தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வீரத்தாய்

  • 3.4 வீரத்தாய்
     

    E

    பாரதிதாசனின் வீரத்தாய் என்னும் காப்பியம் 1938 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

    மணிபுரி நாட்டின் சேனாதிபதி காங்கேயன் என்பவன், அவன் மணிபுரியின் மன்னன் ஆகத் திட்டம் தீட்டினான். அதன்படி மன்னனுக்கு மதுப்பழக்கத்தை ஏற்படுத்தினான்.
     

    சேனாதிபதியின் சூழ்ச்சியை அறிந்த அரசி விஜயராணி அரண்மனையை விட்டு வெளியேறினாள். அதைத் தனக்கு வசதியாகப் பயன்படுத்திய சேனாதிபதி, மக்களிடம் விஜயராணி அரண்மனையை விட்டு ஓடிவிட்டாள் என்று பரப்பினான்.

    மன்னனின் மகன் சுதர்மனைக் காட்டில் கல்வி அறிவு இல்லாமல் வளரச் செய்தான் சேனாதிபதி.
     

    3.4.1 அரசி போட்ட வேடம்
     

    அரண்மனையை விட்டு வெளியேறிய விஜயராணி, ஒரு கிழவர் வேடத்தைத் தாங்கினாள். சுதர்மன் வளர்ந்து வரும் காட்டுப்பகுதிக்குச் சென்றாள். அங்கே சுதர்மனை வளர்த்து வந்த காளிமுத்து என்பவனின் நம்பிக்கையைப் பெற்றாள். சுதர்மனை வளர்ப்பதைத் தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டாள். மறைவான இடத்தில் சுதர்மனுக்குக் கிழவன் வேடத்திலிருந்த விஜயராணி வில்வித்தை கற்றுக் கொடுத்தாள்.
     

    சேனாதிபதியால் அரண்மனைக் கருவூலத்தைத் திறக்க இயலவில்லை. எனவே, அதைத் திறந்து தருபவர்களுக்கு ஆயிரம் ரூபாய்ப் பரிசு அளிப்பதாக அறிவித்தான்.
     

    கிழவன் வேடத்தில் இருந்த விஜயராணி அரண்மனைக்குப் போய், கருவூலத்தைத் திறந்து சேனாதிபதியின் நம்பிக்கைக்கு உரியவள் ஆனாள்.
     

    3.4.2 சேனாதிபதியின் திட்டம்
     

    மணிபுரி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சேனாதிபதி தானே மன்னனாக முடி சூட்டிக் கொள்ளப்போவதாக அனைத்து மன்னருக்கும் செய்தி அறிவித்தான்.

    அதே வேளையில் சேனாதிபதியின் தீய எண்ணம் வெளிப்படும்படியாக எல்லா மன்னர்களுக்கும் விஜயராணியும் செய்தி அனுப்பினாள்.

    எல்லா மன்னர்களும் வந்து அவையில் கூடினர். தான் மணிமுடி சூட்டிக்கொள்ளப் போவதைச் சேனாதிபதி தெரிவித்தான்.
     

    விஜயராணி அனுப்பிய செய்தியை அறிந்த மன்னர்கள், சேனாதிபதியின் ஏமாற்றுத் திட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சேனாதிபதி காங்கேயனால் முடிசூட இயலவில்லை.
     

    3.4.3 சேனாதிபதியின் ஓட்டம்
     

    காட்டில் கிழவன் வேடத்தில் விஜயராணி சுதர்மனுக்கு வாள்வித்தை கற்பித்துக் கொண்டிருந்தாள். அங்கே வந்த சேனாதிபதி காங்கேயன் அந்தக் கிழவனை வெட்ட வாளை ஓங்கினான். சேனாதிபதியின் வாளைத் தடுத்து அவனைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தாள் விஜயராணி.

    அடுத்த நாள் அனைவரும் அவைக்கு வந்தனர். அங்கு வந்த விஜயராணி தனது கிழவன் வேடத்தைக் களைந்தாள்.
     

    கோழியும் தன் குஞ்சுதனைக் கொல்லவரு வான் பருந்தைச்
    சூழ்ந்து எதிர்க்க அஞ்சாத தொல்புவியில் ஆடவரைப்
    பெற்றெடுத்த தாய்க்குலத்தைப் பெண்குலத்தைத் துஷ்டருக்குப்
    புற்றெடுத்த நச்சரவைப் புல் எனவே எண்ணி விட்டான்.

    (பா.க. வீரத்தாய். ப.49)
     


     

    என்று தான் தனது மகன் சுதர்மனைக் காத்த செய்தியை விஜயராணி தெரிவித்தாள். இப்பாடலில் தீயவர்களுக்குப் பெண்ணினம், பாம்பைப் போல் கொடியது. அத்தகைய பெண்ணினத்தைச் சிறு புல் என்று கருதுகிறவர்கள் தோற்பது உறுதி என்ற கருத்தையும் பாரதிதாசன் வெளிப்படுத்தியுள்ளார்.

    அதைக் கேட்டுக் கொண்டிருந்த கொன்றை நாட்டு மன்னன்,
     

    அன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும்
    என்னும் படி அமைந்தீர்! இப்படியே பெண் உலகம்
    ஆகு நாள் எந்நாளோ? அந்நாளே துன்பம் எலாம்
    போகு நாள், இன்பப் புதிய நாள் என்று உரைப்பேன்,
    அன்னை எனும் தத்துவத்தை அம்புவிக்குக் காட்ட வந்த
    மின்னே, விளக்கே, விரிநிலவே, வாழ்த்துகின்றேன்

    (பா.க. வீரத்தாய் ப.49)
     

    என்று கூறி விஜயராணியை வாழ்த்தினான்.
     

    3.4.4 மக்களாட்சி மலர்ந்தது
     

    இளவரசன் சுதர்மனின் விருப்பப்படி மணிபுரி நாட்டில் குடியாட்சி மலர்ந்தது.

    எல்லார்க்கும் தேசம் எல்லார்க்கும் உடைமை எலாம்
    எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே!
    எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக!
    எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக!

    (பா.க. வீரத்தாய் ப.49)
     

    என்று சுதர்மன் வாயிலாகப் பாரதிதாசன் தமது குடியாட்சிக் கருத்தையும் பொது உடைமைச் சிந்தனையையும் தெரிவித்துள்ளார்.

     

    தன் மதிப்பீடு: வினாக்கள் - I
     

    1. காப்பியம் என்றால் என்ன?
    1. இரண்டு மூலிகைகளின் அற்புதங்களாகப் பாரதிதாசன் தெரிவித்திருப்பன யாவை?
    1. வீரத்தாய் என்னும் காவியத்தில் மன்னன் மகன் சுதர்மனைச் சேனாதிபதி எவ்வாறு வளரச் செய்தான்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-06-2017 16:10:06(இந்திய நேரம்)