Primary tabs
1.1 புராணங்களும் தலபுராணங்களும்
பதினாறாம் நூற்றாண்டில் புராணங்களும், தல புராணங்களும் மிகுதியாக வெளிவந்தன.
1.1.1 புராணங்கள்
புராணம் என்னும் சொல் வடமொழியில் இருந்து தமிழில் புகுந்தது. கதை, வடமொழிப் புராணம், பழமை என்று பல பொருள்களை இச்சொல் குறிக்கும். தமிழில் முதன்முதலில் சிலப்பதிகாரத்தில் இறைவன் புராணன் என்று குறிக்கப்படுகிறான். தமிழில் புராண இலக்கியம் இருநிலையில் அமைகின்றது. ஒன்று வடமொழிப் புராணங்களின் தழுவல் மற்றும் மொழி பெயர்ப்பு. மற்றது தமிழுக்கே உரியனவாகத் தோன்றியவை. பதினாறாம் நூற்றாண்டில் சைவ, வைணவ, சமணப் புராணங்களும் மொழியாக்கப் புராணங்களும் தோன்றின. பதினாறாம் நூற்றாண்டில் வடமொழியில் உள்ள புராணங்களைத் தமிழில் எழுதும் முயற்சி வளர்ந்தது. இவற்றை மொழியாக்கப் புராணங்கள் எனலாம். இவற்றுள் தலையானது பத்தாயிரம் செய்யுட்களை உடைய கந்தபுராணம்.
- கந்தபுராணம்
இந்நூல் வடமொழியிலுள்ள சிவசங்கர சங்கிதையைத் தழுவிக் கச்சியப்ப சிவாச்சாரியாரால் எழுதப்பட்டது. முருகனின் தோற்றம், சிறப்பு, திருவிளையாடல், சூரபதுமனுடன் நிகழ்த்திய போர், தெய்வயானையை மணந்து கொள்ளுதல், வள்ளியின் காதல் முதலியவற்றை விரிவாகச் சொல்கிறது. ஆசிரியர் பழைய இலக்கிய மரபுகளைப் போற்றியும், வருணனைகளுடன் கற்பனை கலந்தும் கவிச்சுவை நிரம்பியும் பாடியுள்ளார்.
முருகன் சூரபதுமனுடன் நிகழ்த்திய போர்- சமணப் புராணங்கள்
சைனர்களுள் மண்டல புருடர் என்பவர் வடமொழி சமணப் புராணமாகிய ஆதிபுராணத்தைத் தமிழில் இயற்றி ஸ்ரீ புராணம் எனப் பெயரிட்டார். அது மணிப்பிரவாள நடையில் இயற்றப்பட்டது. கய சிந்தாமணி என்ற சமண நூலும் மணிப்பிரவாளத்தில் எழுதப்பட்டதே. இயல்பான தமிழ்நடையில் வாமனமுனிவர் என்பவரால் மேருமந்தர புராணம் இயற்றப் பெற்றது.
1.1.2 தலபுராணங்கள்
தலபுராணங்கள் அக்காலத்தில் மக்கள் உள்ளங்களை மிகக் கவர்ந்து இருந்தன. நாட்டுப் படலம், நகரப் படலம் என முதலில் அமையும் பகுதிகள் இலக்கியச் சுவையுடன் அமைக்கப்பட்டன. புலவர்கள் இயற்கையழகு பற்றியும், நிலவளம் பற்றியும் உழவர் தம் வாழ்க்கை பற்றியும் கண்ட கனவுகளை எல்லாம் அந்தந்தத் தல புராணங்களுள் அமைத்து நாடுகளையும், ஊர்களையும் சிறப்பித்தார்கள். அவற்றை அந்தந்த நாட்டு மக்கள் படித்துத் தம் நாடு மற்றும் ஊர் மீது பெருமையும் பற்றும் கொண்டு திகழ்ந்தார்கள். கொடியவர்களும் அதிகாரச் செருக்கு மிகுந்தவர்களும் துன்பமுற்று, மனம் திருந்திக் கோயில்களுக்கு வந்து வழிபட்டு நல்லவர்களாக மாறியதாகத் தலபுராணக் கதைகள் கூறும். கதைகேளாடு கலந்து கலை இன்பம் ஊட்டத் தலபுராணங்கள் பயன்பட்டன. பதினாறாம் நூற்றாண்டில் தருமபுர மடத்தைச் சார்ந்த புலவர்கள் திருமழபாடி, திருவொற்றியூர் போன்ற தலங்களுக்குப் புராணங்கள் பாடினர். நிரம்ப அழகிய தேசிகர் திருப்பரங்கிரிப் புராணம், சேது புராணம் என்னும் தலபுராணங்களை இயற்றினார். வடநாட்டுத் தலமாகிய காசியைப் பற்றி அதிவீரராம பாண்டியர் காசிக்கண்டம் என்ற நூலை இயற்றினார். திருமலை நாதர் சிதம்பர புராணம் பாடினார்.