Primary tabs
-
6.7 மரபு
அறிஞர் ஒரு பொருளை எச்சொல்லால் எவ்வாறு கூறினரோ அப்பொருளை அச்சொல்லால் அவர் வழங்கியவாறு பயன்படுத்துவதே மரபு எனப்படும். முந்தைய பாடத்தில் மரபு பற்றிக் கூறப்பட்டவற்றை நினைவில் கொள்க.
(எ.டு.) நாய் குரைத்தது
அறிஞர் ஒரு பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினர் என அறியாமல், அதற்கு மாறுபட வழங்குவது மரபு வழுவாகும்.
(எ.டு.)
நாய் பேசியது
பசுவின் பிள்ளைநாய் எழுப்பும் ஒலியை அறிஞர் குரைத்தல் என்பது மரபு. அதேபோல் மனிதர் கருத்து அறிவித்தலைப் பேசுதல் என்பது மரபு. முதல் தொடர் இவ்விரு மரபுக்கும் மாறுபட்டு அமைந்துள்ளது. நாய் பேசியது என்பது மரபு வழு.
பசு ஈன்றதைக் கன்று என்பது மரபு. மக்களின் குழந்தையைப் பிள்ளை என்பதும் மரபு. இவற்றிற்கு மாறாகப் பசுவின் பிள்ளை என்பது வழக்கன்று. மரபு வழுவாகும்.
அறிஞர் ஒரு பொருளைக் கூறியவாறே கூறுவது மரபு எனப்பட்டது. அதற்குத் தக்கவாறு மொழியை வழங்குவது மரபு வழாநிலையாகும்.
(எ.டு.)
நாய் குரைத்தது
பசுவின் கன்றுஎனக் கூறுவர் அறிஞர் என்பதால் அவ்வாறு வழங்குவதே மரபு வழாநிலை.
மேலும் பொருள்கள் இனமுள்ளனவும் இனமில்லாதனவும் உலகில் காணப்படுகின்றன.
(எ.டு.) தாமரை, ஞாயிறு
தாமரை இனத்தில் வெண்மையானதும் உள்ளது, செம்மையானதும் உள்ளது. இவ்வாறு ஞாயிறு என்னும் சூரியனில் வெவ்வேறு வண்ணம் உள்ளவை இல்லை. தாமரை எனத் தனியாகச் சொன்னால் எந்தத் தாமரை என்னும் வினா எழும். அதனால் அதனைச் செந்தாமரை என்றோ வெண்டாமரை என்றோ அடைமொழியுடன் சொல்ல வேண்டும். ஞாயிறு எனத் தனியாகச் சொன்னால் எந்த ஞாயிறு என்னும் வினா எழாது. எனவே ஞாயிறு எனத் தனிச் சொல்லால் குறிப்பதே முறை. அதனால்
செந்தாமரை, வெண்டாமரை
ஞாயிறுஎனக் குறிப்பிடுவது மரபு வழாநிலை ஆகும்.
பொருள்முதல் ஆறாம் அடைசேர் மொழியினம்
உள்ளவும் இல்லவும் ஆமிரு வழக்கினும் (நன்னூல் : 401)இனமுள்ள அடைமொழியோடு பொருள்களைக் குறிப்பிடுவதால், அதன் இனத்தையும் அதற்கு இனமல்லாததையும் அத்தொடர், உணர்த்துவது மரபு வழாநிலையாகும்.
‘வெள்ளைச் சேவல் வென்றது’ என்பது இனமுள்ள அடைமொழித் தொடர். இதனால் சேவலின் இனமான பிற கோழிகள் தோற்றன என்னும் பொருள் கிடைக்கிறது. இவ்வாறு இத்தொடர் அச்சேவலின் இனத்தைப் பற்றியும் பொருள் உணர்த்துகிறது.
மேலும், வெள்ளைச் சேவலின் உரிமையாளர் வென்றார் என்னும் பொருளும் அறியப்படுவதால் இனமல்லாததைப் பற்றியும் இத்தொடர் உணர்த்துகிறது.
அடைமொழி இனமல் லதும்தரும் ஆண்டுறின் (நன்னூல் : 402)
பொருள்கள் இயற்கைப் பொருள், செயற்கைப் பொருள் என இருவகை ஆகும். இவற்றுள் இயற்கைப் பொருளை இத்தன்மை உடையது எனக் கூறுவது மரபு வழுவமைதியாகும்.
(எ.டு.)
மலை பெரியது
தீ சுடும்
மழை பொழியும்இவ்வாறு மலை, தீ, மழை முதலிய இயற்கைப் பொருள்களைக் குறிப்பிடும்போது, அவற்றின் தன்மைகளையும் இணைத்துச் சொல்வது மரபு வழுவமைதியாகும்.
மலை என்றாலே மலைப்பைத் தரும் அளவிற்குப் பெரியது எனக் கூறாமலே பெறப்படும்.
தீ என்றாலே அது சுடும் தன்மை உடையது என்பது சொல்லாமலே அறியப்படும்.
மழை என்றாலே அது நீர் பொழியும் தன்மை உடையது என்பது விளங்கும்.
தன்மைகளை வெளிப்படக் கூறுதல் ‘மிகைபடக் கூறுதல்’ ஆகும். அவ்வாறு கூறுதல் வழுவாயினும் அறிஞர் அவ்வாறே கூறிவருவதால் அவை வழுவமைதி ஆயிற்று.
செயற்கைப் பொருள்களைக் குறிப்பிடும் பொழுது, காரணச் சொல்முன்வர ஆக்கச் சொல் பின்வரக் கூறுதல் வழாநிலையாகும். காரணச் சொல் இன்றி ஆக்கச் சொல் பெற்றும், ஆக்கம் இன்றிக் காரணச் சொல் பெற்றும், ஆக்கச் சொல்லும் காரணச் சொல்லும் மறைந்து வரக் கூறவதும் மரபு வழுவமைதியாகும்.
(எ.டு.) மருந்து தடவியதால் புண் குணம் ஆயிற்று
இத்தொடரில் ‘ஆயிற்று’ என்பது ஆக்கம். ‘மருந்து’ குணம் ஆவதற்குக் காரணம். ஆக்கமும் காரணமும் இடம் பெற்றுள்ளதால் இத்தொடர் மரபு வழாநிலைத் தொடராகும்.
(எ.டு.) எண்ணெய் தடவியதால் மயிர் கருப்பாயிற்று.
என்பதும் ஆக்கச் சொல்லும் காரணமும் பெற்ற மரபு வழாநிலைத் தொடர். இத்தொடரை,
எண்ணெய் தடவியதால் மயிர் கருத்தது
என்று ‘ஆயிற்று’ என்னும் ஆக்கச் சொல் இன்றியும் குறிப்பிடக் காணலாம்.
மயிர் கருப்பாயிற்று.
எனக் காரணம் இன்றியும் இத்தொடரைக் குறிப்பிடலாம்.
மயிர் கருத்தது
எனக் காரணமும் ஆக்கமும் இன்றியும் குறிப்பிடலாம். இம்மூன்று தொடர்களும் மரபு வழுவமைதி ஆகும்.
காரண முதலா ஆக்கம் பெற்றும்
காரணம் இன்றி ஆக்கம் பெற்றும்
ஆக்கம் இன்றிக் காரணம் அடுத்தும்
இருமையும் இன்றியும் இயலும் செயும்பொருள்(நன்னூல் : 405)
தொடர்ப்பொருள் வெளிப்படையாக அமையுமாறு கூறுதல் வழாநிலை. தொடரானது வெளிப்படையாக ஒரு பொருளும் குறிப்பாக வேறு பொருளும் உணர்த்துவது மரபு வழுவமைதி ஆகும்.
(எ.டு.) அவர் வைர நகை அணிந்தவர்
இத்தொடரின் பொருள் ஒருவர் வைர நகை அணிந்துள்ளார் என்னும் தகவலாகும். ஆனால் அந்தக் காரணத்திற்காக அன்றி ‘அவர் பெரும் செல்வந்தர்’ என்பதைக் குறிப்பாக உணர்த்துவதால் இத்தொடர், குறிப்புப் பொருள் உணர்த்தும் தொடர் ஆயிற்று. இவ்வாறு தொடரில் இல்லாத பொருளையும் ஒரு தொடரின் வழியாக அறிவிப்பது மரபு வழுவமைதி ஆகும்.
முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே (நன்னூல் : 408)
செய்யுளில் வரும் உவமை, உருவகங்களில் இரு திணைகளும் தம்முள் மயங்குதலும், சினையும் முதலும் தம்முள் மயங்குதலும் மரபு வழுவமைதியாகும்.
(எ.டு.)
மல்லன் மலையனைய மாதவரை வைதுரைக்கும் (சீவக. 2789)
என்னும் பாடல் அடியில் ‘மாதவர்’ என்னும் உயர்திணை, ‘மலை’ என்னும் அஃறிணையோடு மயங்கிற்று.
(எ.டு.)
தாழிரும் தடக்கையும் மருப்பும் தம்பியர்
தோழர்கள் தாள்களாச் சொரியு மும்மதம்
ஆழ்கடற் சுற்றமா அழன்று சீவக
ஏழுயர் போதகம் இனத்தொ டேற்றதே (சீவக. 775)என்னும் பாடலில் ‘தோழர்’ என்னும் உயர்திணை முதல், கை, மருப்பு, தாள் ஆகிய சினைப் பெயர்களான அஃறிணையோடும் முதல் சினைகளோடும் மயங்கின.
உருவக உவமையில் திணைசினை முதல்கள்
பிறழ்தலும் பிறவும் பேணினர் கொளலே (நன்னூல் : 410)