Primary tabs
3.2 முன்னிலைப் பன்மை வினைமுற்று
முன்னிலைப் பன்மை வினைமுற்றுகள் என்பன உயர்திணைப் பலர்பாலுக்கும், அஃறிணைப் பலவின் பாலுக்கும் உரியனவாகும். ஏனைய வினைச் சொற்களைப் போல இவையும் தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும். இவற்றுள் தெரிநிலை வினைமுற்றுகள் பற்றி முதலில் காண்போம்.
3.2.1 தெரிநிலை வினைமுற்று
பார்த்தீர்கள்
பார்க்கிறீர்கள்
பார்ப்பீர்கள்என்பன முன்னிலைப் பன்மை தெரிநிலை வினைமுற்றுகளுக்குச் சான்றுகளாகும். இவ் வினைமுற்றுகள் பலரைப் பார்த்தும் பேசப்படலாம். அஃறிணையில் பலவற்றை நோக்கியும் பேசப்படலாம்.
முன்னிலைப் பன்மைக்குரிய வினைமுற்று விகுதிகள் இர், ஈர் என்பனவாகும். இதனை
இர் ஈர் ஈற்ற இரண்டும் இருதிணைப் பன்மை முன்னிலை என நன்னூல் ஆசிரியர் பவணந்தியார் (நூற்பா 336) கூறியுள்ளார்.
இன்றைய வழக்கில் நிற்கிறீர்கள், பேசினீர்கள் என்பன போல ரகர ஒற்றும், கள் விகுதியும் சேர்த்துப் பேசும் முறையே மிகுதியாக உள்ளது. இவை முன்னிலைப் பன்மை வினைமுற்றுகளாகும். இதே பொருளில் இந்த வினைமுற்றுகள் முற்காலத்தில் இர், ஈர் என்னும் விகுதிகளை மட்டும் பெற்றிருந்தன.
‘வந்தீர்கள்’ என்னும் இன்றைய வழக்கு முற்காலத்தில் ‘வந்தீர்’ என்று இருந்தது. இது இறந்தகாலம் உணர்த்துவது. இதுவே, நிகழ்காலப் பொருளில் வருகிறீர் அல்லது வருகின்றீர் என்பதாக வரும். எதிர்காலம் உணர்த்தும் பொழுது இச்சொல் ‘வருவீர்’ எனக் கூறப்படும்.
வேறு சில சான்றுகளைக் காண்போம்.
நீர் உண்டீர்-'ட்' இடைநிலை - இறந்தகால வினைமுற்றுநீர் உண்கின்றீர்-'கின்று' இடைநிலை - நிகழ்கால வினைமுற்றுநீர் உண்பீர்-'ப்' இடைநிலை - எதிர்கால வினைமுற்றுமேற்காட்டப் பெற்ற ‘ஈர்’ விகுதியைப் போல முன்னிலைப் பன்மை தெரிநிலை வினையில் ‘இர்’ விகுதியும் வழங்கி வந்தது. இப்பொழுது இர் விகுதி மிகுதியும் வழக்கில் இல்லை.
நீர் உண்டனிர்- (இர் விகுதி)- இறந்த காலம்நீர் உண்கின்றனிர்- (இர் விகுதி)- நிகழ் காலம்நீர் உண்பிர்- (இர் விகுதி)- எதிர் காலம்இவை முறையே உண்டீர்கள், உண்கிறீர்கள், உண்பீர்கள் என்னும் பொருள் உடையன. எனவே, முன்னிலைப் பன்மையில் தெரிநிலை வினைமுற்று விகுதிகளாக இர், ஈர் என்பன வரும் என இதுவரை பார்த்தோம். இவற்றில் உள்ள ரகர ஒற்றுதான் பன்மை உணர்த்துகிறது என்னும் உண்மை நினைவிற்கு உரியது.
3.2.2 குறிப்பு வினைமுற்று
முன்னிலைப் பன்மைக்கு உரிய குறிப்பு வினைமுற்றுச் சொற்கள், தெரிநிலை வினைக்குக் கூறப்பெற்ற இர், ஈர் என்னும் விகுதிகளையே பெற்று வரும். நீங்கள் நல்லவர்கள் என்னும் தொடரில் உள்ள நல்லவர்கள் என்னும் சொல் குறிப்பு வினைமுற்றுச் சொல் ஆகும். இப்பொருளில் வரும் நல்லீர் என்னும் சொல் ஈர் விகுதி பெற்றுள்ளது. புதுமையீர் என்பதும் இத்தகையதே. இவ் வினைமுற்றுச் சொற்கள் எந்த ஒரு காலத்தையும் வெளிப்படையாகக் காட்டவில்லை என்பதைக் காண்க.
இர் விகுதியும் இதுபோல் வரும். நீவிர் நெட்டையிர் (நீங்கள் நெடியவர்கள்), நீவிர் இன்சொல்லிர் (நீங்கள் இனிய சொற்களுக்குரியவர்கள்). இத்தொடர்களில் முன்னிலைப் பன்மைக் குறிப்பு வினைமுற்று விகுதியாக இர் விகுதி வந்துள்ளது. இர், ஈர் என்னும் இக்குறிப்பு வினைமுற்று விகுதிகள் உயர்திணையில் பலரையும், அஃறிணையில் பலவற்றையும் உணர்த்தக் கூடியனவாகும்.
3.2.3
படர்க்கையை உளப்படுத்தும் முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருவரையோ பலரையோ நோக்கி நீங்களும், அவர்களும் வந்தீர்கள் எனப் பேசுவதுண்டு. இதில் நீங்கள் என்பது முன்னிலையைக் குறிக்கும். அவர்கள் என்பது படர்க்கையைக் குறிக்கும். இருசாராரையும் சேர்த்துக் குறிக்க வந்தீர்கள் என்னும் சொல்லையே பயன்படுத்துகிறோம். வந்தீர்கள் எனும் இவ்வினைமுற்று முன்னிலையாரோடு, படர்க்கையாரையும் உள்ளடக்குவது. படர்க்கையாரையும் முன்னிலையாரோடு உளப்படுத்திச் சேர்த்துக் கூறுவதால், இது படர்க்கையை உளப்படுத்தும் முன்னிலைப் பன்மை என்று பெயர் பெறும்.
இவ்வாறு பழங்காலத்தில் உண்டீர் நீர் என்று கூறினர். இத்தொடரில் உள்ள ‘நீர்’ என்பதற்கு நீயும் அவனும் அல்லது நீயும் அவளும் அல்லது நீயும் அதுவும் என்னும் பொருளாகும். ‘உண்டீர்’ என்பது முன்னிலையில் உள்ளவரையும் படர்க்கையில் உள்ளவரையும் சேர்த்துச் சுட்டும் வினைமுற்றாகும்.
இதுபோன்று வரும் இன்னொரு சொற்றொடர்.
உண்டனிர் நீவிர். (நீவிர் = (நீயும், அவனும்) என்பது. ஏவல் நிலையிலும் இவ்வாறு வரும்.
சான்று:
உண்மின் நீர் என்பதற்கு உண்ணுங்கள் நீங்கள் என்று பொருள். இத்தொடரிலும் நீர் என்பதற்கு நீயும், அவனும் என்று பொருள் கொள்ளலாம்.
மேற்காணும் தெரிநிலை வினைமுற்றுகளைப் போன்று குறிப்பு வினைமுற்றுச் சொற்களும் வருதல் உண்டு.
‘நல்லீர் நீர்’ என்னும் தொடரில் நல்லீர் என்பது குறிப்பு வினைமுற்று. நீயும் அவனும் நல்லவர்கள் என்பது இத்தொடருக்குரிய பொருள். அதாவது கேட்போரையும், பேசப்படுபவரையும் சேர்த்து நீர் என்று ஒரே சொல்லால் குறிக்கிறோம். இவ்வாறு இச்சொல்லுக்குப் பொருள் கூறுவது இடச் சூழலுக்கு ஏற்பவே அமையும். முன்னிலைப் பலரை ‘நீர்’ என்ற சொல்லால்தான் குறிக்கிறோம். முன்னிலை, படர்க்கை ஆகிய இரு இடங்களில் உள்ளவர்களையும் நீர் என்னும் சொல்லாலேயே குறிக்கிறோம். எனவே இடத்திற்கேற்பவே இப் பெயர்ச்சொல்லும், இதற்குரிய வினைமுற்றுச் சொல்லும் பொருள் கொள்வதற்கு உரியன.
இதுவரை முன்னிலை ஒருமை, முன்னிலைப் பன்மை ஆகியவற்றுக்குரிய தெரிநிலை வினைமுற்றுகளும், குறிப்பு வினைமுற்றுகளும் எவ்வாறு அமைகின்றன எனப் பார்த்தோம். இவற்றுக்குரிய வினைமுற்று விகுதிகளையும் தெரிந்து கொண்டோம். தன் மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை தேடுவதன் மூலம் மீண்டும் இவற்றை நினைவுபடுத்திக் கொள்க.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I