தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உரைநடை வளர்ச்சி

 • 6.1 உரைநடை வளர்ச்சி

  மக்கள் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியினால் உரைநடை நூல்கள், சிறுகதை, நாவல், நாடகம் போன்றவை மிகுதியாக வெளிவந்தன.

  6.1.1 உரைநடை நூல்கள்

  ராபர்ட்-டி-நொபிலி, பெஸ்கி எனும் வீரமாமுனிவர், சிவஞான முனிவர், ஆறுமுக நாவலர், இராமலிங்கர், செல்வக்கேசவராய முதலியார் போன்றோரால் தமிழ் உரைநடை வளர்ச்சி பெற்றது.

  விடுதலைக்கு முன் கவிதை, கட்டுரை என்ற இரண்டு துறையிலும் புதுமை படைத்தார் பாரதி. அவருக்குப் பின் பலதுறையினைச் சார்ந்தோர் உரைநடை இலக்கியத்தை வளர்த்தனர். வ. ராமசாமி எனும் ‘வ.ரா’, புதுமைப்பித்தன், சேதுப்பிள்ளை, செகவீர பாண்டியனார், சோமசுந்தர பாரதியார், அண்ணா, மு. கருணாநிதி என்போரின் நடை தமிழ் உரைநடையில் முத்திரை பதித்தவை.

  காலந்தோறும் தமிழ் உரைநடை வளர்ந்து வந்துள்ள விதமும் சான்றோரின் கவனத்திற்கு வந்துள்ளது.

  • வ.சு. செங்கல்வராய பிள்ளை - தமிழ் உரைநடை வரலாறு.
  • வி. செல்வநாயகம் - தமிழ் உரைநடை வரலாறு
  • அ.மு. பரமசிவானந்தம் - தமிழ் உரைநடை
  • மா. இராசமாணிக்கனார் - இருபதாம் நூற்றாண்டு தமிழ் உரைநடை வளர்ச்சி
  • மா. இராமலிங்கம் - புதிய உரைநடை
  • மு. அருணாசலம் - இன்றைய தமிழ் வசனநடை

  என்ற நூல்கள் உரைநடை வகைகள், அவை வளர்ந்த விதம் பற்றி ஆராய்கின்றன. இதன் வளர்ச்சியாக ஜெ. நீதிவாணன் என்பார் நடையியல் என்ற நூலை எழுதினார். இ. சுந்தரமூர்த்தி நடையியல் - ஓர் அறிமுகம் என்ற நூலை எழுதினார். இதன் பின் பல ஆராய்ச்சி நூல்களும் ஆய்வேடுகளும் வெளிவந்துள்ளன.

  6.1.2 உரைநடை முன்னோடிகள்

  மேலும் இருபதாம் நூற்றாண்டில் உரைநடையை வளர்த்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களைப் பற்றிப் பார்ப்போம்.

  • இ.மு. சுப்பிரமணியப் பிள்ளை

  தமிழ்ப் பெரும் புலவரான இவர், சித்த மருத்துவரும் ஆவார். உலகப் பொதுமறை, திருக்குறள் ஒழுக்க முறை, உலகப் பொதுச் சமயம், தம்பிரான் தோழர், நெல்லை மாவட்டக் கோவில் வரலாறு, இராமாயண ஆராய்ச்சி, திருமுருகாற்றுப்படை விளக்கவுரை, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் வரலாறு (5 பகுதிகள்) முதலியனவற்றை எழுதித் தமிழ் உரைநடையை வளர்த்து உள்ளார். கலைச்சொல்லாக்க மாநாடுகளும், தமிழ்த்தாய் என்னும் காலாண்டிதழும் நடத்தினார்.

  • ச. தண்டபாணி தேசிகர்

  இவர் திருக்குறள் அமைப்பும் அழகும், திருவாசகப் பேரொளி, திருக்குறள் உரைவளம், கணபதி, முருகன், ஆடவல்லான், சக்தி, சைவத்தின் மறுமலர்ச்சி, முதல் திருமுறை, முதற்கடவுள் வினாயகர், முழுமுதற் கடவுள் நடராஜர் என அறுபதுக்கும் மேற்பட்ட அரிய தமிழ் நூல்களைப் படைத்துள்ளார்.

  • லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்

  இவர் கட்டுரைக் கோவை, சங்ககாலத் தமிழர் வாழ்வு, வாழ்க்கை வளம், தொல்காப்பியச் செல்வம், நோக்கு, பத்துப்பாட்டு வளம், சோழவேந்தர் மூவர், எட்டுத் தொகைச் செல்வம் முதலிய நூல்களைப் படைத்தார்.

  • அ.ச. ஞானசம்பந்தன்

  இவர் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும், கம்பன்கலை, நாடும் மன்னனும், அரசியர் மூவர், தம்பியர் இருவர், அகம், புறம், மகளிர் வளர்த்த தமிழ், குறள் கண்ட வாழ்வு, தேசிய இலக்கியம் போன்ற நூல்களைப் படைத்தவர். இலக்கியக் கலை என்ற நூல் வழித் தமிழில் இலக்கியத் திறனாய்வுக்கு வழிவகுத்தவர்.

  • மு. சண்முகம் பிள்ளை

  இவர் வரலாற்றுமுறைத் தமிழகராதியை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தவர். சிற்றிலக்கிய வளர்ச்சி, சிற்றிலக்கிய வகைகள், அகப்பொருள் மரபும் குறளும், குறள்யாப்பும் பாட வேறுபாடும் போன்ற பல உரைநடை நூல்களையும் 300-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

  • குன்றக்குடி அடிகளார்

  இவர் இந்நூற்றாண்டின் அப்பர் என்று போற்றப் பெறுபவர். பொதுமைச் சிற்பி. வள்ளுவர் உலகம், குறள் வாழ்வு, உவமை நலம், அப்பர் அமுது, திருவாசகத்தேன், புனிதநெறி, வாழ்க்கை விளக்கு என 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தமிழகம் என்ற திங்கள் ஏட்டின் ஆசிரியராகவும் இருந்தார்.

  • மு.மு. இசுமாயில்

  சென்னை கம்பன் கழகத் தோற்றுநர்களில் ஒருவரான இவர் தம் நீதியியல் நோக்கில் இலக்கியப் போக்கினை அணுகி நுணுகி ஆராயும் அறிஞர். மும்மடங்கு பொலிந்தன, செவிநுகர் கனிகள், மூன்று வினாக்கள், உலகப்போக்கு, இலக்கிய மலர்கள் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

  • இராஜாஜி

  இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகத் திகழ்ந்தவர் இராஜகோபாலச்சாரி. இவர் விமோசனம் என்ற மாத இதழை நடத்தினார். ராஜாஜி கதைகள், ராஜாஜி கட்டுரைகள், ராஜாஜி மணிமொழிகள், ராஜாஜி உவமைகள், பஜகோவிந்தம், பாற்கடல், வள்ளுவர் வாசகம், சக்ரவர்த்தித் திருமகன், பித்தளையும் பொன்னும், வியாசர் விருந்து என 54 நூல்களை எழுதியுள்ளார்.

  உரைநடையின் பிற துறைகளான கடித இலக்கியம், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்று இலக்கியம் என்பனவும் காலத்திற்கேற்ப மாற்றங்களுடன் வளர்ந்து வருகின்றன.

  6.1.3 சிறுகதை

  சிறுகதை வளர்ச்சிக்கு என்று தனி இதழ் தோன்றியுள்ளது. விளம்பரச் சிறுகதைகள், சமூகச் சீர்திருத்தக் கதைகள், புதிய உள்ளடக்கம் கொண்டவை எனச் சிறுகதை பன்முகம் கொண்டு திகழ்கிறது.

  • சுந்தரராமசாமி

  காகங்கள் என்ற இலக்கிய அமைப்பினை நடத்தும் இவர் அக்கரைச் சீமையில், பிரசாதம், பல்லக்குத் தூக்கிகள், பள்ளம் என்ற சிறுகதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

  • கு. அழகிரிசாமி

  திருநெல்வேலி மாவட்டத்தில் வாழும் கிராம மக்களின் வாழ்வையும், பழக்கவழக்கங்களையும் எடுத்துக் காட்டுபவர் கு.அழகிரிசாமி. இவரது அன்பளிப்பு, திரிவேணி, ராஜா வந்திருக்கிறார் போன்ற கதைகள் புகழ் பெற்றவை.

  • விந்தன்

  இவர், ஏழைத் தொழிலாளியாகத் தம் வாழ்க்கையைத் தொடங்கிய எழுத்தாளர். மனித நேயம் கொண்டு சமுதாய அவலங்களை விமர்சிப்பவர். முல்லைக் கொடியாள், ஒரே உரிமை, சமுதாய விரோதி, ஏமாந்துதான் கொடுப்பீர்களா? நாளை நம்முடையது, இரண்டு ரூபாய் போன்ற கதைத் தொகுதிகளைப் படைத்துள்ளார்.

  • அண்ணா


  அண்ணா

  சமுதாயச் சீர்திருத்தத்தை நோக்கமாக உடையவை இவரது கதைகள். போலிச் சமயவாதிகளைச் சாடுதல், மூடப்பழக்க வழக்கங்கள், சகுன, சாதக நம்பிக்கைகளைச் சாடுதல், வர்க்கப் போராட்டம், சமுதாய ஏற்றத்தாழ்வு எனப் பலதரப்பட்ட கருத்துகளைக் கூறுபவை இவரது கதைகள். செவ்வாழை, சொர்க்கத்தில் நரகம், பேய் ஓடிப்போச்சு, சொல்வதை எழுதேன்டா, ராஜபார்ட் ரங்கதுரை போன்றவை புகழ்பெற்ற கதைகள்.

  • மு. கருணாநிதி

  இவர் பழக்கூடை, தன்னடக்கம், வாழ முடியாதவர்கள், சங்கிலிச்சாமி, கிழவன் கதை, அரும்பு, முதலைகள், தப்பிவிட்டார்கள், நளாயினி போன்ற சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

  • அகிலன்

  கதை அமைப்பிலும் பாத்திரப் படைப்பிலும் நடையிலும் தனித்தன்மை பெற்றவர் எனத் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் அவர்களால் பாராட்டப் பெற்ற அகிலன் 18 சிறுகதைத் தொகுதிகளை எழுதியுள்ளார். குழந்தை சிரித்தது, சகோதரர் அன்றோ, ஒருவேளைச் சோறு, நெல்லூர் அரிசி, ஆண் - பெண், எரிமலை என்பன அவற்றுள் சில.

  • ஜெயகாந்தன்

  தமிழ்ச் சிறுகதையில் தனக்கென ஒரு தடம் பதித்த எழுத்தாளர் இவர். உதயம், ஒரு பிடிசோறு, இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா, சுமைதாங்கி, மாலைமயக்கம், யுகசந்தி, புதிய வார்ப்புகள், குருபீடம் என்பன போன்ற பல தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

  • சு. சமுத்திரம்

  சமூக அங்கத எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். இவர், வர்க்கப் போராட்டம் பற்றிப் பல சிறுகதைகளைப் படைத்துள்ளார். குற்றம் பார்க்கில், உறவுக்கு அப்பால், ஒரு சத்தியத்தின் அழுகை, காகித உறவு என்ற சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். ஒரே ஒரு ரோஜா, போதும் உங்க உபகாரம் என்பன சிறந்த சிறுகதைகள்.

  • பிறர்

  இவர்களைத் தவிர சுஜாதா, ஆதவன், ரா.கி.ரங்கராஜன், வண்ணதாசன், வண்ண நிலவன், பாவண்ணன், மேலாண்மை பொன்னுச்சாமி, பூமணி, அம்பை, திலகவதி போன்றோரும் சிறுகதை எழுதி வருகின்றனர்.

  மொழிபெயர்ப்பின் மூலம் பல நல்ல சிறுகதைகள் தமிழில் அறிமுகம் ஆகியுள்ளன. சாகித்ய அகாதெமியும், நேஷனல் புக் டிரஸ்ட்டும், இலக்கியச் சிந்தனை அமைப்பும் தமிழ்ச் சிறுகதை நூல்களை வெளியிட்டு வருகின்றன.

  6.1.4 நாவல்

  தொடக்கக்கால நாவல்களைப் பின்பற்றியே விடுதலைக்குப் பின்னும் நாவல்கள் எழுதப்பட்டாலும் ஆன்மீக நாவல், தெய்வீக நாவல், காந்தீய நாவல்கள், இன-வட்டார, வர்க்க, அறிவியல், நனவோடை எனப் பல்வகையில் நாவல் வளர்ச்சி அடைந்தது. எனினும் இவற்றை வரலாற்று, சமுதாய, அரசியல் நாவல்கள் என்ற பிரிவிற்குள் அடக்கி விடலாம். முதல் மானிடவியல் நாவலான குறிஞ்சித்தேன், சத்தியாக்கிரகம் பற்றிய நாவலான பலாத்காரம் போன்ற சில நாவல்கள் குறிப்பிடத்தக்கன.

  • அரு. ராமநாதன்

  வீரபாண்டியன் மனைவி என்ற நாவலைப் பத்து ஆண்டுகளாகத் தொடர்கதையாக எழுதினார். அசோகன் காதலி, குண்டுமல்லிகை, நாயனம், சௌந்தரவடிவு என்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.

  • அண்ணா

  குமரிக்கோட்டம், பார்வதி பி.ஏ, ரங்கோன் ராதா, கபோதிபுரக் காதல், குமாஸ்தாவின் பெண், கலிங்கராணி போன்ற நாவல்களை எழுதியுள்ளார்.

  • கொத்தமங்கலம் சுப்பு

  தில்லானா மோகனாம்பாள், ராவ்பகதூர் சிங்காரம், பந்தநல்லூர் பாமா, மிஸ் ராதா ஆகிய நாவல்கள் படைத்த இவர் நடிகர்; இயக்குநர்.

  • மு.வரதராசனார்

  செந்தாமரை, கள்ளோ? காவியமோ?, அந்தநாள், அல்லி, மலர்விழி, பாவை, கரித்துண்டு, வாடாமலர், அகல்விளக்கு, கயமை, பெற்றமனம் என்ற நாவல்களை எழுதினார்.

  • தி. ஜானகிராமன்

  அமிர்தம், மோகமுள், அன்பே ஆரமுதே, அம்மா வந்தாள், உயிர்த்தேன், செம்பருத்தி, மலர்மஞ்சம், மரப்பசு போன்ற நாவல்களில் தஞ்சை மண்ணின் மணம், பேச்சு, ஆண் - பெண் உறவுச் சிக்கல்கள் அழகாகச் சித்தரிக்கப் பெற்றுள்ளன.

  • ஜெகசிற்பியன்

  ஜீவகீதம், மண்ணின் குரல், கிளிஞ்சல் கோபுரம், காணக் கிடைக்காத தங்கம், சொர்க்கத்தின் நிழல், காவல் தெய்வம், இனிய நெஞ்சம், தேவதரிசனம், நாயகி நற்சோணை, மகரயாழ் மங்கை, பத்தினிக்கோட்டம், நந்திவர்மன் காதலி எனச் சமூகப் புதினங்களும் வரலாற்றுப் புதினங்களும் படைத்துள்ளார்.

  • சாண்டில்யன்

  ஐம்பது நாவல்கள் படைத்திருந்தாலும் யவன ராணி, உதய பானு, கன்னிமாடம், மலைவாசல், ஜலதீபம், ராஜதீபம், பல்லவ திலகம், ஜீவபூமி, மஞ்சள் ஆறு போன்றவை குறிப்பிடத்தக்கன.

  • தமிழ்வாணன்

  இவர் சங்கர்லால் என்ற துப்பறியும் நிபுணரைக் கற்பனையாகப் படைத்து உலவ விட்டவர். கருநாகம், கருகிய கடிதம், சங்கர்லால் துப்பறிகிறார், கடலில் தெரிந்த கை, துப்பாக்கி முனை என 76 மர்ம நாவல்கள் படைத்துள்ளார்.

  • க.நா. சுப்ரமணியம்

  பசி, பொய்த்தேவு, ஏழுபேர், ஒருநாள், அசுரகணம், விடுதலையா?, வாழ்ந்தவர் கெட்டால், அவரவர் பாடு, ஆட்கொல்லி, இரண்டு பெண்கள், குறுக்குச் சுவர், பெரிய மனிதன் என்பன இவரின் நாவல்கள். இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.

  • லா.ச. ராமாமிருதம்

  புத்ர, அபிதா, கல்சிரித்தது, பாற்கடல் என்ற இவரது நாவல்களில் இருண்மைப் பண்பு படர்ந்திருக்கும். தமது மந்திரச் சொற்களால் படிப்பவரை மயங்க வைத்து விடுகிறார். இவர் புறநிகழ்ச்சிகளை விட அகவுணர்வுகளுக்கு முக்கியத்துவம் தருபவர்.

  • அகிலன்

  தன் நாவல்களில் எல்லாம் பெண்மைக்கே முதலிடம் தந்தவர் இவர். பாவை விளக்கு, சித்திரப்பாவை, எங்கே போகிறோம், பொன்மலர், வெற்றித் திருநகர், பால்மரக் காட்டினிலே என 20 நாவல்களைப் படைத்தவர்.

  • கோ.வி. மணிசேகரன்

  இதுவரை 130 நாவல்கள் படைத்திருந்தாலும், வரலாற்றுப் புதின ஆசிரியராகவே போற்றப்படுகிறார். இவரது நாவல்களில், ஒரு தீபம் ஐந்து திரிகள், செம்பியன் செல்வி, செஞ்சி அபரஞ்சி, அசோகச் சக்கரம், முதல்வர் போன்றன குறிப்பிடத்தகுந்த நாவல்கள்.

  • இந்திரா பார்த்தசாரதி

  தலைநகரை மையமாகக் கொண்டு நாவல் படைத்தவர். கால வெள்ளம், தந்திரபூமி, சுதந்திரபூமி, குருதிப்புனல், கானல்நீர், வேஷங்கள் என்பன அவற்றுள் சில.

  • நா. பார்த்தசாரதி

  பாண்டிமாதேவி, மணிபல்லவம், வஞ்சிமாநகர், கபாடபுரம், நித்திலவல்லி என 5 வரலாற்று நாவல்களும் ஆத்மாவின் ராகங்கள், சத்திய வெள்ளம், நெஞ்சக்கனல், அனிச்சமலர், நீலநயனங்கள், குறிஞ்சிமலர் என 20 சமூக நாவல்களும் படைத்தார்.

  • ஜெயகாந்தன்

  வாழ்க்கை அழைக்கிறது, பாரிசுக்குப் போ, உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான், சில நேரங்களில் சில மனிதர்கள், ரிஷிமூலம், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சினிமாவுக்குப் போன சித்தாளு, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற இவரது நாவல்கள் புகழ் பெற்றவை. 1986இல் ராஜராஜன் விருது பெற்றார்.

  • சுஜாதா (எஸ். ரங்கராஜன்)

  நைலான் கயிறு, அனிதா இளம் மனைவி, ஜன்னல் மலர், ப்ரியா, அப்ஸரா, ஒரு விபரீதக் கோட்பாடு, மேகத்தைத் துரத்தியவன், கொலையுதிர் காலம், மறுபடியும் கணேஷ், தேடாதே, விக்ரம் போன்ற பல நாவல்களைப் படைத்துள்ளார். துப்பறியும் பாங்கும் பாலுணர்வும் அறிவியல் நுட்பங்களும் கலந்துவரக் கதைகள் படைப்பதில் வல்லவர்.

  • பிறர்

  இவர்களைத் தவிர அசோகமித்ரன், நீல. பத்மநாபன், சா. கந்தசாமி, கி. விட்டல்ராவ், பாலகுமாரன், பிரபஞ்சன் ஆகியோரும் நாவல்களைப் படைக்கின்றனர். பெண் எழுத்தாளர்களில் அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன், ஹெப்சிபா ஜேசுதாசன், சூடாமணி, லட்சுமி, வசுமதி ராமசாமி, குகப்பிரியா, கோமகள், சி.ஆர். ராஜம்மா, வாஸந்தி, சிவசங்கரி, இந்துமதி, அனுராதா ரமணன், பாமா, சிவகாமி, திலகவதி போன்றோரும் ஜனரஞ்சக, சமுதாயச் சிந்தனைமிக்க நாவல்களைப் படைத்துள்ளனர்.

  6.1.5 நாடகம்

  விடுதலைப் போரில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய நாடகத் தமிழானது விடுதலைக்குப் பின் பல்வேறு பிரிவுகளாகச் செழித்து வளர்ந்தது. நவாப். டி. எஸ். ராஜமாணிக்கம் தெய்வீகமும் தேசீயமும் கலந்த நாடகங்களைப் படைத்தார். எஸ்.வி. சகஸ்ரநாமம், ஆர். எஸ். மனோகர், எம்.ஆர். ராதா, சோ, கே. பாலச்சந்தர், பி.எஸ். ராமையா, எஸ்.டி. சுந்தரம், அரு. ராமநாதன், ரா. வேங்கடாசலம், கோமல் சுவாமிநாதன், கோரா, பூர்ணம் விசுவநாதன், மெரீனா போன்றோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

  நாடகமானது புராண, பக்தி, சமூக, சீர்திருத்த, இலக்கிய, கவிதை, வரலாற்று, அங்கத, பிரச்சார, நகைச்சுவை நாடகம் எனப் பலவாறு வளர்ந்து உள்ளது. நாட்டிய நாடகங்களும் அதன் ஒரு வகையான பாகவத மேளாவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளன. கு.சா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய அந்தமான் கைதி, புதுமைப்பித்தனின் வாக்கும் வக்கும், நாமக்கல் கவிஞரின் மாமன்மகள், கண்ணதாசனின், புவனமுழுதுடையாள், மு.வரதராசனாரின் பச்சையப்பர் என்ற நாடகங்கள் குறப்பிடத்தக்கன.

  • புதுவகை நாடகங்கள்

  1973 முதல் மரபு முறையில் கூத்தினை உருவாக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட கூத்துப்பட்டறை (Theatre Workshop) நாடகம் நடத்துவதோடு கூத்தின் வரலாறு பற்றி ஆராய்கிறது; கலந்து உரையாடுகிறது; கருத்தரங்கும் நடத்துகிறது. ஞாநி அவர்களைத் தலைமையாகக் கொண்ட பரீக்ஷா குழுவினர் தனிமனிதச் சிக்கலை, அங்கத நாடகங்களாகத் தந்து வருகின்றனர். பாதல் சர்க்காரை முன்னோடியாகக் கொண்ட வீதிநாடகக் குழு பொதுமக்களுக்காக நாடகம் நடத்தி வருகிறது. இயலிசை நாடக மன்றம் நாடகக் கலைக்கும் நாடகக் கலைஞர்களுக்கும் ஆதரவு தருகிறது. எனவே நாடகக் கலையானது அழியாமல் வளர்ந்து வருகிறது.

  6.1.6 மொழிபெயர்ப்பு

  சென்றிடுவீர் எட்டுத்திக்கும் என்பதற்கு ஏற்ப, விடுதலைக்குப் பின் தமிழ் இலக்கியத்தில் மொழிபெயர்ப்பு வளம் பெற்றது. பல மொழிகளில் இருந்து சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், கவிதை என்பன தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. படைப்பாளிகளாக இருந்த பாரதியார், புதுமைப்பித்தன் போன்றோரும் இதற்கு வழிகாட்டினர். ஆன்மீகச் செய்திகள், இலக்கியங்களும் கூட மொழிபெயர்ப்பு செய்யப் பெற்றதால் தமிழ் வளமடைந்தது.

  • ச. தண்டபாணி தேசிகர்

  திருவாவடுதுறை ஆதீன மகாவித்வானாக விளங்கி 60-க்கும் மேற்பட்ட நூல்கள் படைத்துள்ள இவர், வடமொழியிலிருந்து முருகன் அணியியல் (பிரதாப ருத்ரீயம்), பரதநாட்டிய சாத்திரம், சச்சபுட வெண்பா, தாளசாத்திரம் என்ற நூல்களை மொழிபெயர்த்துத் தந்துள்ளார். Introduction to Thirumanthiram என்ற நூலையும் எழுதியுள்ளார்.

  • பெ. நா. அப்புஸ்வாமி

  வழக்கறிஞரான இவர், சங்க இலக்கியங்களைப் புதுமுறையில் அழகும் ஆற்றலும் பொருந்த ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். அறிவியல் செல்வங்களை எல்லாம் எளிய தமிழில் கலைமகள், தினமணி போன்றவற்றில் கட்டுரைகளாக எழுதி வந்தார். வாழ்வில் விஞ்ஞானம், காலயந்திரம், அணுவின் கதை என 70 நூல்கள் படைத்துள்ளார்.

  • வன்மீகநாதன்

  தமிழ்ச் சமய நூற்களை ஆங்கிலத்தில் தரும் இவர் தமிழாக்கங்களும் செய்துள்ளார். Pathway to God through Thiruvachakam, Pathway to God by Ramalinga Swamikal, Manickavachakar - a Monograph என்ற நூல்களும் இந்தி ஆத்மகதாவின் தமிழ் மொழிபெயர்ப்பும், திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பும் செய்துள்ளார்.

  • கா. அப்பாத்துரையார்

  பன்மொழிப் புலவரான இவர், 90 மொழிபெயர்ப்பு நூல்களைப் படைத்துள்ளார். மாலதிமாதவம், செஞ்சி இளவரசன், இந்துலேகா, குழந்தை உலகம், செஸ்டர்பீல்டின் கடிதங்கள், சேக்ஸ்பியர் கதைக் கொத்து, விந்தைக் கதைகள் என்பன சில.

  • மு.ரா. பெருமாள் முதலியார்

  கலைச்சொற்கள் படைப்பதில் பெரும்பங்காற்றிய இவர், இந்திய வரலாற்றுச் சுருக்கம், நமது இந்தியா, வேலைச் செல்வம், கூலி, ருப்யார்டு கிப்ளிங் கதைகள், தென்னிந்திய வரலாறு, தென்னிந்தியா பற்றி வெளிநாட்டவர் குறிப்புகள் என்ற நூற்களை மொழி பெயர்த்துத் தந்துள்ளார்.

  • த.நா. குமாரஸ்வாமி

  பன்மொழி அறிந்தவரான இவர் வடமொழி நாகானந்தத்தைத் தமிழில் தந்தவர். போஜ சரித்திரத்தைத் தமிழில் எழுதியவர். சிலம்பை வங்கமொழியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தாகூரின் 12 நாவல்களையும் பல சிறுகதைகளையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். புதிய வங்க எழுத்தாளர்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் இவரைப் போன்றே ஆர். சண்முக சுந்தரம் என்பவரும் வங்கமொழி நாவல்களைத் தமிழில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்.

  • க.நா. சுப்ரமணியம்

  இவர் அன்புவழி (ஸ்வீடிஷ்), தபால்காரன் (பிரெஞ்சு), உலகத்துச் சிறந்த நாவல்களை மொழி பெயர்த்துள்ளார்.

  • கா.ஸ்ரீ.ஸ்ரீ

  மராத்திய இலக்கியத்தைக் குறிப்பாகக் காண்டேகரைத் தமிழில் தந்தவர். இந்திக் கதைகளையும் தமிழில் தந்துள்ளார். பாரதியின் தராசு, சிவபோகசாரம், சொக்கநாத வெண்பா என்பவற்றை இந்தியில் அளித்துள்ளார்.

  • த.நா. சேனாதிபதி

  வங்க இலக்கியங்களை, தாகூரைத் தமிழில் தந்தவர். தாகூரின் கட்டுரைகள், கதைகள், தாராசங்கர் பானர்ஜி கதைகள் என்பவற்றைத் தமிழாக்கம் செய்துள்ள இவர் கண்ணப்பரின் வரலாற்றை வங்காளத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

  • சரஸ்வதி ராம்னாத்

  தமிழிலிருந்து இந்திக்கும் இந்தியிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்புச் செய்தவர். கம்பராமாயணத்தை இந்தியில் மொழி பெயர்த்துத் தந்திருக்கின்றார்.

  • பிறர்

  இவர்களைத் தவிரத் தமிழில் சேக்ஸ்பியர் நாடகங்களைப் பலர் மொழி பெயர்த்துள்ளனர். காளிதாசர், சூத்ரகர், பாசன் என்பவர்களது நாடகங்களும் கிரேக்க நாடகங்களும் தமிழில் பலரால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன. சாகித்ய அகாதெமியும் நேஷனல் புக் டிரஸ்டும் ஒவ்வொரு மொழியிலும் உள்ள சிறந்த படைப்புகளைப் பிறமொழிகளுக்கு அறிமுகப்படுத்துவதில் முனைந்து நிற்கின்றன.

  • மொழிபெயர்ப்புகளின் எண்ணிக்கை

  மொத்தத்தில் நாற்பது மொழிகளிலிருந்து அறிவியல் இலக்கியப் படைப்புகள் வந்துள்ளன. 2000க்கும் மேற்பட்ட இலக்கியங்கள் மொழிபெயர்ப்புச் செய்யப் பெற்றுள்ளன. 550 நாவல்கள், 300 சிறுகதைத் தொகுதிகள், 250 நாடக நூல்கள் மொழிபெயர்ப்பாகித் தமிழில் வந்துள்ளன. தமிழில் இருந்து 730 நூல்கள் பிற மொழிகளுக்குச் சென்றுள்ளன. தமிழிலிருந்து பக்தி இலக்கியம்தான் மிகுதியாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. எனினும் பாரதி கவிதைக்கு மட்டும் 15 மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்தில் உள்ளன. இது மொழி பெயர்ப்பின் வளமான எதிர்காலத்தையே காட்டுகிறது.

  6.1.7 திறனாய்வு

  திறனாய்வு என்ற வகை தமிழிலேயே உண்டு என்று வாதிடுவோரும் திறனாய்வு என்பது மேலை இலக்கியத் தாக்கத்தால் நாம் பெற்றது என்று கூறுவோரும் உண்டு. எவ்வாறு ஆயினும் மேலை நாட்டு இலக்கியக் கொள்கைகளைத் தமிழ் இலக்கியப் படைப்புகளில் ஏற்றி அல்லது பொருந்திப் பார்க்கும் செயலே திறனாய்வுத் தமிழாகத் தற்போதைக்கு உள்ளது. தமிழ்ப் பேராசிரியர்கள் சிலர் “தமிழிலே இலக்கியத் திறனாய்வு” என்ற துறையைத் தொடக்கி வைக்கச் சிலர் அதை விமர்சனத் தமிழாக வளர்த்தனர். சில அறிஞர்கள் தாங்கள் சார்ந்து உள்ள கொள்கை விளக்கச் சாதனமாக இலக்கியத்தை எடுத்துக் கொண்டனர். மேலும் சில அறிஞர்கள் தாங்கள் விரும்பும் இலக்கியம் அல்லது துறையிலே ஆழ்ந்த புலமையுடன் திறனாய்வு செய்து பெயர் பெற்றனர். இந்திய இலக்கியச் சான்றோர்களை ஒப்பிட்டுத் திறனாய்வு செய்து புகழ் பெற்றவர் பி.ஸ்ரீ. அவர்கள்.

  இனி குறிப்பிடத்தகுந்த திறனாய்வு நூல்களும் ஆசிரியர்களும் பற்றிக் காண்போம்.

  • ஆ. முத்துச்சிவன் - கவிதையும் வாழ்க்கையும்

  • அ.ச. ஞானசம்பந்தன் - இலக்கியக் கலை

  • மு. வரதராசனார் - இலக்கிய மரபு, இலக்கியத்திறன், இலக்கிய ஆராய்ச்சி

  • கோதண்டராமன் - இலக்கியமும் விமர்சனமும்

  தா.ஏ. ஞானமூர்த்தி, ந. சஞ்சீவி, க. கைலாசபதி, தி.சு. நடராசன், க. பஞ்சாங்கம் போன்றோர் இலக்கியத் திறனாய்வுக்கும் இலக்கியக் கொள்கைகளுக்கும் வழி காட்டியவர்கள்.

  புதுமைப்பித்தன், க.நா. சுப்பிரமணியன், சிதம்பரரகுநாதன், சி.சு. செல்லப்பா, தா.வே. வீராசாமி, சி. கனகசபாபதி, தி.க. சிவசங்கரன், எழில் முதல்வன், வெங்கட்சாமிநாதன் போன்றோர் இலக்கியத் திறனாய்விற்கு வழி வகுத்தவர்கள்.

  க. கைலாசபதி எழுதிய இருமகாகவிகள், நாவல் இலக்கியம் என்ற இரு நூல்களும் நா. வானமாமலையின் ஆய்வுக் கட்டுரைகளும் சிறப்புடையன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 10:16:25(இந்திய நேரம்)