தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இலக்கணமும் மொழியியலும்

  • 6.4 இலக்கணமும் மொழியியலும்

    இக்காலத்தில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்தாக வளர்ந்த தமிழ் இலக்கணம் பழமையையும் புதுமையையும் கொண்டு வளர்ந்தது. திருவாரூர் சரவணத் தமிழன் புதுக்கவிதைக்கும் திரைத் தமிழுக்கும் கூட இலக்கணம் செய்து உள்ளார். மொழியியல் ஆய்வுகளும் பல வந்துள்ளன.

    6.4.1 இலக்கணம்

    அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை இலக்கணக் கருத்தரங்குகள் நடத்தி, இலக்கணச் சிந்தனை என நூல்களும் வெளியிடுகிறது. சோம, இளவரசு இலக்கண வரலாறு என்ற நூல் எழுதியுள்ளார். செந்தமிழ், தமிழ்ப் பொழில், செந்தமிழ்ச் செல்வி, ஆய்வுக்கோவை என்பவற்றில் இலக்கணம் தொடர்பான கட்டுரைகள் வருகின்றன.

    தொல்காப்பியத்தை எளிமைப்படுத்திக் கி.வா.ஜகந்நாதன், பயப்படாதீர்கள், வாழும் தமிழ் என்ற நூல்கள் எழுதியுள்ளார்.

    தமிழ் இலக்கணத்தை எளிமைப்படுத்தியும், சுவைப்படுத்தியும் எழுதி வருபவர்களில் கு.மா. திருநாவுக்கரசு, ச. சாம்பசிவன், மோசசு பொன்னையா, தமிழண்ணல், ஆ. சிவலிங்கனார், நடேச நாயக்கர் என்பார் குறிப்பிடத்தக்கவர்கள். தொல்காப்பிய உரை வகுத்தவர்களில் ஆ. சிவலிங்கனார், கு. சுந்தரமூர்த்தி என்பார் குறிப்பிடத்தக்கவர்கள்.

    6.4.2 மொழியியல்

    சங்க இலக்கியங்களை எல்லாம் இலக்கண நோக்கில் ஆய்வு செய்வது 1970லேயே முடிந்து விட்டது. மொழியியல் நோக்கில் இலக்கியங்களைப் பார்க்கும் தன்மை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் போற்றப்பட்டது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இலக்கண நூல்களை மொழியியல் நோக்கில் பார்க்கிறது. மொழியியல் துறையில் புகழ்பெற்றவர்களும் அவர் தம் துறைகளும் பின்வருமாறு:

    • ச. அகஸ்தியலிங்கம் - தொடரியல்

    • செ. வை. சண்முகம் - சமுதாய மொழியியல், ஒப்பியல், வரலாற்றியல் பார்வை, திராவிடப் பெயர்கள், எழுத்துச் சீர்திருத்தம்.

    • க. முருகையன் - ஒலி, ஒலியன் இயல்கள், பேச்சொலியியல்.

    • சு. சக்திவேல் - Tribal Languages.

    • க. பாலசுப்ரமணியன் - 4 திராவிட மொழிகளின் இலக்கண ஒப்பீடு.

    • வ.அய். சுப்ரமணியம் - புறநானூற்றுச் சொல்லடைவு

    • ஆர். கோதண்டராமன் - தொடரியல்

    • மோ. இசரயேல் - Tribal Languages.

    • ஜெ. நீதிவாணன் - நடையியல்.

    • இ. அண்ணாமலை - Adjectual Clause in Tamil.

    • மா.சு. திருமலை - தமிழ் கற்பித்தல்.

    • பொற்கோ - மாற்றிலக்கண மொழியியல், திராவிட மொழி ஒப்பியல்

    • கே. எஸ். கமலேஸ்வரன் - வரலாற்று மொழியியல்.

    • கி. அரங்கன் - Syntax & Semantics

    • சு. ஆரோக்கிய நாதன் - சமுதாய மொழியியல், இரு மொழியாளரின் மொழிப் பிரச்சினை.

    மொழியியல் ஆய்வை வளர்க்கப் பல மன்றங்களும் இதழ்களும் உள்ளன.

    6.4.3 எழுத்துச் சீர்திருத்தம்

    தமிழில் உள்ள 247 எழுத்துகளைக் குறைக்கும் முயற்சி சுதந்திரத்துக்கு முன்பே (1933இல்) துவக்கப் பெற்றது. 1935இல் பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்கள் தன் குடியரசு, விடுதலை ஏடுகளில் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தினார். கா. நமச்சிவாய முதலியார் சில புது எழுத்துகளை ஆக்கிக் காட்டினார். எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பாகக் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்கள் சாலை இளந்திரையனார், கா.சு. பிள்ளை, த.வே. உமாமகேசுவரனார் இக்கருத்தை எதிர்த்துப் பேசினர். தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைப் பற்றி மட்டும் 17 நூல்கள் பல்வேறு அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2017 19:53:56(இந்திய நேரம்)