தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

A0111-கலைகள்

  • 4.5 கலைகள்

    இலக்கியமே ஒரு கலையல்லவா? கலைக்குள் கலை என்பது போல இலக்கியம் பல கலைகளை நமக்கு எடுத்துரைக்கிறது. ஓர் இலக்கியம் தோன்றிய காலகட்டத்தில் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கலைகளை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. அதிலும் வரலாற்றுப் பெட்டகமாக மதிக்கப்பெறும் காப்பியங்களில் கலைகள் மிகச் சிறப்பாகவே சித்திரிக்கப்பெறுகின்றன. பொதுவாகத் தமிழ் இலக்கியத் திறனாய்வாளர்கள் சமணர்கள் இசைக்கு எதிர்ப்பு, கலைக்கு எதிர்ப்பு என்று சமயக் காழ்ப்புடன் பேசி வருவதை அறியலாம். ஆனால் உண்மை அதுவன்று. சமணத் தமிழ்ப் புலவர்கள் போன்று கலைகளைப் போற்றியவர்கள், கலைகள் பற்றிய இலக்கண இலக்கிய நூல்களைப் படைத்தவர்கள் வைதீக சமயத்தில் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவு கலைகளுக்கு முதன்மை தந்தவர்கள் சமணத் தமிழ்ப் புலவர்கள். சீவக சிந்தாமணியில் இடம் பெற்றுள்ள கலை பற்றிய செய்திகளைத் தொகுத்துக் கண்டால் இவ்வுண்மை விளங்கும்.

    4.5.1 இசைக்கலை

    சிலப்பதிகாரம் தொடங்கி, பல தமிழ்க் காப்பியங்களில் இசைக்கலை மிகச் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காண்கிறோம். சிலம்பின் அரங்கேற்று காதை ஓர் இசைக்கலைப் பெட்டகம். அது போன்று சீவக சிந்தாமணியில் காந்தருவதத்தையார் இலம்பகத்தில் நடத்தப் பெறும் இசைப்போட்டியும், அதற்காக அமைத்த இசை அரங்கும், அதிலே தத்தையும் - சீவகனும் பாடிய இசைத் திறனும் தமிழரின் இசைக் கலைப் புலமையை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இசைப் போட்டியில் கலந்து கொள்ள வரும் சீவகனிடம் யாழ் கொடுக்கப்படுகிறது. அவன் அதன் தன்மையும் நரம்பின் தன்மையும் பற்றிக் கூறுகிற செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

    “இந்த யாழ் நீரில் நின்று மெலிந்த மரத்தால் ஆனது. இது நீரில் நின்று அழுகிய மரத்தால் ஆனது. இந்த யாழ் நோயுற்ற மரத்தால் ஆனது. இந்த யாழ் இடி தாக்கிய மரத்தால் ஆனது. இந்த யாழ் சிறப்புடையதன்று. இந்த யாழ் வெந்த மரத்தால் ஆனது. இது முறிந்து வீழ்ந்த மரத்தால் ஆனது என்று பல யாழை விலக்கி, உகந்த நல்ல மரத்தாலான யாழைத் தேர்கிறான். பின்னர் யாழின் நரம்பின் முறுக்கை உடைத்து அதில் சிக்கியுள்ள முடியைக் காட்டி விலக்குகிறான்” என்று சுட்டப்படுகிறது.

    இதுபோன்று, காந்தருவதத்தை யாழிசையுடன் பாடுகிறபோது புருவம் ஏறாது, கண் ஆடாது, மிடறு வீங்காது, பல் தெரியாது, வாயை மிகைபடத் திறவாது பாடினாள் என்கிற செய்தி இடம் பெற்றுள்ளது. இது, இசைக் கலைஞர் எவ்வாறு பாட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக  அமைகின்றது.

    4.5.2 கட்டிட சிற்பக் கலைகள்

    சிந்தாமணியில் நகரச் சிறப்புக் கூறுகின்ற பகுதியில் அரண்மனை, மாட மாளிகை பற்றிப் பேசப்படுகிறது. இங்கு அக்காலக் கட்டிடக் கலைச் சிறப்பை உணரலாம். அரண்மனை மதிலில் ஒரே நேரத்தில் நூறுபேரைக் கொல்லும் சதக்கினி என்ற பொறி, களிறு, பாம்பு, கழுகு, புலி, குதிரை முதலானவற்றின் வடிவில் அமைக்கப்பட்ட பொறிகள் இருந்தனவாகக் குறிக்கப்படுகிறது. மாடங்கள் பல மாடிகளைக் கொண்டிருந்தன. அவற்றின் மேற்பகுதிகள் பானைவடிவில் அமைந்துள்ளன. மேற்கூரை தங்கம், வெள்ளி, பளிங்குகளால் வேயப்பட்டமை குறிப்பிடப்படுகிறது. சீவகன் சுதஞ்சணனுக்கும், ஆலமரத்துக்கும் கோயில் எடுத்தமையும் கட்டிட சிற்பக் கலைக்குச் சான்றாகும்.

    4.5.3 பிற கலைகள்

    ஆடல் கலை பற்றிய ஆடல், கூத்து, நாடகம் என்ற சொற்கள் சிந்தாமணியில் இடம் பெறுகின்றன. அனங்க மாலை, தேசிகப் பாவை ஆகிய இருவர்தம் ஆடல் சிறப்பாக அமைகிறது. சீவகன், சுதஞ்சணனுக்குக் கோயில் எழுப்பி, அவன் வரலாற்றை நாடகமாக நடிக்கச் செய்கிறான். சீவகன் அனங்கமாலைக்கு ஒப்பனை செய்தது ஒப்பனைக் கலைக்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது.

    வாழைக் குருத்து இலையை நகத்தால் கிள்ளிச் சில அழகிய வடிவங்களைச் செய்து மகளிர் மார்பில் அணிந்தனர். மலர்களை இணைத்து மாலையும் பந்தும் ஆக்கி, அதனுள் சில குறிகளை விரல் நுனியால் அமைத்துக் கனக மாலைக்குச் சீவகன் தன் காதலை வெளிப்படுத்துகிறான்.

    சச்சந்தன் விசயைக்காகத் தயார் செய்த எந்திர ஊர்தி (மயில்பொறி) பொறியியல் கலைக்கு எடுத்துக்காட்டு. சீவகன் குணமாலை உருவை ஓவியமாக எழுதிய செய்தி குறிக்கப்படுகிறது. பல இடங்களில் சோதிடக்கலை பற்றிய செய்தி இடம் பெறுகின்றது. இப்படி, தொட்ட தொட்ட இடமெல்லாம் கலையின் பெட்டகமாகச் சிந்தாமணி திகழ்வதைக் காணலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:19:38(இந்திய நேரம்)