தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சிற்றிலக்கியப் புலவர்கள்

  • 3.5 சிற்றிலக்கியப் புலவர்கள்

    இந்த நூற்றாண்டில் மடங்களைச் சேர்ந்த பெரும்புலவர்கள் சிற்றிலக்கியங்களைத் தம் ஞானாசிரியர் மீதும் தம் ஊர் மீதும் தம் ஊர் இறைவன் மீதும் பாடினர். வள்ளல்களால் ஆதரிக்கப் பெற்றவர்கள் அவர்களைப் பாடினர். இசுலாமிய, கிறித்தவச் சமயத்தவர்கள் கூட இதனால் சிற்றிலக்கியங்களைப் போற்றினர். எனவே சைவ, வைணவச் சமயங்களுக்கே உரியதாக இருந்த சிற்றிலக்கிய வகைகள் பரந்து விரிந்தன.

    3.5.1 தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்

    திருவாவடுதுறை ஆதீனத் தம்பிரானான இவர் தொண்டை நாட்டு தொட்டிக்கலையில் வாழ்ந்ததால் இப்பெயர் பெற்றார். இவர் சிவஞான முனிவரின் மாணவர். தம் ஆசிரியர் மீது கீர்த்தனைகள், துதி, விருத்தங்கள் பாடினார். நாட்டுப்பாடல் பாங்கில் பல தனிப்பாடல்களை இயற்றியுள்ளார். தம் ஞானாசிரியரான அம்பலவாண தேசிகர் மீது பஞ்சரத்தின மாலை, வண்ணம், ஆனந்தக் களிப்பு என்பன பாடியுள்ளார். தவிர திருவாவடுதுறைக் கோவை, திருக்கலசைக் கோவை, சிலேடை வெண்பா, திருக்கலசை சிதம்பரேசர் சந்நிதிமுறை, திருக்கலசை வண்ணம், திருக்கலசை பஞ்சரத்தினம், திருக்கலசை பரணி, திருக்கலசைக் கட்டியம் என்பன பாடியுள்ளார்.

    3.5.2 கந்தப்பையர்

    கச்சியப்ப முனிவரின் மாணவரான இவர் வீர சைவராகத் திகழ்ந்தார். தணிகை ஆற்றுப்படை, தணிகையுலா, தணிகைக் கலம்பகம், தணிகை அந்தாதி, தணிகைப் பிள்ளைத் தமிழ், தணிகைப் புராணம் என்னும் நூல்களைப் பாடினார். சிவப்பிரகாச சுவாமிகளைப் போன்றே, திருச்செந்தூரைப் பற்றி நிரோட்டக யமக அந்தாதி பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    3.5.3 பலபட்டடை சொக்கநாதப் பிள்ளை

    பலபட்டடை = பண்டமுள்ள அறை. மதுரை மன்னர்களிடம் பலபட்டடைக் கணக்கு அலுவல் பார்த்ததால் இவர் மரபினர்க்கு இப்பெயர் ஏற்பட்டது. கன்னிவாடி ஜமீன்தார் நரசிங்க நாயக்கரால் புரக்கப் பெற்ற இவர், அவர்மீது வளமடல் ஒன்று பாடினார். மதுரைச் சொக்கநாதர் - அங்கயற்கண்ணி மீது தனிப்பாடல் பல பாடினார். மதுரை மும்மணிக் கோவை, இராமேசுவரத்தைப் பற்றிய தேவையுலா, திண்டுக்கல்லைப் பற்றிய பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது, அழகர் கிள்ளை விடு தூது என்ற நூல்களைப் பாடியுள்ளார்.

    3.5.4 கந்தசாமிப் புலவர்

    கட்டபொம்மன் காலத்தவரான இவர், முத்தாலங்குறிச்சியில் வாழ்ந்தவர். சீதக்காதி நொண்டி நாடகம், செந்திற் பெருமான் நொண்டி நாடகம், திருவனந்தபுரம் நொண்டி நாடகம் என்ற நூல்களைப் பாடியுள்ளார். திருவிதாங்கூர் மன்னரால் புரக்கப் பெற்றவர்.

    3.5.5 மாரிமுத்தாப் பிள்ளை

    ”இந்நூற்றாண்டின் பிரபந்த வேந்தர்” என்று அழைக்கப் பெற்றவர். மாரிமுத்தாப்பிள்ளை முத்தமிழ்ப் பெரும்புலவர். ஆதி மூலிசர் குறவஞ்சி, ஆதிமூலிசர் நொண்டி நாடகம், அநீதி நாடகம், புலியூர் வெண்பா, புலியூர் சிங்காரவேலர் பதிகம், சிதம்பரேசர் விறலி விடு தூது, வருணாபுரி விடங்கேசர் பதிகம் என்பவற்றுடன் பல சித்திரக் கவிகள், தனிப்பாடல்கள், வண்ணங்கள், இசைப்பாக்கள் என்பவற்றையும் பாடியுள்ளார்.

    3.5.6 தத்துவராயர்

    தத்துவக் கருத்துகளை நாட்டுப் பாடல் வடிவங்களாகத் தந்தவர். அஞ்ஞவதைப் பரணியும் மோகவதைப் பரணியும் இவரியற்றிய புகழ் பெற்ற நூல்கள். அம்மானை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஊசல் முதலிய பாடல்களைத் திருவாசகத்தைப் பின்பற்றி இயற்றியுள்ளார். இவர் பாடிய பரணி நூல்களில் அரசர்களின் போர்க்களங்கள் இல்லை. மோகமும் அஞ்ஞானமும் ஞானத்தால் வெல்லப்படுதலை இப்போர்கள் குறிக்கின்றன. இவருடைய மோகவதைப் பரணியில்,

    தொகுத்த நிதி பலகோடி யுண்டெனினும் தொல்லையிலே
    வகுத்தவகை யல்லாது துய்ப்பவரார் மண்ணிலே

    (தொல்லையில் = முன்பு ; துய்ப்பவர் = அனுபவிப்பவர்)

    என்றும்,

    ஒன்றிரண்டே யுடுப்பதுவு முண்பதுவும் நாழியே
    என்றுமொரு வன்கிடையு மிருசாணுக் கெண்சாணே
                                                           (638, 64)

    (கிடை = படுக்கை ; எண்சாண் = எட்டுச் சாண் நீளம்)

    என்று ஊழின் வலிமையையும் பாடுகிறார்.

    3.5.7 அபிராமி பட்டர்

    சரபோசி மன்னனிடம் அமாவாசையைப் பௌர்ணமி என்று தவறாகக் கூறி அதனை உண்மையாக்கினவர் அபிராமி பட்டர். இவர் திருக்கடவூரில் வாழ்ந்த ஆதிசைவர். இவர் பாடிய அபிராமி அந்தாதி உமையம்மையிடம் பேரன்பு விளைக்க வல்லது. அபிராமி அந்தாதியை, பட்டர் பாடி முடித்த பின் அம்மை தன் திருத்தோட்டினை மேலே எறிந்து மதி போல ஒளிவிடச் செய்தாள். கீழ்க்காணும் பாடல் பாடி முடித்தவுடன் அவ்விந்தை நிகழ்ந்ததாகக் கூறுவர்.


    திருக்கடவூர் அபிராமி அம்மன்

    விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
    வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்
    பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்
    குழிக்கே அழுந்துங் கயவர்தம் மோடு என்னைக்
                                                 கூட்டினியே

        (அபிராமி அந்தாதி - 79)

    (வெம்பாவம் = கொடிய பாவம்; கூட்டு = நட்பு)

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2017 15:41:29(இந்திய நேரம்)