Primary tabs
2.1 தமிழ் ஒலி அமைப்பு
மொழிக்கு அடிப்படை ஒலியாகும். ஒலியைத் தோற்றுவிப்பன நம் உடல் உறுப்புகளே. அவற்றைப் பேச்சுறுப்புகள் அல்லது ஒலி உறுப்புகள் என்று குறிப்பிடுவோம். உதடு, பல், அண்ணம், உள்நாக்கு, காற்றுக் குழல், குரல்வளை, தொண்டை போன்ற உறுப்புகள் ஒலியைத் தோற்றுவிக்கின்றன. ‘இன்ன ஒலியுறுப்பு இன்ன முறையில் இயங்குவதால் இன்ன ஒலி பிறக்கிறது’ என்று விளக்குவது ஒலியியலாகும். நுரையீரலில் இருந்து வெளிப்படும் காற்று ஒலி உறுப்புகளால் எவ்வகைத் தடையும் இன்றி வெளிவரும்போது உண்டாகும் ஒலி உயிரொலி எனப்படும். ஒலி உறுப்புகளால் தடுத்து வெளிப்படல், உரசுதல் போன்றவை நிகழ்ந்தால் அது மெய்யொலி எனப்படும். அவ்வகையில் தமிழில் பேச்சொலிகள் உயிரொலி, மெய்யொலி என்று இரண்டாக அமைந்துள்ளன. வெடிப்பொலி, உரசொலி, மூக்கொலி, அடைப்பொலி, மருங்கொலி, வருடொலி, அடியொலி, ஆடொலி என்றெல்லாம் மெய்யொலியில் பலவகை ஒலிகள் சொல்லப்படுகின்றன. ஒலி, ஒலிப்பில்லா ஒலி, முணுமுணுப்பு ஒலி, கீச்சுக் குரல் ஒலி, கிசுகிசு ஒலி என்றெல்லாம் ஒலியின் தன்மையை வைத்துப் பொதுவாக வகைப்படுத்துவதும் உண்டு.
ஒலி தன்னளவில் பொருள் இல்லாதது. எனினும் குறிப்புப் பொருள் உண்டு.
ஒவ்வொரு மொழிக்கும் அடிப்படை ஒலியாக இருப்பது முதல் ஒலி அல்லது அடிப்படை ஒலி ஆகும். அது பொருள் வேறுபாடு உணர்த்தும். பொருள் வேறுபாடு எதையும் உணர்த்தாமல் இடத்தால் மட்டும் வேறுபடும் ஒலிகள் வகையொலிகள் எனப்படும். ஒலிக்கு வடிவம் தரும்போது உருவானது எழுத்து. எழுத்து முதலொலியை ஒட்டியே அமையும். ஆகையால் ஒரு மொழியின் எழுத்துகளைக் கொண்டு மற்றொரு மொழியை எழுதும்போது தடங்கல் தோன்றுகிறது. இதைத் தவிர்க்க உலக ஒலி எழுத்து (International Phonetic Alphabet) என்ற முறை உருவாக்கப்பட்டது. பிறமொழிகளை எழுதும்போது உலக ஒலி எழுத்து முறையைப் பின்பற்றி எழுதும் முறை உலகெங்கும் பின்பற்றப்படுகிறது. தமிழர் ஒலிகளை அளவுக்கு உட்படுத்திப் பிரித்தனர். மாத்திரை என்பது ஒலிப்பு அளவைக் குறிக்கும். ஒலிக்கும் அளவு ஒன்று என்றாலும், ஒலிக்கும் முறை மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. ஒரு மனிதரது குரல் மற்றொரு மனிதரது குரலிலிருந்து வேறுபடுவதற்கு ஒலிப்பு முறை வேறுபாடும் ஒரு காரணமாகும். உச்சரிப்பைப் பயிற்றுவிக்கும் அகராதிகள் உள்ளன. பயிற்சி முறைகள் உள்ளன.
‘வியாழக் கிழமை ஏழைக் கிழவன் ஒருவன்
வாழைப் பழத்தோல் வழுக்கி விழுந்தான்’என்று சிறுவர்களைத் திரும்பச் திரும்பச் சொல்லச் செய்வதன் மூலம், தமிழுக்குரிய ‘ழகர’ ஒலியைக் கற்பிப்பது கிராமங்களில் உள்ள வழக்கம். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் செய்தி வாசிப்பவரது உச்சரிக்கும் திறன் சோதிக்கப்படுகிறது. ஒலிப்புத் தேர்வும் நடத்தப்படுகிறது.
‘சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்’என்பர். நாவை ஒலித்துப் பயன்படுத்துவதன் மூலமே செந்தமிழ்ப் பயிற்சி பெற முடியும் என்பது நம் முன்னோர் கருத்து.
அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்து எழுத்துகள் குறுகி ஒலிக்கும்போது அவை குறில் எனப்படுகின்றன. அவற்றையே நீட்டி ஒலிப்பதால் நெடில் எனப்படுகின்றன. குறிலை ஒலித்தல் சற்றே அருமையாகவும், நெடிலை ஒலித்தல் எளிமையாகவும் இருப்பதால் இவற்றை முறையே, அரிய உயிர்கள் என்றும் எளிய உயிர்கள் என்றும் (tense vowels. lax vowels) கூறுவர். பிறக்கும் ஒலிகளை உறுப்புகளது அசைவு குறித்துப் பல வகைகளாகப் பகுப்பர். அது குறித்து நீங்கள் ‘ஒலியனியல்’ என்ற பாடத்தில் விளக்கமாகக் கற்பீர்கள். தமிழைப் பொதுவாக இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்று வகுப்பர். இயல் என்பது இலக்கியம், இசை என்பது ஒலிப்புடன் தொடர்புடையது. நாடகத் தமிழ் உரையாடலும், இசையும் இணைந்தது.
ஒழுங்கு செய்யப்பட்ட ஒலி - இசை ; ஒழுங்கு செய்யப்படாத ஒலி - ஓசை.
படித்தால் மனத்தில் பதிய மறுப்பவை எல்லாம் இசை கூட்டிப் பாடலாகப் பாடப்படும்போது, மனத்தில் பதிவது இயற்கை. ஒலியே இசையின் ஆதாரம் ஆகும்.
ஓர் எழுத்து பிறந்து, நின்று, முடியும் கால அளவு அதன் ஒலி அளவு (decibel) ஆகும். தமிழ் ஒலிகளை,
1)ஒரு மாத்திரை ஒலிகள்2)இரு மாத்திரை ஒலிகள்3)ஒரு மாத்திரைக்கும் குறைந்த ஒலிகள்என்று வகைப்படுத்தலாம். இவற்றுள் குறில் ஒலிகள் ஒரு மாத்திரை அளவின, நெடில் ஒலிகள் இரண்டு மாத்திரை அளவின, மெய்யொலிகள், குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் முதலியன ஒரு மாத்திரைக்கும் குறைந்து ஒலிப்பன. ஐ, ஒள என ஒலித்தால் இரண்டு மாத்திரை, ‘அய், அவ்’ என்று குறுகி ஒலித்தால், ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம் என்று பெயர்; மாத்திரை அளவு குறையும்.