171-180

171. பாலை
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
வேனிற் குன்றத்து வெவ் வரைக் கவாஅன்
நிலம் செல, செல்லாக் கயந் தலைக் குழவி
சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய
5
ஊர் ஆன்கன்றொடு புகுதும் நாடன்
பன் மலை அருஞ் சுரம் இறப்பின், நம் விட்டு,
யாங்கு வல்லுந மற்றே-ஞாங்க
வினைப் பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்பக்
கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள்,
10
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ,
மார்பு உறப் படுத்தல் மரீஇய கண்ணே?

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்கு உரைத்தது.

172. நெய்தல்
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
''நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்'' என்று,
5
அன்னை கூறினள், புன்னையது நலனே-
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே;
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க!-நீ நல்கின்,
10
இறைபடு நீழல் பிறவுமார் உளவே.

பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; குறிபெயர்த்தீடும் ஆம்.

173. குறிஞ்சி
சுனைப் பூக் குற்றும், தொடலை தைஇயும்,
மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும்,
தன் வழிப் படூஉம் நம் நயந்தருளி,
வெறி என உணர்ந்த அரிய அன்னையை,
5
கண்ணினும் கனவினும் காட்டி, ''இந் நோய்
என்னினும் வாராது; மணியின் தோன்றும்
அம் மலை கிழவோன் செய்தனன் இது'' எனின்,
படு வண்டு ஆர்க்கும் பைந் தார் மார்பின்
நெடு வேட்கு ஏதம் உடைத்தோ?-
10
தொடியோய்! கூறுமதி, வினவுவல் யானே.

தோழி தலைவிக்கு உரைப்பாளாய், சிறைப்புறமாகச் சொல்லியது; வெறி அச்சுறீஇத் தோழி அறத்தொடு நிலை பயப்பித்ததூஉம் ஆம்.

174. பாலை
''கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன
ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக்
கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின்,
புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச்
5
சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி,
பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து
உயங்கினை, மடந்தை!'' என்றி-தோழி!-
அற்றும் ஆகும், அஃது அறியாதோர்க்கே;
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி
10
மல்லல் மார்பு மடுத்தனன்
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே?

வினை முற்றி வந்து எய்திய காலத்து, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறீஇ நின்றாட்கு அவள் சொல்லியது.

175. நெய்தல்
நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர்
கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ,
மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய
சிறு தீ விளக்கில் துஞ்சும், நறு மலர்ப்
5
புன்னை ஓங்கிய, துறைவனொடு அன்னை
தான் அறிந்தன்றோ இலளே; பானாள்
சேரிஅம் பெண்டிர் சிறு சொல் நம்பி,
சுடுவான் போல நோக்கும்,
அடு பால் அன்ன என் பசலை மெய்யே.

தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.

176. குறிஞ்சி
எம் நயந்து உறைவி ஆயின், யாம் நயந்து
நல்கினம் விட்டது என்? நலத்தோன் அவ் வயின்
சால்பின் அளித்தல் அறியாது, ''அவட்கு அவள்
காதலள் என்னுமோ?'' உரைத்திசின்-தோழி!-
5
நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப்
போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள்
வாழை அம் சிலம்பின் வம்பு படக் குவைஇ,
யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு,
அருவி முழவின் பாடொடு ஒராங்கு,
10
மென்மெல இசைக்கும் சாரல்,
குன்ற வேலித் தம் உறைவின் ஊரே.

பரத்தை தலைவியின் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்குச் சொல்லியது.

177. பாலை
பரந்து படு கூர் எரி கானம் நைப்ப,
மரம் தீயுற்ற மகிழ் தலைஅம் காட்டு
ஒதுக்கு அரும் வெஞ் சுரம் இறந்தனர் மற்றவர்;
குறிப்பின் கண்டிசின் யானே; நெறிப் பட,
5
வேலும் இலங்கு இலை துடைப்ப; பலகையும்
பீலி சூட்டி மணி அணிபவ்வே;
பண்டினும் நனி பல அளிப்ப; இனியே
வந்தன்று போலும்-தோழி!-நொந்து நொந்து,
எழுது எழில் உண்கண் பாவை
10
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே.

செலவுக் குறிப்பு அறிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.

178. நெய்தல்
ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன
தோடு அமை தூவித் தடந் தாள் நாரை
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது,
5
கைதை அம் படு சினைப் புலம்பொடு வதியும்
தண்ணம் துறைவன் தேரே கண்ணின்
காணவும் இயைந்தன்று மன்னே; நாணி
நள்ளென் யாமத்தும் கண் படை பெறேஎன்;
புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப,
10
விளிந்தன்றுமாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே.

சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.

179. பாலை
இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென,
பந்து நிலத்து எறிந்து, பாவை நீக்கி,
அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள்
மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு,
5
யானும் தாயும் மடுப்ப, தேனொடு
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி,
நெருநலும் அனையள்மன்னே; இன்றே,
மை அணற் காளை பொய் புகலாக,
அருஞ் சுரம் இறந்தனள் என்ப-தன்
10
முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே.

மனை மருட்சி

180. மருதம்
பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி நாரை உரைத்தலின், செந்நெல்
விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன்
பலர்ப் பெறல் நசைஇ, நம் இல் வாரலனே;
5
மாயோள், நலத்தை நம்பி விடல் ஒல்லாளே
அன்னியும் பெரியன்; அவனினும் விழுமிய
இரு பெரு வேந்தர், பொரு களத்து ஒழித்த
புன்னை விழுமம் போல,
என்னொடு கழியும்-இவ் இருவரது இகலே.

தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது.