221-230

221. முல்லை
மணி கண்டன்ன மா நிறக் கருவிளை
ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய,
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க்
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க,
5
வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில்,
நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ,
செல்க-பாக!-நின் செய்வினை நெடுந் தேர்:
விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள்,
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க,
10
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப்
பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி,
''வந்தீக, எந்தை!'' என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே.

வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் பாகற்குச் சொல்லியது.-இடைக்காடனார்

222. குறிஞ்சி
கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினை
வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக்
கை புனை சிறு நெறி வாங்கி, பையென,
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று,
5
பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச்
செலவுடன் விடுகோ-தோழி!-பலவுடன்
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில்,
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட, காணாது,
பெருங் களிறு பிளிறும் சோலை அவர்
10
சேண் நெடுங் குன்றம் காணிய நீயே?

தோழி, தலைமகன் வரவு உணர்ந்து, சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-கபிலர்

223. நெய்தல்
இவள்தன், காமம் பெருமையின், காலை என்னாள்; நின்
அன்பு பெரிது உடைமையின், அளித்தல் வேண்டி,
பகலும் வருதி, பல் பூங் கானல்;
இன்னீர்ஆகலோ இனிதால் எனின், இவள்
5
அலரின் அருங் கடிப் படுகுவள்; அதனால்
எல்லி வம்மோ!-மெல்லம் புலம்ப!
சுறவினம் கலித்த நிறை இரும் பரப்பின்
துறையினும் துஞ்சாக் கண்ணர்
பெண்டிரும் உடைத்து, இவ் அம்பல் ஊரே.

பகற்குறி வந்து மீள்வானைத் தோழி இரவுக்குறி நேர்வாள் போன்று, அதுவும் மறுத்து, வரைவு கடாயது.-உலோச்சனார்

224. பாலை
அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை,
''பின்பனி அமையம் வரும்'' என, முன்பனிக்
கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே;
''புணர்ந்தீர் புணர்மினோ'' என்ன, இணர்மிசைச்
5
செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும்
இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயின்
''பிரியலம்'' என்று, தெளித்தோர் தேஎத்து,
இனி எவன் மொழிகோ, யானே-கயன் அறக்
கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறி
10
வில் மூசு கவலை விலங்கிய
வெம் முனை அருஞ் சுரம் முன்னியோர்க்கே?

தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் பெயர்த்தும் சொல் கடாவப்பட்டு,''அறிவிலாதேம் என்னை சொல்லியும், பிரியார் ஆகாரோ?'' என்று சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ

225. குறிஞ்சி
முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்
பொருத யானை வெண் கோடு கடுப்ப,
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
5
பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை
இரந்தோர் உளர்கொல்-தோழி!-திருந்து இழைத்
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்
பயந்து எழு பருவரல் தீர,
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே?

வன்புறை எதிர் அழிந்தது; பரத்தை தலைமகட்குப் பாங்காயின வாயில் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்.-கபிலர்

226. பாலை
மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;
உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்
பொன்னும் கொள்ளார், மன்னர்-நன்னுதல்!-
நாம் தம் உண்மையின் உளமே; அதனால்
5
தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து,
என்றூழ் நிறுப்ப, நீள் இடை ஒழிய,
சென்றோர்மன்ற நம் காதலர்; என்றும்
இன்ன நிலைமைத்து என்ப;
என்னோரும் அறிப, இவ் உலகத்தானே.

பிரிவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.-கணி புன்குன்றனார்

227. நெய்தல்
அறிந்தோர் ''அறன் இலர்'' என்றலின், சிறந்த
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே;
புன்னைஅம் கானல் புணர் குறி வாய்த்த
பின் ஈர் ஓதி என் தோழிக்கு, அன்னோ!
5
படு மணி யானைப் பசும்பூட் சோழர்
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்,
கள்ளுடைத் தடவில் புள் ஒலித்து ஓவாத்
தேர் வழங்கு தெருவின் அன்ன,
கௌவை ஆகின்றது-ஐய!-நின் அருளே.

வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, தோழி தலைமகனை வரைவு முடுகச் சொல்லியது.-தேவனார்

228. குறிஞ்சி
என் எனப்படுமோ-தோழி!-மின்னு வசிபு
அதிர் குரல் எழிலி, முதிர் கடன் தீர,
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடு நாள்,
பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து
5
அருளான்கொல்லோ தானே-கானவன்
சிறு புறம் கடுக்கும் பெருங் கை வேழம்,
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ,
அழுந்துபட விடரகத்து இயம்பும்
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே?

தோழி, சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது.-முடத்திருமாறனார்

229. பாலை
''சேறும், சேறும்'' என்றலின், பல புலந்து,
''சென்மின்'' என்றல் யான் அஞ்சுவலே;
''செல்லாதீம்'' எனச் செப்பின், பல்லோர்
நிறத்து எறி புன் சொலின்திறத்து அஞ்சுவலே;
5
அதனால், சென்மின்; சென்று வினை முடிமின்; சென்றாங்கு,
அவண் நீடாதல் ஓம்புமின்; யாமத்து,
இழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி,
உழையீராகவும் பனிப்போள் தமியே
குழைவான், கண்ணிடத்து ஈண்டித் தண்ணென,
10
ஆடிய இள மழைப் பின்றை,
வாடையும் கண்டிரோ, வந்து நின்றதுவே?

தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை ஆற்றுவித்துச் செல்ல உடன்பட்டது; செலவு அழுங்குவித்ததூஉம் ஆம்.

230. மருதம்
முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை,
கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை,
கணைக் கால், ஆம்பல் அமிழ்து நாறு தண் போது,
குணக்குத் தோன்று வெள்ளியின், இருள் கெட விரியும்
5
கயற்கணம் கலித்த பொய்கை ஊர!
முனிவு இல் பரத்தையை எற் துறந்து அருளாய்;
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க,
புதுவறம்கூர்ந்த செறுவில் தண்ணென
மலி புனல் பரத்தந்தாஅங்கு,
10
இனிதே தெய்ய, நின் காணுங்காலே.

தோழி வாயில் மறுத்தது.-ஆலங்குடி வங்கனார்