முகப்பு |
பரணர் |
6. குறிஞ்சி |
நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால் |
||
நார் உரித்தன்ன மதன் இல் மாமை, |
||
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண், |
||
திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்கு |
||
5 |
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே, |
|
'இவர் யார்?' என்குவள் அல்லள்; முனாஅது, |
||
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி |
||
எறி மட மாற்கு வல்சி ஆகும் |
||
வல் வில் ஓரி கானம் நாறி, |
||
10 |
இரும் பல் ஒலிவரும் கூந்தல் |
|
பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே. | உரை | |
இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன்நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர்
|
100. மருதம் |
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர் |
||
மாரிக் கொக்கின் கூரல் அன்ன |
||
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன் |
||
தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின் |
||
5 |
வான் கோல் எல் வளை வௌவிய பூசல் |
|
சினவிய முகத்து, 'சினவாது சென்று, நின் |
||
மனையோட்கு உரைப்பல்' என்றலின், முனை ஊர்ப் |
||
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும் |
||
தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப் |
||
10 |
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின் |
|
மண் ஆர் கண்ணின் அதிரும், |
||
நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே. | உரை | |
பரத்தை, தலைவிக்குப்பாங்காயினார் கேட்ப, விறலிக்கு உடம்படச்சொல்லியது.-பரணர்
|
201.குறிஞ்சி |
'மலை உறை குறவன் காதல் மட மகள், |
||
பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்; |
||
சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள் |
||
உள்ளல் கூடாது' என்றோய்! மற்றும், |
||
5 |
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித் |
|
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு, |
||
அவ் வெள் அருவிக் குட வரையகத்து, |
||
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும், |
||
உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும், |
||
10 |
பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின் |
|
மாயா இயற்கைப் பாவையின், |
||
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே. | உரை | |
கழறிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது.-பரணர்
|
247. குறிஞ்சி |
தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக் |
||
கொன்ற யானைச் செங் கோடு கழாஅ, |
||
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி, |
||
எஃகுறு பஞ்சிற்று ஆகி, வைகறைக் |
||
5 |
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட! நீ |
|
நல்காய்ஆயினும், நயன் இல செய்யினும், |
||
நின் வழிப்படூஉம் என் தோழி நல் நுதல் |
||
விருந்து இறைகூடிய பசலைக்கு |
||
மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை சென்மே! | உரை | |
'நீட்டியாமை வரை' எனத் தோழி சொல்லியது.-பரணர்
|
260. மருதம் |
கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமை |
||
பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ, |
||
தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது |
||
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர! |
||
5 |
வெய்யை போல முயங்குதி: முனை எழத் |
|
தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன் |
||
மலி புனல் வாயில் இருப்பை அன்ன, என் |
||
ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த |
||
முகை அவிழ் கோதை வாட்டிய |
||
10 |
பகைவன்மன்? யான் மறந்து அமைகலனே! | உரை |
ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது.-பரணர்
|
265. குறிஞ்சி |
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல் |
||
அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை |
||
வீளை அம்பின் வில்லோர் பெருமகன், |
||
பூந் தோள் யாப்பின் மிஞிலி, காக்கும் |
||
5 |
பாரத்து அன்ன-ஆர மார்பின் |
|
சிறு கோற் சென்னி ஆரேற்றன்ன- |
||
மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக் |
||
கலி மயில் கலாவத்து அன்ன, இவள் |
||
ஒலி மென் கூந்தல் நம் வயினானே. | உரை | |
பின்னின்ற தலைமகன் நெஞ்சிற்கு உரைத்தது.- பரணர்
|
270. நெய்தல் |
தடந் தாள் தாழைக் குடம்பை, நோனாத் |
||
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து |
||
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி, |
||
உருள் பொறி போல எம் முனை வருதல், |
||
5 |
அணித் தகை அல்லது பிணித்தல் தேற்றாப் |
|
பெருந் தோட் செல்வத்து இவளினும்-எல்லா!- |
||
எற் பெரிது அளித்தனை, நீயே; பொற்புடை |
||
விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான் |
||
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் |
||
10 |
கூந்தல் முரற்சியின் கொடிதே; |
|
மறப்பல் மாதோ, நின் விறல் தகைமையே. | உரை | |
தோழி வாயில் நேர்கின்றாள் தலைமகனை நெருங்கிச் சொல்லி, வாயில் எதிர்கொண்டது,உடனிலைக் கிளவி வகையால்.-பரணர்
|
280. மருதம் |
'கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம், கொக்கின் |
||
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல் |
||
தூங்கு நீர்க் குட்டத்து, துடுமென வீழும் |
||
தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை |
||
5 |
புலவாய்' என்றி-தோழி!-புலவேன்- |
|
பழன யாமைப் பாசடைப் புறத்து, |
||
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும், |
||
தொன்று முதிர் வேளிர், குன்றூர் அன்ன என் |
||
நல் மனை நனி விருந்து அயரும் |
||
10 |
கைதூவு இன்மையின் எய்தாமாறே. | உரை |
வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்து மொழிந்தது; தலைமகனை ஏற்றுக்கொண்டு வழிபட்டாளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.- பரணர்
|
300. மருதம் |
சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர் |
||
மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு, |
||
உறு கால் ஒற்ற ஒல்கி, ஆம்பல் |
||
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்- |
||
5 |
சிறு வளை விலை எனப் பெருந் தேர் பண்ணி, எம் |
|
முன் கடை நிறீஇச் சென்றிசினோனே! |
||
நீயும், தேரொடு வந்து பேர்தல் செல்லாது, |
||
நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின் |
||
இரும் பாண் ஒக்கல் தலைவன்! பெரும் புண் |
||
10 |
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண், |
|
பிச்சை சூழ் பெருங் களிறு போல, எம் |
||
அட்டில் ஓலை தொட்டனை நின்மே. | உரை | |
வாயில் மறுத்தது; வரைவு கடாயதூஉம் ஆம், மாற்றோர் நொதுமலாளர் வரைவின் மேலிட்டு. மருதத்துக் களவு - பரணர்
|
310. மருதம் |
விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை, |
||
களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க, |
||
உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர் |
||
வாளை பிறழும் ஊரற்கு, நாளை |
||
5 |
மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே! |
|
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி |
||
உடன்பட்டு, ஓராத் தாயரொடு ஒழிபுடன் |
||
சொல்லலைகொல்லோ நீயே-வல்லை, |
||
களிறு பெறு வல்சிப் பாணன் கையதை |
||
10 |
வள் உயிர்த் தண்ணுமை போல, |
|
உள் யாதும் இல்லது ஓர் போர்வைஅம் சொல்லே? | உரை | |
வாயிலாகப் புக்க விறலியைத் தோழி சொல்லியது; விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம்.-பரணர்
|
350. மருதம் |
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ, |
||
பழனப் பல் புள் இரிய, கழனி |
||
வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும் |
||
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என் |
||
5 |
தொல் கவின் தொலையினும் தொலைக! சார |
|
விடேஎன்: விடுக்குவென்ஆயின், கடைஇக் |
||
கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை |
||
சாடிய சாந்தினை; வாடிய கோதையை; |
||
ஆசு இல் கலம் தழீஇயற்று; |
||
10 |
வாரல்; வாழிய, கவைஇ நின்றோளே! | உரை |
தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது.-பரணர்
|
356. குறிஞ்சி |
நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த |
||
விலங்கு மென் தூவிச் செங் கால் அன்னம், |
||
பொன் படு நெடுங் கோட்டு இமயத்து உச்சி |
||
வான் அரமகளிர்க்கு மேவல் ஆகும் |
||
5 |
வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும் |
|
அசைவு இல் நோன் பறை போல, செல வர |
||
வருந்தினை-வாழி, என் உள்ளம்!-ஒரு நாள் |
||
காதலி உழையளாக, |
||
குணக்குத் தோன்று வெள்ளியின், எமக்குமார் வருமே? | உரை | |
வரைவு மறுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- பரணர்
|