Primary tabs
-
6.5 வினா
வினாக்கள் ஆறு வகைப்படும் என்பது முன்னர்க் கூறப்பட்டது. அவற்றை நினைவில் கொள்க. வினாவின் வகைகள்,
1) அறிவினா
2) அறியாவினா
3) ஐயவினா
4) கொளல்வினா
5) கொடைவினா
6) ஏவல்வினாஎன்பனவாகும்.
வினாவின் எழுவாயாக வரும்பெயர்களின் திணை, பால் ஆகியனவும் வினாப் பயனிலைகளில் வரும் திணை, பால் ஆகியனவும் மாறி வருதல் வழுவாகும்.
(எ.டு.)
திணைவழு வினாக்கள்:
அங்கே கிடப்பது கட்டையா? மனிதனா?
பால்வழு வினாக்கள்:
அங்கே வருகிறவன் ஆணா? பெண்ணா?
மேலே கூறிய முதல் எடுத்துக்காட்டில் ‘கிடப்பது’ என்னும் அஃறிணைப் பெயர் எழுவாய்க்கு, வினாப் பயனிலையாக வருவன ‘கட்டை’ என்னும் அஃறிணைப் பெயரும் ‘மனிதன்’ என்னும் உயர்திணைப் பெயருமாகும்.
இரண்டாவது பிரிவு எடுத்துக்காட்டில் ‘வருகிறவன்’ என்னும் ஆண்பால் பெயர் எழுவாய்க்கு வினாப் பயனிலையாக வருவன ‘ஆண்’ என்னும் ஆண்பால் பெயரும் ‘பெண்’ என்னும் பெண்பால் பெயருமாகும்.
இவ்வாறு வினாத் தொடரின் எழுவாய்க்கு உரிய திணை, பால் ஆகியவற்றிற்கு மாறாக வினாப் பயனிலைகள் வருமானால் அது வினா வழுவாகும்.
இதேபோல் ஒரு வினாத் தொடரில் முதலும் சினையும் கலந்து (மயங்கி) வருதல் கூடாது. மயங்கி வருமானால் வழுவாகும்.
(எ.டு.) என்னைக் கண்டது கண்ணோ? கவிஞனோ?
இத்தொடரில் கவிஞன் என்பது முதல் குறித்த பெயராகும். கண் என்பது அம்முதலின் சினையாகும். இவ்விரண்டையும் ஒரு வினாத் தொடரில் சேர்த்து வினவுவது வழுவாகும்.
வினாவினும் செப்பினும் விரவா சினைமுதல்
(நன்னூல் : 387)
வினாவில் இடம்பெறும் எழுவாயின் திணையும் பாலும் மாறாமல் வினாப் பயனிலை வருவதே இலக்கண நெறிக்கு ஏற்புடையதாகும். இவ்வாறு இலக்கண நெறிக்கும் மாறுபாடு இல்லாமல் வரும் வினாத் தொடர்கள் வினா வழாநிலைத் தொடர்கள் எனப்படும்.
(எ.டு.)
அங்கே கிடப்பது கட்டையா? அல்லது
அங்கே கிடப்பவன் மனிதனா?என்று கேட்கலாம். ஆயினும் இவ்வினா ஒரே தொடராக அமையவில்லை. ஒரே தொடராக அமைக்க இவ்விரண்டையும் குறிக்கும் சிறப்புச் சொல்லால் கூறவேண்டும்.
(எ.டு.) அங்கே கிடக்கும் உரு மனிதனா? கட்டையா?
இத்தொடரில் இடம்பெற்றுள்ள ‘உரு’ என்பது மனிதன், கட்டை என்னும் இரண்டு திணைகளுக்கும் உரிய வடிவம் குறித்த சிறப்புச் சொல்லாகும்.
அதேபோல், வினாக்களில் இடம்பெறும் இருபால்களையும் குறிக்கும் சிறப்புச் சொல்லைப் பயன்படுத்தினால், வினாக்களில் பால் வழு தோன்றாது.
(எ.டு.) அங்கே வரும் மனிதர் ஆணா? பெண்ணா?
இத்தொடரில் இடம்பெற்றுள்ள ‘மனிதர்’ என்னும் சொல் ஆண், பெண் என்னும் இரு பாலிற்கும் உரியதாகும் என்பதால் வழு ஏற்படாது. இவ்வாறு இலக்கண நெறிக்கு ஏற்ப வினவுவது வினா வழாநிலையாகும்.
ஐயம் திணைபால் அவ்வப் பொதுவினும்
மெய்தெரி பொருண்மேல் அன்மையும் விளம்புப(நன்னூல் : 376)