தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

இடம்

  • தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூவகைப்படும். தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் குறிப்பிடுவது தன்மை. தனக்கு முன்னால் உள்ள ஒருவரையோ, பலரையோ குறிப்பிடுவது முன்னிலை, தன்மைக்கும் முன்னிலைக்கும் அயலாக உள்ளவற்றைக் குறிப்பிடுவது படர்க்கை.

    (எ.டு.)

    நான், நாம்
    -
    தன்மை
    நீ, நீங்கள
    -
    முன்னிலை
    அவன், அவள், அவர்,
    அது, அவை
    -
    படர்க்கை

    தன்மை முன்னிலை படர்க்கை மூவிடனே   (நன்னூல் : 266)

    தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடங்களில் ஒன்றின் இடத்திற்கு உரிய எழுவாய், சொற்றொடரில் இடம்பெறும் போது பயனிலை அதற்குரியதாக அமையாமல் வேறு இடத்திற்கு உரியதாக அமையுமானால் வழுவாகும்.

    (எ.டு.)

    நான் பேசினான்
    நீ பேசினேன்
    அவன் பேசினாய்

    முதல் தொடரில் ‘நான்’ என்பது தன்மை இடத்திற்குரிய எழுவாய். ‘பேசினான்’ என்பது படர்க்கை இடத்துக்கு உரிய வினைமுற்று.

    இரண்டாம் தொடரில் ‘நீ’ என்பது முன்னிலை இடத்திற்குரிய எழுவாய். ‘பேசினான்’ என்பது தன்மை இடத்திற்கு உரிய வினைமுற்று.

    மூன்றாம் தொடரில் ‘அவன்’ என்பது படர்க்கை இடத்துக்குரிய எழுவாய், ‘பேசினாய்’ என்பது முன்னிலை இடத்துக்கு உரிய வினைமுற்று.

    இவ்வாறு ஓர் இடத்திற்கு உரிய எழுவாய்க்கு வேறு இடத்திற்குரிய பயனிலை வருவது வழுவாகும்.

    ஓர் இடத்திற்கு உரிய எழுவாய்க்கு அதே இடத்திற்குரிய பயனிலை வருதல் இடவழாநிலையாகும். மேலே கூறிய எடுத்துக் காட்டுக்களைக் கீழே உள்ளவாறு வழுக்களைந்து அமைக்கலாம். 

    (எ.டு.)

    நான் பேசினேன்.
    நீ பேசினாய்
    அவன் பேசினான்

    இவ்வாறு தன்மை இடத்துக்கு உரிய எழுவாய், தன்மை வினைமுற்றோடும், முன்னிலை இடத்துக்கு உரிய எழுவாய், முன்னிலை வினைமுற்றோடும், படர்க்கை இடத்துக்குரிய எழுவாய், படர்க்கை வினைமுற்றோடும் வருதல் இடவழாநிலையாகும். ஒருமை எழுவாய்க்கு ஒருமைப்பயனிலையும் பன்மை எழுவாய்க்கு பன்மைப் பயனிலையும் வருதல் வேண்டும்.
     

    இருவேறு இடங்களுக்கு உரிய எழுவாய் ஒரு தொடரில் வரும் பொழுது, அவ்வெழுவாய்களின் பயனிலை எந்த இடத்திற்கு உரியது என்னும் சிக்கல் எழுகிறது.

    (எ.டு.)

    நானும் நீயும் போகிறோம்.
    நீயும் அவனும் போவீர்
    நானும் அவனும் போனோம்.

    இவ்வெடுத்துக்காட்டுகளில் முதல்தொடரில்,‘நான்’ என்னும் தன்மை ஒருமை எழுவாயும், ‘நீ’ என்னும் முன்னிலை ஒருமை எழுவாயும் ‘போகிறோம்’ என்னும் தன்மைப் பன்மை வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளன.

    இரண்டாவது தொடரில் ‘நீ’ என்னும் முன்னிலை ஒருமை எழுவாயும், ‘அவன்’ என்னும் படர்க்கை ஒருமை எழுவாயும் ‘போவீர்’ என்னும் முன்னிலைப் பன்மை வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளன. மூன்றாவது தொடரில் ‘நான்’ என்னும் தன்மை ஒருமை எழுவாயும், ‘அவன்’ என்னும் படர்க்கை ஒருமை எழுவாயும் ‘போனோம்’ என்னும் தன்மைப் பன்மை வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளன.

    இவ்வாறு முடிவது இலக்கணப்படி சரியன்று. ஆயினும் வேறுவகையில் குறிப்பிடுவது பொருத்தமன்று என்பதால் இவ்வாறு குறிப்பிடுவது வழுவமைதி ஆயிற்று.

    இருநோக்கு இவளுண்கண் உள்ளது     (குறள் : 1091)

    என்னும் குறளில் ‘இரு நோக்கு’ என்னும் பலவின்பால் எழுவாய், ‘உள்ளது’ என்னும் ஒன்றன்பால் வினைமுற்றைக் கொண்டு முடிந்தது. இவ்வாறு ஒருமையும் பன்மையும் மயங்கல் இலக்கணமன்று ஆதலின் வழுவமைதியாகும்.

    ஒருமையின் பன்மையும் பன்மையின் ஒருமையும்
    ஓரிடம் பிறவிடம் தழுவலும் உளவே (நன்னூல் : 380)

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 17:49:05(இந்திய நேரம்)