Primary tabs
1.0 பாட முன்னுரை
உலகில் உள்ள அனைத்து மக்களும் ஏதோ ஒரு மொழியின் வழியாகத் தம் கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர். ஒருவருக்கு ஒருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். நாகரிக வளர்ச்சி பெற்ற மக்கள் மட்டுமன்றி, காடுகளிலும் உயர்ந்த மலைப்பகுதிகளிலும் வாழும் பழங்குடி மக்களும் மொழியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மொழிப் பயன்பாட்டு நிலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து வழக்கில் இருந்து வருவதை நாம் அறிவோம்.
இன்று உலகம் முழுவதும் பல ஆயிரக் கணக்கான மொழிகள் பேசப் பெறுகின்றன. இவற்றில் சில மொழிகள் எழுதவும் பெறுகின்றன. வேறு சில மொழிகள் மக்களின் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளன; அவற்றுக்கெனத் தனி வரிவடிவம் இன்று வரை உருவாகவில்லை; இதனால் எழுத்து வழக்கிலும் அவை இல்லை. மிகச் சில மொழிகள் எழுதப் பெறுகின்றன; அவற்றுக்கெனத் தனி வரிவடிவமும் உண்டு. ஆனால் அவை மக்களின் அன்றாடப் பேச்சு வழக்கில் பயன்படுத்தப் பெறும் மொழிகளாக இல்லை; இலக்கிய, இலக்கண, சமய நூல்களுக்குரிய மொழிகளாக மட்டுமே அவை வாழ்கின்றன.
இந்த மூன்று வகைகளுள் தமிழ்மொழியை எந்த வகைக்கு உட்பட்டதாகக் கருதலாம்?
முதல் வகைப்பட்டதாகக் குறிப்பிடுவோமா? ஆம்! தமிழ்மொழி பல ஆயிரம் ஆண்டுகளாகப் பேசப் பெற்று வருகின்றது. இலக்கியங்கள், இலக்கணங்கள் எழுதப் பயன்படுத்தப் பெற்று வருகின்றது. கல்வெட்டுகளில், செப்பேடுகளில், நடுகற்களில் எழுதப் பெற்றுள்ளது. எனவே மக்களின் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும பயன்படுத்தப் பெறும் மொழியாகத் தமிழ்மொழி திகழ்கின்றது என்று குறிப்பிடுவோம். தமிழ் மொழியின் எழுத்து வழக்கில் பயன்படுத்தப்படும் வரிவடிவ வளர்ச்சியைப் பற்றிய கருத்துகளை இந்தப் பாடத்தின் வழி அறிந்து கொள்வோம்.