61-70

61. குறிஞ்சி
கேளாய், எல்ல தோழி! அல்கல்
வேணவா நலிய, வெய்ய உயிரா,
ஏ மான் பிணையின் வருந்தினெனாக,
துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை,
5
''துஞ்சாயோ, என் குறுமகள்?'' என்றலின்,
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்,
''படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின், பரல் அவல்,
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
10
கண்ணும் படுமோ?'' என்றிசின், யானே.

தலைவன் வரவு உணர்ந்து, தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.-சிறுமோலிகனார்

62. பாலை
வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து,
குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து,
5
உள்ளினென் அல்லெனோ யானே-''முள் எயிற்று,
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்,
எமதும் உண்டு, ஓர் மதிநாட் திங்கள்,
உரறு குரல் வெவ் வளி எடுப்ப, நிழல் தப
உலவை ஆகிய மரத்த
10
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது'' எனவே?

முன் ஒரு காலத்துப்பொருள்வயிற் பிரிந்து வந்த தலைவன், பின்னும் பொருள்வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் செலவு அழுங்குவித்தது.-இளங்கீரனார்

63. நெய்தல்
உரவுக் கடல் உழந்த பெரு வலைப்பரதவர்
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்,
கல்லென் சேரிப் புலவற் புன்னை
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்
5
அழுங்கல் ஊரோ அறன் இன்று; அதனால்,
அறன் இல் அன்னை அருங் கடிப் படுப்ப,
பசலை ஆகி விளிவதுகொல்லோ-
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல்
கழிச் சுரம் நிவக்கும் இருஞ் சிறை இவுளி
10
திரை தரு புணரியின் கழூஉம்
மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே?

அலர் அச்சத்தால்தோழி சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-உலோச்சனார்

64. குறிஞ்சி
என்னர்ஆயினும் இனி நினைவு ஒழிக!
அன்னவாக இனையல்-தோழி!-யாம்
இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்?
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்
5
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம்
வறனுற்று ஆர முருக்கி, பையென
மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு, என்
அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென,
வறிதால், இகுளை! என் யாக்கை; இனி அவர்
10
வரினும், நோய் மருந்து அல்லர்; வாராது
அவணர் ஆகுக, காதலர்! இவண் நம்
காமம் படர் அட வருந்திய
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே!

பிரிவிடைத் தலைவியது அருமை கண்டு தூதுவிடக் கருதிய தோழிக்குத் தலைவி சொல்லியது.- உலோச்சனார்

65. குறிஞ்சி
அமுதம் உண்க, நம் அயல் இலாட்டி!-
கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான் யாற்றுக்
கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ,
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து,
5
புலியொடு பொருத புண் கூர் யானை
நற் கோடு நயந்த அன்பு இல் கானவர்
விற் சுழிப்பட்ட நாமப் பூசல்
உருமிடைக் கடி இடி கரையும்
பெரு மலை நாடனை ''வரூஉம்'' என்றோளே.

விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைமகட்குச் சொல்லியது.-கபிலர்

66. பாலை
மிளகு பெய்தனைய சுவைய புன் காய்
உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட
புலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி, நினைந்து, தன்
பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி,
5
புன் புறா உயவும் வெந் துகள் இயவின்,
நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும்,
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தனகொல்லோ-
கோதை மயங்கினும், குறுந் தொடி நெகிழினும்,
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்,
10
மாண் நலம் கையறக் கலுழும் என்
மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே?

மனை மருட்சி.-இனிசந்த நாகனார்

67. நெய்தல்
சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம்
மால் வரை மறைய, துறை புலம்பின்றே;
இறவு அருந்தி எழுந்த கருங் கால் வெண் குருகு
வெண் கோட்டு அருஞ் சிறைத் தாஅய், கரைய
5
கருங் கோட்டுப் புன்னை இறைகொண்டனவே;
கணைக் கால் மா மலர் கரப்ப, மல்கு கழித்
துணைச் சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை,
எல் இமிழ் பனிக் கடல், மல்கு சுடர்க் கொளீஇ,
எமரும் வேட்டம் புக்கனர்; அதனால்,
10
தங்கின் எவனோதெய்ய-பொங்கு பிசிர்
முழவு இசைப் புணரி எழுதரும்
உடை கடற் படப்பை எம் உறைவின் ஊர்க்கே?

பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது.-பேரி சாத்தனார்

68. குறிஞ்சி
''விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது,
இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல்
அறனும் அன்றே; ஆக்கமும் தேய்ம்'' என-
குறு நுரை சுமந்து, நறு மலர் உந்தி,
5
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்,
வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே;
''செல்க'' என விடுநள்மன்கொல்லோ? எல் உமிழ்ந்து,
உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள்,
கொடி நுடங்கு இலங்கின மின்னி,
10
ஆடு மழை இறுத்தன்று, அவர் கோடு உயர் குன்றே.

சிறைப்புறமாகத்தோழி, தலைவிக்கு உரைப்பாளாய்ச் செறிப்பு அறிவுறீஇயது.-பிரான் சாத்தனார்

69. முல்லை
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி,
சேய் உயர் பெரு வரைச் சென்று, அவண் மறைய,
பறவை பார்ப்புவயின் அடைய, புறவில்
மா எருத்து இரலை மடப் பிணை தழுவ,
5
முல்லை முகை வாய் திறப்ப, பல் வயின்
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ,
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி,
கொடுங் கோல் கோவலர் குழலோடு ஒன்றி,
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை,
10
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும்
இனையவாகித் தோன்றின்,
வினை வலித்து அமைதல் ஆற்றலர்மன்னே!

வினைவயிற் பிரிதல்ஆற்றாளாய தலைவி சொல்லியது.-சேகம்பூதனார்

70. மருதம்
சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே!
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே!
எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ,
5
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி,
அனைய அன்பினையோ, பெரு மறவியையோ-
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே!

காமம் மிக்க கழிபடர்கிளவி.-வெள்ளி வீதியார்