தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

உரையாசிரியர்களும் மொழிநடையும்

  • 1.4 உரையாசிரியர்களும் மொழிநடையும்

    தமிழ்மொழியில் உயர்ந்த இலக்கணங்களுக்கும் இலக்கியங்களுக்கும் நுட்பமான உரைகளும் நயமான விளக்கமும் எழுதி அவற்றைச் சிறப்படையச் செய்தவர்கள் உரையாசிரியர்கள். உரையாசிரியர்களில் திவ்வியப் பிரபந்த உரையாசிரியர்கள் பயன்படுத்திய நடை ‘மணிப்பிரவாள நடை’ எனப்படுகிறது. சமணர்களும் இந்நடையைப் பயன்படுத்தினாலும் வைணவர்களே அதிகம் பயன்படுத்தினர்.

    1.4.1 உரையாசிரியர்கள்

    இந்நூற்றாண்டில் பிள்ளைலோகம் ஜீயர், நஞ்சீயர் என்ற வைணவ உரையாசிரியர்கள் தோன்றினர்.

    • பிள்ளைலோகம் ஜீயர்

    வரதாசாரி என்ற இயற்பெயர் கொண்ட இவர் துறவறம் ஏற்றபின் லோகம் ஜீயர் என்று பெயர் பெற்றார். பிள்ளைலோகாசாரியாரில் இருந்து இவரை வேறுபடுத்தவே, லோகம் ஜீயர் எனப்பட்டார். சைவப் பழிப்பு மிக்க இவர் மணிப்பிரவாள நடையில் பல நூல்களை எழுதியுள்ளார். இராமானுச நூற்றந்தாதி, அர்த்த பஞ்சகம், சப்த காதை முதலிய நூல்களையும், பிரபந்தத் தனியன்களையும் இயற்றினார். மணவாள மாமுனிகளின் நூல்களுக்கு மணிப்பிரவாள நடையில் உரையெழுதினார். திருமந்திரார்த்த அரும்பத விளக்கம் என்ற நூலையும் எழுதியுள்ளார்.

    • நஞ்சீயர்

    திருநாராயணபுரத்தில் மாதவாசார்யா என்ற பெயர் கொண்டு வாழ்ந்த இவர் ‘சீரங்க நாதர்’ எனவும் அழைக்கப் பெறுகிறார். திருவாய்மொழிக்கு 9000படி உரை, திருப்பள்ளியெழுச்சி, திருவிருத்தம், பெரிய திருமொழி என்பவற்றிற்கு வியாக்யானமும் (உரை விளக்கம்) எழுதியுள்ளார்.

    1.4.2 மணிப்பிரவாள நடை

    முத்தும் பவளமும் கலந்த கோவை போன்ற அழகுடைய நடை மணிப்பிரவாள நடையாகும். இது வடமொழிச் சொற்கள் விரவிய தமிழ் உரைநடையாகும். சமணரும் வைணவருமே இந்நடையைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த நடை ‘படி’ என்ற அளவு முறையைக் கொண்டது. திவ்வியப் பிரபந்த உரைகளை ஆறாயிரப் படி, ஈராயிரப் படி, முப்பதாயிரப் படி, இருபத்து நாலாயிரப் படி என வழங்குவர். ஆறாயிரப் படி என்றால் ஆறாயிரம் கிரந்த அளவினது என்று பொருள். அதாவது, ஒரு கிரந்தம் என்றால் ஒற்றெழுத்துக்களை விலக்கி விட்டு உயிரும் மெய்யுமாக அமைந்த 32 எழுத்துக்களை உடையதாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 19-08-2017 16:53:09(இந்திய நேரம்)