தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

கடல் மேல் குமிழிகள்

  • 3.5 கடல்மேல் குமிழிகள்
     

    E

    கடல் மேல் குமிழிகள் என்னும் காப்பியம் 1948 ஆம் ஆண்டு வெளிவந்தது. திறல் நாட்டைப் புலித்திறல் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனது தந்தைக்கும் வேட்டுவப் பெண் ஒருத்திக்கும் பிறந்தவன் செம்மறித்திறல் என்பவன். புலித்திறலின் கொழுந்தி பொன்னியைச் செம்மறித் திறல் காதலித்தான். எனவே, செம்மறித்திறலை நாட்டை விட்டு விரட்டி விட்டான் புலித்திறல்.
     

    ‘செம்மறித்திறலைத்தான் திருமணம் செய்வேன்’ என்று பொன்னி பிடிவாதம் செய்தாள். எனவே, அவள் சிறையில் அடைக்கப்பட்டாள். சிறையில் பொன்னி தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகக் கறுப்பு ஆடை அணிந்தாள். அதை அறிந்த செம்மறித்திறலும் கறுப்பு ஆடை அணிகிறான்.
     

    3.5.1 மன்னனின் சாதிவெறி
     

    புலித்திறலின் மகன் வையத்திறல். நல்ல இளைஞன். அவனுக்குத் தனது மகளைத் திருமணம் செய்து கொடுப்பதற்குப் பெருநாட்டு மன்னன் தூது அனுப்பினான்.

    பெருநாட்டு மன்னனின் மகளை மணம் செய்வதற்கு வையத்திறல் மறுத்துவிட்டான். அவன் பூக்காரி ஆண்டாளின் மகளான மின்னொளியைக் காதலித்தான். இதை அறிந்த மன்னன், தனது மகன் என்றும் பார்க்காமல் வையத்திறலையும் சிறையில் அடைத்தான்.
     

    சிறையில் இருக்கும் பொன்னியைச் சந்திப்பதற்குச் செம்மறித்திறல் மாறு வேடத்துடன் சென்றான். இருவரும் ஒன்று சேர்ந்தனர்.
     


     

    தாழ்ந்த குலப்பெண்ணுக்குப் பிறந்த செம்மறித்திறல் தனது கொழுந்தியுடன் ஒன்று சேர்வதா என்று கோபம் கொண்டான் மன்னன். பொன்னியைக் கொல்வதற்கு ஏற்பாடு செய்தான்; செம்மறித்திறலையும் சிறையில் அடைத்தான்.
     

    3.5.2 மன்னனை எதிர்த்த மக்கள்
     

    மன்னனின் இந்தச் சாதி வெறியைக் காவல்காரனின் மகனான அழகன் என்பவன் அரண்மனைப் பணியாளர்களுக்கு எடுத்துச் சொன்னான்.

    அரண்மனைப் பணியாளர்கள் யாரும் அரண்மனைக்கு வரக்கூடாது என்று முடிவெடுத்தனர்.

    காவலர்கள் தங்கள் பணிகளைச் செய்யாததால் சிறையிலிருந்த வையத்திறல், செம்மறித்திறல், பொன்னி ஆகியோர் வெளியேறினர்.

    பணியாளர்கள் இல்லாததால் அரண்மனை வேலைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. உயர் சாதியினரின் பணிகளைச் செய்வதற்குத் தாழ்ந்த சாதியினர் வேண்டும் என்று மன்னனிடம் அவர்கள் எடுத்துரைத்தனர்.
     

    வள வயல் உழவும் குளச்சேறு எடுக்கவும்
    இரும்பு அடிக்கவும் கரும்பு நடவும்
    உப்புக் காய்ச்சவும் தப்படிக்கவும்
    சுவர் எழுப்பவும் உவர்மண் எடுக்கவும்
    பருப்புப் புடைக்கவும் செருப்புத் தைக்கவும்
    மாடு மேய்க்கவும் ஆடு காக்கவும்
    வழிகள் அமைக்கவும் கழிவடை சுமக்கவும்
    திருவடி தொழுது நம் பெருமை காக்கவும்
    வரும்படி நமக்கு வைத்து வணங்கவும்
    நாலாம் வகுப்பு நமக்கு வேண்டுமே!

    (கடல் மேல் குமிழிகள், இயல் 29)
     

    (தப்பு = ஒரு வகைத் தோல் கருவி; கழிவட= கழிவுப் பொருட்கள்)
     


     

    என்று மன்னனுக்கு உயர் சாதியினர் கூறினார்கள். படைத்தலைவரை அழைத்தான் மன்னன். அரண்மனைப் பணியாளர்கள் அனைவரையும் அடித்து இழுத்து வர ஆணையிட்டான்.
     

    3.5.3 திறல்நாடு தோற்றது
     

    அந்த வேளையில் பெருநாட்டுப் படைகள் வந்து திறல் நாட்டை முற்றுகையிட்டன. தாழ்ந்த சாதியைச் சார்ந்த திறல்நாட்டுப் படைவீரர்கள் ஒருவரும் போருக்குப் புறப்படவில்லை. திறல் நாட்டைப் பெருநாடு கைப்பற்றியது. புலித்திறல் சிறையில் அடைக்கப்பட்டான்.

    வையத்திறலுக்கும் பெருநாட்டான் மகளுக்கும் மண உறுதி செய்வதற்கு மக்கள் அனைவரையும் பெருநாட்டு மன்னன் அரண்மனைக்கு அழைத்தான்.
     

    3.5.4 மக்கள் புரட்சி
     

    அடுத்த நாள் பொது மக்கள் அனைவரும் அரண்மனையில் கூடினார்கள். வையத்திறல் வரவில்லை. ‘எனது மகளை வையத்திறல் திருமணம் செய்வதாக உறுதி ஏற்றால் இந்த நாட்டை ஆளலாம்’ என்றான் பெருநாட்டு மன்னன். உடனே மக்களில் ஒருவர் எழுந்து,
     


     

    உங்கள் உறவுதான் ஊர் ஆள வேண்டுமோ?
    வேந்தன் சேய்தான் வேந்தாக வேண்டுமோ?

    (கடல்மேல் குமிழிகள், இயல்:35)
     

    என்று கேட்டார். அதையே பொது மக்கள் அனைவரும் கேட்டார்கள்.

    ஆத்திரம் கொண்ட பெருநாட்டு மன்னன், பொது மக்களை அடக்கும்படி படைத்தலைவரிடம் கூறினான். அங்கிருந்த செம்மறித்திறல் பொது மக்களுக்கு உணர்வு ஊட்டினான். மக்கள் புரட்சி எழுந்தது. பெருநாடு தோற்றது; திறல் நாடு வென்றது.
     

    நாட்டினிலே குடியரசு நாட்டி விட்டோம். இந்நாள்
      நல்ல படி சட்டங்கள் அமைத்திடுதல் வேண்டும்.
    காட்டோமே சாதி மணம்! கலப்பு மணம் ஒன்றே
      நல்வழிக்குக் கைகாட்டி! கட்டாயக் கல்வி
    ஊட்டிடுவோம் முதியோர்க்கும் மாணவர்க்கும் நன்றே!
      உழையானை நோயாளி ஊர் திருடி என்போம்
    கேட்டை இனிவிலை கொடுத்து வாங்கோமே; சாதி
      கீழ் மேல் என்று உரைப்பவர்கள் வாழ்வது சிறையே

    (கடல் மேல் குமிழிகள், இயல்: 38)

    (உழையானை = உழைக்காதவனை)

    என்று பாரதிதாசன் சாதிகள் அற்ற சமத்துவச் சமுதாயம் காண்பதற்காகக் கடல் மேல் குமிழிகள் என்னும் காவியத்தைப் படைத்துள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:00:01(இந்திய நேரம்)