தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தமிழ் இலக்கிய வரலாறு

 • 6.5 தமிழ் இலக்கிய வரலாறு

  தமிழ் இலக்கிய வரலாறு என்று கூறும்போது, தமிழிலுள்ள இலக்கியங்களின் வரலாற்றுக்கும், இலக்கியங்களின் வழி வரலாற்றுக்கும் என்று இரண்டு பொருள் உண்டு. இலக்கியங்களின் வழி வரலாறு எழுதுவது என்பது மிகச் சிறிய அளவிலே தான் நடைபெற்றுள்ளது. இலக்கியங்களின் வரலாற்றினைக் காலமுறைப் படுத்தி எழுதிச் செல்லுதல் தான் அதிக அளவில் நடைபெற்றுள்ளது.

  • முன்னோடி முயற்சிகள்

  இலக்கிய வரலாற்றுப் பார்வைக்கு முதன்முதலில் வழி வகுத்தவர் கா.சு. பிள்ளை. கே.எஸ். சீனிவாச பிள்ளையின் தமிழ் வரலாறு, ரா. ராகவையங்காரின் தமிழ் வரலாறு, க.பொ. இரத்தினத்தின் நூற்றாண்டுகளில் தமிழ், வி.செல்வ நாயகத்தின் தமிழ் இலக்கிய வரலாறு, இராமசாமி நாயுடுவின் தமிழ் இலக்கியம் என்பன முழுப் பார்வை தரும் நூல்கள்.

  • கால ஆய்வு

  ஆழ்வார்கள் காலநிலை, தொல்காப்பியர் காலம், சைவ இலக்கிய வரலாறு, பௌத்த, வைணவ சமண இலக்கிய வரலாறு, 13, 14, 15 நூற்றாண்டு வரலாறு, தற்காலத் தமிழ் வரலாறு என்பன ஒரு கால கட்டத்தை மட்டும் மையப்படுத்தும் நூல்கள்.

  • புலவர் வரலாறு

  தமிழ்ப்புலவர் சரித்திரம், சங்ககாலப் புலவர், உரையாசிரியர்கள், ஆழ்வார்கள் வரலாறு, தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம், தமிழவேள், மகாவித்துவான் தியாகராச செட்டியார், பரிதிமாற் கலைஞர், கால்டுவெல் ஐயர், பிற்காலப் புலவர்கள், கம்பர், சாத்தனார், திருத்தக்க தேவர், தாயுமானவர், பரிமேலழகர், இளம்பூரணர் போன்ற நூல்கள் புலவர்தம் வரலாற்றை விரித்துக் கூறுவனவாகும்.

  • இலக்கிய வரலாற்று நூல்கள்

  எஸ். இராமகிருஷ்ணனின் தமிழ் இலக்கியம் ஓர் அறிமுகம், சோமலெயின் வளரும் தமிழ், மா. இராசமாணிக்கனாரின் தமிழ்மொழி இலக்கிய வரலாறு, பாலூர் கண்ணப்ப முதலியாரின் தமிழ்நூல் வரலாறு, கோவிந்தசாமியின் இலக்கியத்தோற்றம், ஞா. தேவநேயப் பாவாணரின் தமிழ் இலக்கிய வரலாறு என்பன குறிப்பிடத் தக்க நூல்களாகும்.

  • ஆங்கில நூல்கள்

  பிறநாட்டார், பிறமொழியாளர் தமிழின் தன்மை அறியும் பொருட்டு ஆங்கிலத்தில் எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை, ஏ.சி. செட்டியார், எம். சீனிவாச ஐயங்கார், ந. சுப்ரமணியம், சி. ஜேசுதாசன் - ஹெப்சிபா, தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், மு. அருணாசலம், ஜே.எம். சுந்தரம்பிள்ளை ஆகியோர் எழுதியுள்ளனர். சாகித்ய அகாதமி வெளியிட்ட மு.வ. வின் தமிழ் இலக்கிய வரலாறு வெளிமாநிலத்தவரும் தமிழ் பற்றி அறிய வைத்துள்ளது. கா. மீனாட்சி சுந்தரனாரின் Contribution of European Scholors to Tamil, உவைசின் Muslim Contribution to Tamil Literature என்பனவும் குறிப்பிடத்தக்கன.

  • பிற நூல்கள்

  மயிலை. சீனிவேங்கடசாமியின் பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும், கிறித்துவமும் தமிழும், தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் சமணத்தமிழ், அப்துற் றகீமின் முஸ்லீம் தமிழ்ப் புலவர்கள், சேர நாடும் தமிழும், செட்டி நாடும் தமிழும், புதுவை மாநிலத் தமிழ் வளர்ச்சி, சேதுநாடும் தமிழும், இலங்கையும் தமிழும், மலேயாவும் தமிழும், கொங்கு நாடும் தமிழும் போன்ற நூல்கள் ஒரு பகுதி சார்ந்த பார்வை தருவன.

  மு. அருணாசலம் அவர்களின் 9-16ஆம் நூற்றாண்டு வரையிலான 8 தொகுதிகளை அடுத்து மது.ச. விமலானந்தம் தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் என்ற நூலினை எழுதியுள்ளார். இலக்கியத்தின் வழி வரலாற்றினை அறியும் முயற்சியில் கார்த்திகேசு சிவத்தம்பியின் தமிழில் இலக்கிய வரலாறு முதல் முயற்சியாகும். முழுப்பார்வை தருதல் மட்டுமின்றி சிற்றிலக்கியம், சிறுகதை, நாவல், கட்டுரை, உரைநடை, நாடகம் போன்ற இலக்கியங்கள் குறித்து முழுமையாகவும் தனித்தனியேயும் இலக்கிய வரலாற்று நூல்கள் வந்துள்ளன. இவை ஒரு துறைப் புலமை பெற உதவுவன.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2017 19:55:34(இந்திய நேரம்)