Primary tabs
4.3 இலக்கியச் சிறப்பு
ஒரு இலக்கியப் படைப்பு பலரால் படிக்கப்படுவதற்கும் பாராட்டப்படுவதற்கும் அதன் இலக்கிய நயமே காரணம் எனலாம். அது உணர்த்தும் சமூகவியல் சிந்தனையும் பிறிது ஒரு காரணம் ஆகலாம். எனவேதான் இலக்கியம் இலக்கியத்திற்காகவே (கலை கலைக்காகவே) என்ற கோட்பாடு எழுந்தது; இலக்கியம் வாழ்க்கையைக் காட்டும் காலக் கண்ணாடி என்பது இதன் மற்றொரு பகுதி. இவ்வகையில் சீவக சிந்தாமணி சோழர் காலம் முதல் இன்று அளவும் படிக்கப்பட்டும் பயிலப்பட்டும் வருவதற்கான காரணம் என்ன? அதன் இலக்கிய நயமே.
4.3.1 அணிநயம்
சிந்தாமணியின் யாப்பமைப்பும், உவமை முதலான அணி நயமும் இலக்கியச் சுவைஞர்களால் பாராட்டப்படாமல் இருக்க முடியாது. சிந்தாமணியின் யாப்பு பற்றிப் புறநிலைக் கட்டமைப்பில் முன்னர்க் கூறப்பட்டுள்ளதை அறியலாம். சீவக சிந்தாமணி விருத்த யாப்பில் அமைந்தாலும், ஆசிரியத்துறை, வஞ்சித்துறை, ஒரு பொருள்மேல் முன்றடுக்கிய கொச்சக ஒருபோகு முதலான யாப்பமைப்பையும் சிறப்பாகக் கையாண்டுள்ளார் என்பது சுவைத்து இன்புறத்தக்கது.
சீவக சிந்தாமணியின் அணிநயத்துக்கு இதோ ஒரு பாடல்: இலக்கணையின் (சீவகன் மணந்த ஒரு பெண்ணின் பெயர்) அழகில் மயங்கிய சீவகன் கூற்று இது. இலக்கணையின் கண்ணை நீல மலருக்கு ஒப்பிட்ட கவிஞர் அழகிய கற்பனை நயம்பட,
நிறைஓதம் நீர்நின்று நீள்தவமே
செய்யினும் வாழிநீலம்
அறையோ அரிவை வரிநெடுங் கண்
ஒக்கிலையால் வாழி நீலம்
கண் ஒவ்வாயேனும் களித்து நகுதி நின்
வண்ணம் இதுவோ மதுஉண்பார்
சேரியையோ வாழி நீலம்(சீவக சிந்தாமணி - 2514)
(ஓதம் = கடல்; அறையோ = கூறவோ; அரிவை = இலக்கணை)
(பொருள்: நீல மலரே! நீ கடலில் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாலும் இவள் கண்ணை ஒவ்வாய்; என்றாலும் தேன் உண்ட களிப்பால் நகுகின்றாய்! நீ மது அருந்துவார் பகுதியில் இருந்ததன் தொடர்பால் இவ்வாறு சிரிக்கின்றனையோ? அறியேன்.)
இங்கே காட்டிய பாடலில் உவமை நயம் சிறந்து நிற்பதைக் காணலாம்.
4.3.2 இலக்கிய உத்திகள்
இலக்கிய வெளியீட்டு நிலையில் காப்பியங்களுக்கே சிறப்பாக உள்ள உத்திகள் பல. காப்பியம் ஒரு வகையில் கூற்று வகைப்பாடல் (Narrative Poetry) ஆகும். இங்கு, ஆசிரியர் காப்பியத்தின் கதையைப் பாத்திரம் (Character) வாயிலாகவோ அல்லது ஆசிரியரின் மறை கூற்றாகவோதான் பாடிச் செல்வது இயல்பு. சில நேரங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதும் உண்டு. ‘யானும் சென்றேன் என்னெதிர் எழுந்து’ என்று சிலம்பில் இளங்கோ தன்னையும் ஒரு பாத்திரமாக இணைத்துக் கொள்கிறார். சிந்தாமணியில், ‘கோ வீற்றிருந்த குடிநாட்டு அணி கூறலுற்றேன்’, ‘அண்ணலங் கடிநகர் அமைதி செப்புவாம்’, ‘முக்குடையான் தாளினை என்தலை வைத்தேன்’ என 40 இடங்களில் ஆசிரியர் கூற்று வெளிப்படுகிறது.
● பின்னோக்கு உத்தி
பின்னால் நிகழ விருப்பதை, முன் உணர்த்துவதும், முன் நிகழ்ந்தவற்றைப் பின் உணர்த்துவதுமாகிய உத்திகளும், நாடக முரண் உத்தியும் சிந்தாமணியில் சிறப்புப் பெறுகின்றன. சீவகன் காந்தருவ தத்தையை மணப்பான் என்பது முன்னரே சோதிடர் வாயிலாக உரைக்கப்படுகிறது; இவ்வாறே பல பின் நிகழ்வுகளும் முன்னரே சுட்டிக் காட்டப்படுகின்றன. இசைப் போட்டிக்குச் சீவகன் வருவதைக் கண்டதுமே மடந்தை தோற்றாள் எனப் பின்னிகழ்வு சுட்டப்படுகிறது.
சீவகன் மத்திம நாட்டில் இருந்தபோது அவனைச் சந்தித்த நந்தட்டன், சீவகன் பிரிந்த பின் இராசமாபுரத்தில் நிகழ்ந்த செய்திகளை எல்லாம் தொகுத்துரைக்கிறான். விசயை கனவு, சுரமஞ்சரியின் தாயின் கனவு, கேமசரி கனவு பின் நிகழ்வை உணர்த்துவன. சுரமஞ்சரியின் தாய் நீரற்ற குளத்தைக் கனவில் காண்கிறாள்; இது சீவகன் பிரிவை முன் உணர்த்துகிறது. விசயை மலர்களால் நிறைந்த அசோகமரம் பூக்களுடன் சிதறி வீழ்வதாகவும், சிதறிய அசோக விதை பெரிதாக வளர்ந்து எட்டு மாலைகளுடன் நிமிர்ந்து நின்றதாகவும் கனவு காண்கிறாள். இது, சச்சந்தன் வீழ்ச்சியையும் பின் சீவகன் எட்டுப் பெண்களை மணந்து அரசு கட்டில் ஏறுவதையும் முன் உணர்த்துகிறது.
பறவைகளின் குரலும், பல்லியின் குரலும் கூடச் சீவக சிந்தாமணியில் பின் நிகழ்வை, முன் உணர்த்தும் உத்தியாகப் பயன்பட்டுள்ளன.
4.3.3 இசைப்பா அமைப்பு
இசைப் பாடல்களை அக உணர்வு வெளிப்பாட்டிற்கும் அற வழிபாட்டிற்கும் சிந்தாமணி ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். இவை, சுவைபட அமைந்து, சிலப்பதிகார இசைப் பாடல்களை நினைவுபடுத்துகின்றன. இத்தகைய இசைப் பாடல்களைச் சிந்தாமணியில் பரக்கக் காணலாம். சான்றிற்காக ஓரிரு பாடல்களை இங்குக் காண்போம்.
கருவி வானம் கான்ற புயலின்
அருவி அரற்றும் மலைஎன்கோ யான்
அருவி அரற்றும் மலைகண்டு அழுங்கும்
மருவார் சாயல் மனம் என்கோயான்(சீவக சிந்தாமணி - 725)
(கான்ற புயல் = பொழிந்த நீர், மழை)
இப்பாடல், கூதிர்கால வருணனையாக, தலைவியின் பிரிவாற்றாமையை உணர்த்துவதாக அமைகின்றது. சீவகன் பாடும் இசைப்பாடல் இது; இது கோவலன், மாதவி பாடும் இசைப்பாடல்களுடன் ஒப்புமை உடையதாக அமைகிறது.
இறை வழிபாடு குறித்த மற்றொரு பாடல் வருமாறு:
அடியுலகம் ஏத்தி அலர்மாரி தூவ
முடியுலக மூர்த்தி உறநிமிர்ந்தோன் யாரே
முடியுலக மூர்த்தி உறநிமிர்ந்தோன் மூன்று
கடிமதிலும் கட்டழித்த காவலன் நீஅன்றே(சீவக சிந்தாமணி-1245)
(அலர்மாரி = பூமழை; முடியுலக மூர்த்தி = இறைவன் (அருகன்); நிமிர்ந்தோன் = முத்தி அடைந்தோன்; கடிமதில் = காமம், வெகுளி, மயக்கம்)
இப்பாடல், சாரணர் வாழ்த்தாக அமைகின்றது. உலகமூர்த்தியை அடைபவர் முத்தி பெற்ற சாரணர்களே; அவர்கள் காமம், வெகுளி, மயக்கம் நீத்தவர்கள் என்பது பாடல் கருத்து. இவ்வாறு சீவகன் தன் இசைப்பாடல் மூலம் சாரணரைத் தொழுது புகழ்கிறான்.