தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சிற்றிலக்கியங்கள்

  • 3.4 சிற்றிலக்கியங்கள்

    சென்ற நூற்றாண்டைப் போலவே, இந்த நூற்றாண்டிலும் மடத்தின் ஆதரவு பெற்ற புலவர்கள், பெரும் புலவர்கள், மன்னர்களின் ஆதரவு பெற்றோர் முதலியவர்கள் சிற்றிலக்கியங்களை வளர்த்தனர். இந்த நூற்றாண்டில்தான் பள்ளு இலக்கியங்களில் சிறப்புப் பெற்ற முக்கூடற்பள்ளு, குறவஞ்சிகளில் புகழ்பெற்ற திருக்குற்றாலக் குறவஞ்சி, சதக இலக்கியங்களில் புகழ் பெற்ற அறப்பளீசுர சதகம், தண்டலையார் சதகம் என்பன தோன்றின. தீயவன் ஒருவன் திருந்தி வாழ்வதாகக் கூறும் நொண்டி நாடகம் இந்நூற்றாண்டில் தோன்றி ஏற்றம் பெற்றது. பகழிக் கூத்தர் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்ற நூலை இயற்றினார். பக்திச் சுவையும் இலக்கிய நயமும் மிகுந்த நூல். பிற்காலத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களில் சிறப்பு பெற்ற ஒன்று.

    3.4.1 பள்ளு இலக்கியம்

    உழவுத் தொழிலில் ஈடுபட்டு வந்த மக்கள் பாடி வந்த நாட்டுப்பாடல்கள் பல நமக்குக் கிடைக்காமல் போயின. உழவர் பாடல்களின் வடிவம், பொருள் ஆகியவை பற்றி விளக்கும் நூல்கள் இல்லை. ‘பள்’ என்பது தாழ்ந்த, பள்ளமான நன்செய் நிலங்களையும் அங்குச் செய்யப்படும் உழவுத் தொழிலையும் குறிப்பது. ஆகவே, பள்ளு என்பது உழவரின் பாட்டுக்குப் பெயராக அமைந்தது. தற்போது கிடைக்கும் பள்ளு நூல்களில் சிறப்புப் பெற்றது 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ சமயப் புலவர் ஒருவர் எழுதிய முக்கூடற்பள்ளு ஆகும். அது ஒரு கதையாக நாடக வடிவில் அமைந்துள்ளது.


    உழவுத் தொழில் உழவன்

    பண்ணையார் என்பவர் நில முதலாளி. பள்ளன் என்பவன் உழுது பயிரிடும் தொழிலாளி. அவனுக்கு இரண்டு மனைவிகள் (பள்ளிகள்). இருவரும் வேறுவேறு சமயத்தினர். இவர்தம் வாழ்க்கையைச் சுற்றிப் பள்ளு நூல் அமைகிறது. ஆற்றில் வெள்ளம் வருதல், மாடுகளின் இயல்பு, விதை வகைகள், உழவு, நடவு, அறுவடை முதலிய தொழில் வகைகள், கிராமத்து மக்களின் பேச்சு, பழக்க வழக்கம் என்பன முக்கூடற்பள்ளுவில் கூறப்படுகின்றன.

    பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே வாதங்களும் பூசல்களும் இருந்தன. அவற்றைப் புலவர் தம் பள்ளு இலக்கியத்தில் ஏசல் என்ற பகுதியாகப் புகுத்தினார்.

    பள்ளு இலக்கியங்கள் அந்தந்த ஊர்களைப் புகழ்வதற்காகவும் அங்கே வாழ்ந்த செல்வர்களைப் புகழ்வதற்காகவும் பின்னர் இயற்றப்பட்டன. மொத்தம் 40 பள்ளு நூல்கள் இருப்பதாக மு.வ., கூறுகிறார். என்னயினாப் புலவர் என்பவர் மேடையில் நடிக்க ஏற்ற வகையில் முக்கூடற் பள்ளுவை முக்கூடற் பள்ளு நாடகமாகப் பாடினார். பல இடங்களில் நடிக்கப்பட்டும் வந்தது.

    3.4.2 சதக இலக்கியம்

    17, 18, 19ஆம் நூற்றாண்டுகளில் சதக இலக்கியம் பெரும் செல்வாக்குப் பெற்றது. நூறு பாடல்களைக் கொண்டு அமைப்பது சதகம் எனப்படும். திண்ணைப் பள்ளிக்கூடங்களில் சதகம் கற்பது கட்டாயமாக இருந்தது. எளிதில் மனப்பாடம் செய்யும் வகையில சதக நூல்கள் அமைந்திருந்தன. தாம் வாழ்ந்த பகுதியில் கண்டு, கேட்டுப் பெற்ற செய்திகளைக் கொண்டு புலவர் ஒருவர் சதகம் பாடினார். உடனே வேறு சிலர் நாட்டின் மற்றப் பகுதிகளையும் அவற்றின் நிகழ்ச்சிகளையும் தொகுத்துச் சதகங்களாகப் பாடினர். தொண்டை மண்டல சதகம், பாண்டி மண்டல சதகம், கொங்கு மண்டல சதகம், சோழ மண்டல சதகம் என்பன அப்படித் தோன்றியவை. இச்சதக நூல்கள் மூலம் தமிழ்நாட்டு வரலாறு ஓரளவு அறியப்படுகிறது.

    இதுபோன்றே அடியார்களின் வரலாறுகளைத் தொகுத்துக் கூறும் திருத்தொண்டர் சதகம், பழமொழிகளால் அமையப் பெற்ற தண்டலையார் சதகம், கோவிந்த சதகம், தெய்வங்களை வழிபடும் முறையில் அமைந்த திருவண்ணாமலை சதகம், திருப்பதி சதகம் என்பனவும் பிற சமயத்தவர் இயற்றிய அரபிச் சதகம், இயேசு நாதர் திருச்சதகம், நீதிகள் கூறும் குமரேச சதகம் என்பனவும் குறிப்பிடத்தக்கன.

    சதக நூல்களில் நூறு பாடல்களில் ஒவ்வொன்றிலும் இறுதியடியோ அதற்கு முந்திய பகுதியோ ஒரே வகையான தொடரைப் பெற்று முடியும். உதாரணமாக ’மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே’ என்று குமரேச சதகத்தில் ஒவ்வொரு செய்யுளும் முடியும். வறுமை வந்தால் விளையும் நிலை பற்றிக் குமரேச சதகம் பின்வருமாறு கூறுகிறது:

    வறுமைதான் வந்திடில் தாய்பழுது சொல்வாள்
        மனையாட்டி சற்று மெண்ணாள்
    வாக்கிற் பிறக்கின்ற சொல்லெலாம் பொல்லாத
        வசனமாய் வந்து விளையும்
    சிறுமையொடு தொலையா விசாரமே யல்லாது
        சிந்தையில் தைரிய மில்லை
    செய்யசபை தனிலே சென்றுவர வெட்கமாம்
        செல்வரைக் காண நாணும்
    உறுதிபெறு வீரமும் குன்றும் விருந்துவரில்
        உயிருடன் செத்த பிணமாம்
    உலகம் பழித்திடும் பெருமையோர் முன்புசென்
        றொருவரொடு செய்தி சொன்னால்
    மறுவசன முஞ்சொலார் துன்பினில் துன்பமிது
        வந்தணுகி டாதருளுவாய்
    மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
        மலைமேவு குமரே சனே

    (பழுது = குற்றம்; மனையாட்டி = மனைவி; விசாரம் = கவலை; செய்ய = சிறந்த)

    3.4.3 நொண்டி நாடகம்

    நகைச்சுவைக்கும் எள்ளல் சுவைக்கும் இடம் தரும் இலக்கியமான நொண்டி நாடகம் என்ற இலக்கிய வகை இந்த நூற்றாண்டில் தோன்றிச் செழித்து வளர்ந்தது. தீயவனான நொண்டி ஒருவன் தான் திருந்திய கதையை, ’சிந்து’ என்னும் யாப்பு வகையில் பாடியதால் ‘நொண்டிச் சிந்து’ என்றும் கூறப்பட்டது. சீதக்காதி என்ற முஸ்லீம் வள்ளல் வாழ்ந்த காலத்தில் துன்புற்ற கொள்ளைக்காரன் ஒருவன் கடைசியில் மனம் மாறி மெக்காவுக்குச் சென்று திருந்திக் காலும் பெற்றுத் திரும்பியதாகப் பாடப்படும் நாடகமே சீதக்காதி நொண்டி நாடகம் எனப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் மாரிமுத்துப் புலவர் என்பவர் திருக்கச்சூர் நொண்டி நாடகம் இயற்றிப் புகழ் பெற்றார். ஐயனார் நொண்டி நாடகம் என்பதும் பலர் போற்றிய நொண்டி நாடகமாகும்.

    3.4.4 குறவஞ்சி

    குறவஞ்சி என்ற தொடர் குறவர் குலத்துப் பெண் என்று பொருள்படும். குறவஞ்சி இலக்கியம் ஒருவகையான நாடகம். பெருமைக்குரிய தலைவன் உலாவரக் கண்ட தலைவி அவன் மீது காதல் கொள்கிறாள். காரணம் கேட்ட தோழியிடம், தலைவனிடம் தூது சென்று தன்னைப் பற்றிக் கூறி வருமாறு வேண்டுவாள் தலைவி. அந்நிலையில் குறத்தி தெரு வழியே வருவாள். அவளிடம் குறி கேட்கத் தோழி அழைப்பாள். குறத்தி தன் மலை, தொழில் வளம் கூறி தலைவியின் காதல், தலைவன் புகழ் பற்றிக் கூறுவாள். தலைவியின் காதல் நிறைவேறும் என்றும் குறி கூறுவாள். அதைக் கேட்ட தலைவி, குறத்திக்குப் பல வகையான அணிகலன்களைப் பரிசாகக் கொடுப்பாள். குறத்தி தன் மலைக்குத் திரும்ப, அவள் கணவனாகிய குறவன் அவ்வணிகலன்கள் பற்றிக் கேட்பான். அவள் பதில் சொல்வாள். நாடகம் முடியும். நாடகத்தின் இடையே வரும் கட்டியங்காரன் நடிக்கும் மாந்தர்களையும் அவர்தம் பெருமைகளையும் அவையோர்க்கு எடுத்துச் சொல்வான். நாடகம் முழுதும் செய்யுளாகவே இருக்கும்.

    குறவஞ்சி நூல்களுள் இன்றும் நாடகமாக நடிக்கப் பெறும் சிறப்பினை உடையது திரிகூட ராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சியே. இந்நூலைக் குறத்திப் பாட்டு என்றும் குறவஞ்சி நாடகம் என்றும் கூறுவர். இந்நூலாசிரியரைப் பாராட்டும் முகமாக மதுரையை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கர் குறவஞ்சி மேடு எனும் நிலப்பகுதியை இனாமாக வழங்கிக் கௌரவித்து உள்ளார்.


    குற்றால மலை

    திருக்குற்றால மலையினைக் கவிராயர் வர்ணிக்கும்போது, ”கவனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர்” என்று கூறுகிறார். கன்னங்களில் குளிகையை அடக்கிக் கொண்டு பறக்கும் சித்தர் வந்து தங்கும் சிறப்புடையது இக்குற்றால மலை என்பதே அதன் பொருள். முருகனிடம் தனக்கு ஆறுதலைத் தரவில்லையே எனத் தலைவி கேட்பதை,

    அஞ்சு தலைக்குள் ஆறுதலை வைத்தார் - எனது மனதில்
    அஞ்சு தலைக் கோர் ஆறுதலை வையார்

    என்று பாடுகிறார்.

    தன்னை ஆதரித்த வள்ளலைத் தன் படைப்பில் இரண்டு இடங்களில் பாடியுள்ளார் கவிராயர். சைவ சமயத்தைப் போற்றும் குறவஞ்சியை அடியொற்றிக் கிறித்தவ, இசுலாமியப் புலவர்களும் கூடத் தங்கள் சமயங்களின் பெருமையை விளக்கும் வண்ணம் குறவஞ்சி பாடினர் எனில் இதன் சிறப்பை என்னென்பது.

    திரிகூடராசப்பக் கவிராயர் குற்றாலத் தலபுராணம், குற்றால மாலை, குற்றாலச் சிலேடை, குற்றால யமக அந்தாதி என்ற நூல்களையும் படைத்து உள்ளார். குமரகுருபரர் இயற்றிய மீனாட்சி அம்மை குறம் குறவஞ்சி இலக்கியத்தில் அமைந்தாலும் அது நாடகமாக அமையவில்லை.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.

    கவிராட்சதர் என்று புகழப்படுபவர் யார்?

    2.

    பத்து சைவ சாத்திர நூல்களை எழுதியவர் யார்?

    3.

    ‘மகாராஜா துறவு’ என்ற நூலை எழுதியவர் யார்?

    4.

    ‘குறத்திப் பாட்டு’ என்று கூறப்படும் நூல் எது?

    5.

    ‘வைணவ வேதாந்தக் கடல்’ என்று புகழப்படுபவர் யார்?

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2017 15:34:16(இந்திய நேரம்)