தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

எழுத்து முறைகள்

  • 1.2 எழுத்து முறைகள்

    உலக மொழிகள் எல்லாம் ஒத்த ஒலிப்பு முறையில் பேசப் பெறுவது இல்லை. இந்த ஒலிப்பு முறை வேறுபாடு ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழி வேறுபடக் காரணமாக அமைகின்றது. இது போன்றே உலக மொழிகள் எல்லாம் ஒத்த வரிவடிவில் எழுதப் பெறுவது இல்லை. ஒவ்வொரு மொழியும் குறிப்பிட்ட வரிவடிவத்தில் எழுதப் பெறுகின்றன. இவ்வாறு உலகம் முழுவதும் எழுதப் பெறுகின்ற எழுத்து முறைகளை மூன்று வகையாகப் பகுக்கலாம். அவை,

    (1) ஓவிய எழுத்து முறை (Pictography)
    (2) அசை எழுத்து முறை (Syllabic Writing)
    (3) ஒலியன் எழுத்து முறை (Phonetic Writing)

    என்பன ஆகும்.

    1.2.1 ஓவிய எழுத்து முறை

    ஓவியம் போன்றே எழுத்துகளும் எழுதப் பெற்றமையால் அவற்றை ஓவிய எழுத்துகள் என்று குறிப்பிடுகின்றோம். ஓவிய எழுத்து முறையில் ஒரு சொல்லைக் குறிக்கும் வகையில் ஓர் எழுத்து எழுதப் பெறுகின்றது. இந்த எழுத்து முறையில் மலையைக் குறிப்பிட, என்று எழுதப் பெறுகின்றது. இந்த ஓர் எழுத்தே ஒரு சொல்லுக்கு உரிய பொருளை அளிக்கும். அதைக் கீழ்வருமாறு விளக்கலாம்.

    ஓர் ஓவியம் = ஓர் எழுத்து = ஒரு சொல்=
    மலை என்ற சொல்.

    இது போன்றே கிணற்றைக் குறிப்பிட என்று எழுதப் பெறுகின்றது. அதாவது மலை, கிணறு என்னும் ஓவியங்களே எழுத்து வடிவமாக வாசிக்கப் பெறுகின்றன.

    மலை, கிணறு என்பவை எல்லாம் பருப்பொருள்கள். இவற்றை ஓவிய வடிவில் எழுதுவது எளிது. கண்ணுக்குத் தெரியாத மனத்தால் உணரத்தக்க நுண்பொருள்களாகத் திகழும் அன்பு, அச்சம், ஆசை முதலியவற்றைக் குறிக்கும் சொற்களையும் ஓவிய எழுத்துகளில் எழுத இயலும் என்பதுதான் இந்த எழுத்து முறையின் தனிச்சிறப்பு.

    நன்மை என்ற பண்பைக் குறிப்பிட, ஒரு பெண்ணைக் குறிக்கப் பயன்படுத்தும் ஓவிய எழுத்தையும் குழந்தையைக் குறிக்கப் பயன்படுத்தும் ஓவிய எழுத்தையும் சேர்த்து எழுதினால் போதுமானது. இது போன்ற ஓவிய எழுத்துமுறை சப்பான் மொழியிலும் சீன மொழியிலும் காணப்பெறுவதாகப் பொற்கோ குறிப்பிடுகின்றார்.

    1.2.2 ஒலியன் எழுத்து முறை

    மக்கள் பேசும்மொழி ஒலியன்களால் ஆனது என்பதை நாம் அறிவோம். இந்த ஒலியன்களைக் கருத்தில் கொண்டு எழுத்து வடிவங்களை அமைத்துக் கொள்ளும் முறையை ஒலியன் எழுத்து முறை என்கிறோம். தமிழில் என்பதை நாம் ஓர் எழுத்தாக எழுதுகின்றோம். இந்தக் என்ற எழுத்து வரிவடிவில் ஓர் எழுத்துதான். ஆனால் ஒலிவடிவில் க்,அ என்ற இரண்டு எழுத்துகளால் ஆனது. இதனால் ஒலியன் எழுத்து முறையில் என்பதை எழுத வேண்டும் என்றால் க்அ என்றுதான் எழுத வேண்டும். இவ்வாறு ஒலியன் எழுத்து முறையில் எழுதும் வழக்கம் தமிழில் இல்லை. எனினும் ஐ, ஒள தவிர்த்து உள்ள பத்து உயிரெழுத்துகளும் க் முதல் ன் வரை உள்ள பதினெட்டு மெய் எழுத்துகளும், ஒலியன்கள் என்பதால் ஒலியன் எழுத்து முறையில் அமைந்தவை போல் காணப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். செர்மன், பிரெஞ்சு மொழிகள் ஒலியன் எழுத்து முறையில்தான் எழுதப்பெற்று வருகின்றன.

    1.2.3 அசை எழுத்து முறை

    அசை எழுத்து முறையில் ஓர் எழுத்து ஓர் அசை (ஒலிப்பு முறையில்)யைக் குறிக்கும் வகையில் எழுதப் பெறுகின்றது. அதாவது, க என்னும் உயிர்மெய் எழுத்தை ஒரே எழுத்தாக எழுதுகிறோம் அல்லவா? இது அசை எழுத்து முறை. ஆனால், ஒலியன் எழுத்து முறையில் இந்த ஓர் எழுத்து, க்அ என்று இரு எழுத்துகளாக எழுதப்படுகிறது என்று கண்டோம். இவ்வாறு அசை எழுத்து முறையில் கடல் என்று எழுதுவதை, ஒலியன் எழுத்து முறையில் க்அட்அல் என்று எழுதுவர். இதுவே இரண்டற்கும் உள்ள வேறுபாடு ஆகும்.

    அசை எழுத்து முறையில் உயிர் எழுத்து, உயிர்மெய் எழுத்து, மெய் எழுத்து ஆகியவற்றைத் தனித்தனியே குறிக்கும் வகையில் எழுத்து வடிவங்கள் அமைந்திருக்கும். இந்திய மொழிகள் எல்லாம் அசை எழுத்து முறையில் தான் எழுதப் பெற்று வருகின்றன. தமிழ் மொழியிலும் உயிர் எழுத்து, மெய்எழுத்து, உயிர்மெய் எழுத்து என்று பகுத்து எழுதப் பெற்று வருவது நாம் அறிந்த ஒன்றுதானே?

     

    தன்மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    ஒரு சொல்லை ஓர் எழுத்தாக எழுதும் முறைக்குப் பெயர் என்ன?
    2.
    தமிழ்மொழி எந்த எழுத்து முறையில் எழுதப் பெறுகிறது?
    3.
    ஓவிய எழுத்துமுறை பயன்படுத்தப் பெறும் மொழிகள் இரண்டினைக் குறிப்பிடுக.
    4.
    மரம் என்பதை, ‘ம்அர்அம்’ என எழுதுவது எந்த வகை எழுத்து முறை?
    5.
    “அசை எழுத்து முறையினுள் ஒலியன் எழுத்துமுறையும் அடங்கியுள்ளது” - இக்கருத்து சரியா?
புதுப்பிக்கபட்ட நாள் : 05-08-2017 13:14:07(இந்திய நேரம்)