தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.1-அமைப்பு

  • 5.1 அமைப்பு

    கதைப்பாடல்களுக்கென்றே சில அமைப்புகள் உள்ளன. அவை, கதையின் தொடக்கம், முடிவு, கதை சொல்லும் முறை சொல்லமைப்பு, பா அமைப்பு போன்றவை ஆகும். இக்கூறுகள், சில கதைப் பாடல்களில் முன்னுள்ளது பின்னாகவும் பின்னுள்ளது முன்னாகவும் அமைந்திருக்கும். இக்கூறுகளுள் எதுவுமேயின்றிக் கதையை மட்டும் கூறிச் செல்லும் கதைப் பாடல்களும் உண்டு. இக்கூறுகளை விளக்கமாகக் காண்போமா?

    5.1.1 காப்பு

    கதைப்பாடல் காப்பு அல்லது வழிபாடு, வணக்கம், வரலாறு, வாழ்த்து என நான்கு பிரிவுகளைக் கொண்டிருக்கும். கதைப்பாடலைத் தொடங்குவதற்கு முன் தெய்வத்தின் மீது காப்புப் பாடுவர். காப்புப் பாடல் ஒரு தெய்வத்தைக் குறிப்பிட்டு வணங்கும் ஒரு பாடலாகவோ பல தெய்வங்களை வாழ்த்தும் பல பாடல்களாகவோ அமையும். பெரும்பாலும் முதல்பாடல் பிள்ளையார் வாழ்த்தாகவே இருக்கும்,

    கந்தனுக்கு முன் பிறந்த நல்ல கணபதியே முன் நடவாய்

    (கட்ட பொம்மன் கதைப்பாடல்)

    என்று விநாயகருக்கும்,

    மதனதுரை கானு கதை பாட வரந்தர வேணுமடி மதுரை மீனாட்சி

    (கான் சாகிபு சண்டை)

    என்று மீனாட்சிக்கும்,

    தாயே சரஸ்வதியே தப்பாமல் என் நாவில் நீயே குடியிருப்பாய்

    (வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல்)

    என்று சரஸ்வதிக்கும் காப்புப் பாடுவர். காப்போடு கதையைத் தொடங்குவதால் பாடுவோருக்கும் கேட்போருக்கும் நலம் விளையும் என்று நம்புகின்றனர்.

    5.1.2 வணக்கம்

    தெய்வங்களைக் காக்கும்படி வேண்டும்போதே வணக்கமும் பாடி விடுவதுண்டு. தனக்குக் கதைப்பாடலைச் சொல்லிக் கொடு்த்த குருவை வணங்கிப் பாடும் மரபும் உண்டு.

    அணைஞ்ச பெருமாள் புலவரெந்தன் குருநாதன்
    அவருடைய மலர்ப்பாதம் அடியேன் என்றும் மறவேன்

    (தோட்டுக்காரி அம்மன் கதை)

    5.1.3 அவையடக்கம்

    கதை சொல்லும் ஆசிரியர் அவையடக்கமாகத் தங்களைத் தாழ்த்திக் கூறும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். தமது திறமை காரணமாகத் தமக்கு ஆணவம் வந்துவிட்டதாகக் கேட்போர் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு தங்களைத் தாழ்த்திக் கூறுகின்றனர்.

    மகாபாரதக் கதையை வகுத்துரைத்த சாஸ்திரத்தில்
    பூபால ரைவர் பெருந்துரி யோதிரனும்
    வென்று புவியாண்டு விஷ்ணுபதம் சேர்ந்த கதை
    ஒன்று மறியாதான் உரைத்தேன் புவிமீதில்

    (வைகுந்த அம்மானை)

    கூறப்போகும் கதையின் குறிப்பைத் தரும் ஆசிரியர் தன் பெயரையோ தன் குறிப்பையோ வெளிப்படுத்தாது, அவையஞ்சி அடக்கமாக ஒதுங்கி நிற்பதை மேலே காட்டிய பாடலடிகள் சுட்டுகின்றன.

    5.1.4 நுதலிப்புகுதல்

    அவையடக்கம் முடிந்த பிறகு, இன்ன கதையைப் பாடப் போவதாக ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டுப் (நுதலுதல்) பின் கதையைத் தொடங்குவது மரபு.

    மைக்குழல் தோட்டுக்காரி
    மடிந்து பின் பிறந்த வாறும்
    செப்பமாய்ப் புவியோர் கேட்கச்
    செப்புவேன் புலனுள் ளோர்க்கே

    (தோட்டுக்காரி அம்மன் கதை)

    என்பது போன்று பாடுவார்கள்.

    5.1.5 கதைப்பாடல் முடிவு

    கதைப்பாடல்கள் மக்களை வாழ்த்தி இறைவனை வணங்கியே பெரும்பாலும் முடிவு பெறுவதைக் காணலாம். ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி, மூங்கில் போல் சுற்றம் சூழ, இறையருளால் எந்தக் குறையும் வராது, அனைவரும் நன்கு வாழவேண்டும் என்பதுதான் ஆசிரியர்களின் வாழ்த்து.

    இந்தக்கதை தன்னை இவ்வுலகிற் கேட்டவர்கள்
    கேட்டோர் கிளை தழைத்துக் கீர்த்தியுடன் தாம் வாழ்க

    (பவளக் கொடி மாலை)

    காப்புத் தொடங்கிக் கதைப்பாடல் முடிவு வரை சொல்லப்பட்ட கூறுகள், அனைத்துக் கதைப்பாடல்களிலும் கதை தொடங்குவதற்கு முன்னும் கதை முடிந்த பின்னும் பின்பற்றப்படும் அமைப்புகளாகும். இதுபோன்ற அமைப்பைச் சிற்றிலக்கிய வகைமைகளுள் இடம்பெறும் பள்ளு, குறவஞ்சி இலக்கியங்களிலும் காணலாம். பள்ளு, குறவஞ்சி இலக்கியங்களின் தாக்கம் காரணமாகக் கதைப்பாடல்களிலும் இக்கூறுகள் இடம் பெற்றிருக்கலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:27:30(இந்திய நேரம்)