகள் உள்ளன. கணினி இணையம் பற்றிய சில செய்திகளும் இந்த வலைப்பூவில் தரப்பட்டுள்ளன. (www.tamiltools.blogspot.com)

பெண்கள் சார்ந்த வலைப்பூக்கள்

பெண் உடல் நலம், பெண்களுக்கான சுதந்திரம், வேலைவாய்ப்புகள் போன்ற ஒரு சில பெண்களுக்கான சிறந்த வலைப்பூக்களும் தமிழில் உருவாகியிருக்கின்றன. இது பாடினியார் என்ற பெயரில் ஜெயந்தி என்பவரால் உருவாக்கப்பட்ட வலைப்பூ ஆகும். இவர் அக்டோபர் 2009 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளார். (http://paadiniyar.blogspot.com) திருமதி.சந்திரவதனம் என்பவர் ஜீலை 2003 ஆம் ஆண்டு பெண்கள் என்ற பெயரில் ஒரு வலைப்பூவைத் தொடங்கி பெண்கள் பற்றிய அரிய செய்திகளைப் பதிவு செய்து வருகிறார். (http://pennkal.blogspot.in/). இவைகள் மட்டுமின்றி ஆன்மீகம், அறிவியல் மருத்துவம் சார்ந்த வலைப்பதிவுகளும் இணையத்தில் இடம்பெற்றுள்ளன என்று இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் என்ற நூலில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள்
  • வலைப்பூக்களின் வருகையால் தமிழ் இலக்கியங்கள் வெளியுலக மக்களுக்குத் தெரிய வருகின்றன.
  • இணையத்தில் தமிழில் எழுதுபவர்கள் பெருகியுள்ளனர். இதனால் தமிழின் நிலை வளர்ச்சி அடைந்துள்ளது.
  • வலைப்பூக்களால் உலக நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களின் கருத்துக்கள் மிக விரைவாகக் கிடைக்கின்றன.
  • இலங்கை, மலேசியா, கனடா, தென்கொரியா, சிங்கப்பூர், அரபு நாடுகள் போன்றவற்றில் வாழும் மக்களின் படைப்புகள் தமிழ்மொழியில் இருப்பதால் அனைவரும் கருத்தைப் பகிர்ந்து கொள்ள முடிகின்றன.
  • தமிழ் மொழியின் இலக்கண, இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் முதல்கொண்டு இக்கால இலக்கியங்கள் வரை வலைப்பூவில் உலக தமிழர்களுக்குக் கிடைக்கின்றன. இதனால் தமிழ் மொழி வளர்ச்சி பெற்று வருகிறது.
  • இவைகள் அன்றி கணிப்பொறி சார்ந்த தகவல்கள் அதிகம் கிடைக்கின்றன. அறிவியல், விஞ்ஞானக் கருத்துக்களும் அது தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளும் நமக்கு உடனடியாகக் கிடைக்கின்றன.
  • உலக நாடுகளில் உள்ள சைவ மடாலயங்களும், திருத்தலங்களும் பற்றியச் செய்திகள் இடம்பெற்றுள்ளன.
  • தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் அதிகம் வலைப்பூக்களில் வெளிவருகின்றன.
  • வலைப்பூக்களினால் தொழில் நுட்ப வளர்ச்சி பெற்றுத் தமிழ்மொழி வளர்ந்து வருகின்றன.
  • வலைப்பூக்களில் வெளிவரும் படைப்புகளும் கட்டுரைகளும் கவிதைகளும் பிற கருத்துக்களுக்கும் உடனுக்குடன் பின்னூட்டம் என்ற பெயரில் விமர்சனங்கள் பல நாடுகளிலிருந்து எழுதுகின்றார்கள். இது தமிழ் மொழிக்குக் கிடைத்த விமர்சன இலக்கியம் என்றே கூறலாம். மேலும் பல துறைகளைச் சார்ந்த அறிஞர் பெருமக்களும் தமிழ் மொழிக்குத் தன்னால் இயன்ற பணிகளையும் செய்து வருகின்றார்கள்.
  • பிப்ரவரி 2018லிருந்து கூகுள் நிறுவனம் தமிழ் பிளாக்கர்ஸ்க்கு விளம்பர உதவியை வழங்கியுள்ளது என்பது சிறப்பான தகவலாகும்.