Primary tabs
3.3 வைணவ இலக்கியம்
இந்நூற்றாண்டில் வைணவ இலக்கியத்தை அணி செய்தவை சிற்றிலக்கியங்களே. வீரை ஆளவந்தார், சீகாழி அருணாசலக் கவிராயர், நல்லாப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.
3.3.1 வீரை ஆளவந்தார்
வைணவ வேதாந்தக் கடல் என்று போற்றப் பெறுபவர் ஆளவந்தார். வடமொழி ஞானவாசிட்டத்தின் ஒரு பகுதியை மொழிபெயர்த்துள்ளார். அதில் 6 பிரகரணங்கள், 43 கதைகள், 2055 விருத்தங்கள் உள்ளன. எளிய நடையில் அமைந்த இந்நூலை ஞான வாசிட்ட வமல ராமாயணம் என்றும் கூறுவர். இராமபிரானுக்கு ஆத்ம ஞானத்தை வசிட்டர் கூறியதால் இப்பெயர் வந்தது. இம்மொழி பெயர்ப்பு நூலின் விளைவாக திருஷ்டி சிருஷ்டி வாதம் (காட்சி, படைப்பு, வாதம்) பரவியது. அத்வைத, வேதாந்த மடங்களில் பாடம் கேட்கத் தகும் நூலாக இதனைப் போற்றுவர்.
தவங்களாற் றெய்வ நீராற் சாத்திரங் களினாற் போகாப்
பவங்களை யுயர்ந்தோர் பாதம் பணிந்துபற் றறுக்க
வேண்டும்.
அவங்களாங் காரங் கோப மறவுந் தேய்ந் தியற்கை யான
சுவங்களி டைந்து நன்னூற்று றைநின்றோ ருயர்ந்த
மேலோர் (27)(பவம் = பிறவி; அவங்கள் = நன்மை தாராதவை ; சுவம் = நன்மைவழி)
என்ற ஞான வாசிட்டப் பாடலில் தவங்களாலும் புனித நீராலும் சாத்திரங்களாலும் போகாத பாவங்களை உயர்ந்தோர் பாதம் பணிந்து பற்று அறுக்க வேண்டும். அவ்வுயர்ந்தோர் யாரெனில் அகங்காரம், கோபம் என்பன நீக்கி இயற்கையிலே நல்வழி நடந்து உயர்ந்தோர் என்று கூறுகிறார் வீரை ஆளவந்தார்.
43 கதைகள் மூலமாக நீதி கூறப்படுகிறது.
3.3.2 சீகாழி அருணாசலக் கவிராயர்
அருணாசலக் கவிராயர் சீகாழி என்ற தலத்தின் மேல் ஒரு புராணமும் ஒரு கோவையும் பாடியுள்ளார். அனுமார்மேல் ஒரு பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். அசோமுகியின் கதையை அமைத்து ஒரு நாடகம் எழுதினார். நல்ல கீர்த்தனைப் பாடல்களாகப் பாடி இயற்றிய இராம நாடகக் கீர்த்தனை அவருக்கு நல்ல புகழைத் தேடித் தந்தது. முழுதும் இசைப்பாடல்களாலேயே நாடகம் அமையுமாறு அந்நூல் உள்ளது. நாடக அரங்கில் மக்கள் விரும்பிச் சுவைக்கக் கூடிய மெட்டு அமைத்து, கற்பனை நயத்தோடு பாடியுள்ளார்.
ஸ்ரீ ராமச் சந்திரனுக்கு ஜய மங்களம் - நல்ல
திவ்ய முகச்சந்திரனுக்கு சுப மங்களம். (ஸ்ரீரா)
மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு
ஈராறு ராமனுக்கு ரவிகுல ஸோமனுக்கு
கொண்டல் மணிவண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்
கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம் . . . . .என்ற பாடல் இராம நாடகக் கீர்த்தனையில் உள்ளது. இவர் தில்லையாடி மணலி முத்துக் கிருட்டிண முதலியாரிடம் இராம நாடகத்தை அரங்கேற்றினார்.
3.3.3 நல்லாப்பிள்ளை
பதினெட்டாம் நூற்றாண்டில் பாரதத்தைக் கற்பதும் சொற்பொழிவு செய்வதும் தமிழர்களிடையே செல்வாக்குப் பெற்றன. வில்லிபுத்தூரார் இயற்றிய பாரதமே அதற்கு அப்போது பெரிதும் பயன்பட்டது. வில்லிபாரதம் மிகச் சுருக்கமாக உள்ளதாக அக்காலத்தார் கருதினர். இக்குறையைப் போக்க நல்லாப்பிள்ளை வில்லிபாரதத்தில் உள்ள 4300 செய்யுளோடு மேலும் 16,400 செய்யுள் பாடி விரிவாக்கி ஒரு பாரத நூல் பாடினார். இது நல்லாப்பிள்ளை பாரதம் என்று அழைக்கப்பட்டது. “வில்லிபுத்தூராரின் செய்யுள் போலவே ஓசையும் நடையும் அமையப் பாடிச் சேர்த்த காரணத்தால், இந்தத் தொண்டு பழைய நூலொடு இணைந்த இலக்கியப் படைப்பாகவே விளங்குகிறது” என்கிறார் மு.வ.