Primary tabs
1.2 திருவிளையாடற் புராணம்
மதுரையில் இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்களை மையமாகக் கொண்டது திருவிளையாடற் புராணம். நடையிலும் அன்பு விளைக்கும் தன்மையிலும் இந்நூல் இறையனார் நிகழ்த்திய திருவிளையாடல்களைப் பற்றி எழுந்துள்ள சுந்தர பாண்டியம், வேம்பத்தூரார் திருவிளையாடல், திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், கடம்பவனப் புராணம் முதலிய நூல்களைவிட மேம்பட்டது.
மதுரை திருக்கோயில்- ஒரு திருவிளையாடல் காட்சி
சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த காட்சி- நூலாசிரியர்
இந்நூலை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர். இவர் தஞ்சை மாவட்டத்துத் திருமறைக்காட்டில் தோன்றியவர். சைவ வேளாள ஆசிரிய மரபில் பிறந்தவர்.
- நூலின் அமைப்பு
68 படலங்களுடன் 3363 பாடல்கள் கொண்ட திருவிளையாடற் புராணம், மதுரைக் காண்டம், கூடல் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்ற 3 காண்டங்களை உடையது.
- நூலின் சிறப்பு
இறைவனின் 64 திருவிளையாடல்களையும் காப்பியச் சுவையுடன் கூறுகிறது. கூடல் காண்டத்தில் விறகு விற்ற படலத்தில் இறைவனின் இசைக்கு உயிர்கள் மயங்கிய விதத்தைப் பின்வருமாறு விவரிக்கிறார் பரஞ்சோதியார்:
தருக்களும் சலியா முந்நீர்ச் சலதியும் கலியா நீண்ட
பொருப்பிழி யருவிக் காலும் நதிகளும் புரண்டு துள்ளா
அருட்கடல் விளைத்த கீத வின்னிசை யமுதம் மாந்தி
மருட்கெட அறிவன் தீட்டி வைத்தசித் திரமே யொத்த(பா. 37)
(தரு = மரம்; முந்நீர் = கடல்; பொருப்பு = மலை; மாந்தி = அருந்தி; அறிவன் = சிற்பவல்லான்)
“மரங்களும் அசையாமல், கடல்களும் ஒலிக்காமல், உயர்ந்த மலையில் இருந்து இழியும் அருவியாகிய கால்களும் ஆறுகளும் புரண்டு துள்ளாமல் மயக்கம் நீங்கக் கருணைக் கடலாகிய இறைவன் பாடி அருளிய இன்னிசைக் கீதமாகிய அமுதத்தைப் பருகிச் சிற்பநூல் வல்லான் எழுதி வைத்த சித்திரங்களை ஒத்திருந்தன” என்பது பாடலின் பொருளாகும்.
திருவாலவாய்க் காண்டத்தில் மண் சுமந்த படலத்தில் ஆசிரியர் இறைவன் எல்லா உயிர்களிலும் உள்ளான் என்பதை ஒரு பாடல் மூலம் காட்டுகிறார். பிட்டுக்கு மண் சுமந்து, பாண்டியனிடம் பிரம்படி படுகிறான் இறைவன். இறைவன் மீது பட்ட அந்த அடி எல்லா உயிர்களின் மேலும் விழுந்ததாம்.
பரிதியு மதியும் பாம்புமைங் கோளும் பன்னிறம் படைத்த நாண்மீனும்
இருநிலம் புனல்கால் எரிகடுங் கனல்வா னென்னும் ஐம்பூதமும் காரும்
சுருதியும் ஆறுசமய வாணவருஞ் சுரர்களும் முனிவருந் தொண்டின்
மருவிய முனிவர் கணங்களும் பட்ட மதுரைநாயகனடித் தழும்பு
(பா. 54)
(ஐங்கோள் = செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ; நாண்மீன் = நட்சத்திரம்; கால் = காற்று ; கார் = மேகம் ; சுருதி = வேதம்)
இரு சுடர்களும் ராகு, கேது என்ற இரு பாம்புகளும் ஐந்து கோள்களும் நட்சத்திரங்களும் ஐம்பூதங்களும் வேதங்களும் அறுவகைச் சமயத்திற்குரிய தேவர்களும் அசுரர்களும் முனிவர்களும் முனிவர் கூட்டங்களும் மதுரையின் நாயகன் மீது பட்ட அடியைப் பட்டன என வியந்து கூறுகிறார் பரஞ்சோதியார்.