தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

3.5-தெய்வநிலை

  • 3.5 தெய்வநிலை

    சமூகக் கதைப்பாடல்களில் பெரும்பாலும் வன்முறையால் கொல்லப் பட்டவர்களின் உயிர் ஆவியுருவில் வரம்பெற்றுத் தெய்வமாகிப் பூசை பெறுவதாகக் காட்டப்படுகிறது. மதுரை வீரன் சுவாமி கதையில் திருமலை மன்னனுக்கு உறவான வெள்ளையம்மாளைக் கடத்திவந்த காரணத்தால் மதுரை வீரன் கொல்லப்படுகிறான்.

    பூவையால் என்னுயிர் பொன்னுலகம் போகுதையா

    என்று கதறி மதுரை வீரன் இறைவனை வேண்ட, அவனது அழுகுரலுக்கு இரங்கிய இறைவன்,

    கம்பத் தடியில் காத்திருந்து பூசை கொள்வாய்

    என்று வரம் கொடுக்கிறார். அது முதல் அவனை மதுரை வீரன் சுவாமி எனத் தெய்வமாக்கி மக்கள் வழிபடுகின்றனர். சின்னத்தம்பி கதையில் வரும் சின்னத்தம்பியும், அவன் இறந்த செய்தி கேட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சின்னத்தம்பி மாமன் மகள் சோணைச்சியும் தெய்வ நிலையடைகின்றனர். கொல்லப்பட்ட சின்னத்தம்பி பாப்பங்குடிக் ‘காட்டாளம்மன்’ அருளால் அத்தெய்வத்திற்குக் காவல் தெய்வம் ஆகின்றனர். தோட்டுக்காரி அம்மன் கதை நாயகியான தோட்டுக்காரி தீயில் பாய்ந்து உயிரை விட அவளைக் காதலித்தவனும் உடன் பாய்ந்து உயிரை விடுகின்றான். இவர்கள் இறைவன் அருளால் தோட்டுக்காரி அம்மை, குமரப்பெருமாள் என்ற பெயரில் தெய்வங்களாயினர்.

    நல்லதங்காள் கதையில் இறந்துபோன நல்லதங்காளையும் அவளது குழந்தைகளையும் சிவனும் பார்வதியும் உயிர்ப்பிக்கின்றனர். ஆயின் “செத்தவர் இருப்பது சீமைக்கு ஆகாது” என்று கூறிய நல்லதங்காள் ஓர் ஆசாரியை அழைத்து வரச் செய்து தனக்கென ஒரு கோயில் அமைக்கப் பணித்தாள். ஆண்டுக்கொரு நாள் தமக்கு விழா எடுக்க வேண்டும் என வேண்டிய அவள் தன் பிள்ளைகளுடன் வன்னி மரங்களாக மாறிவிட்டாள். அவளது அண்ணனும் கணவனும் கைலாயம் போய்ச் சேர்கின்றனர். முத்துப்பட்டன் கதையில் முத்துப்பட்டனுடன் அவனுடைய இரு மனைவியரான திம்மக்காவும் பொம்மக்காவும் மாமனாரான வாலப்பகடையும் தெய்வமாக வணங்கப்படுகின்றனர்.

    · மரபு மீறலும் கேட்போரும்

    சமூகக் கதைப்பாடலாசிரியர்கள், சிலரைத் தங்களுடைய கற்பனை ஆற்றலினால் உயிர் மீண்டெழச் செய்கின்றனர். பலரைத் தெய்வங்களாக்கி நிலை பெறச் செய்கின்றனர். இவ்வாறு மீண்டும் உயிர்பெற்றதாகக் கூறுவது உலக நடப்புக்கு மாறானது என்பதைக் கதைப்பாடாலாசிரியர்கள் உணராமல் இல்லை. இருப்பினும் கதை கேட்போரின் ஆறுதலுக்காக இவ்வாறு கூறி அவலத் தணிப்பு செய்ய முயல்கின்றனர். வரக்கூடாத பருவத்தில் முறையற்ற நிலையில் வரும் கொடுமையான சாவிலிருந்து மனித மனத்தை ஆறுதல் படுத்தவே இவ்வாறு இயல்புக்குப் புறம்பான நிகழ்ச்சிகளைக் கதையாசிரியர்கள் புகுத்தியுள்ளனர் என்று கருதலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:24:57(இந்திய நேரம்)