தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சேர தாண்டவம்

  • 5.4 சேர தாண்டவம்
     

    E

    சங்க இலக்கியத்திலும் சிலப்பதிகாரத்திலும் ஆட்டன் அத்தி, ஆதிமந்தி ஆகியோர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இந்தக் குறிப்புகளை மையமாகக் கொண்டு சேர தாண்டவம் என்னும் நாடகத்தைப் பாவேந்தர் படைத்துள்ளார்.

    ஒருவனுக்கும் ஒருத்திக்கும் இடையே ஏற்படும் காதலை விளக்கும் வகையில் இந்த நாடகம் அமைந்துள்ளது.
     

    5.4.1 சேர தாண்டவம் நாடகக் கதை
     

    சேர நாட்டு மன்னன் ஆட்டன்அத்தி என்பவன். அவன் சோழ நாட்டுப் படைகளின் நிலையை அறிந்து வருவதற்குத் தனது ஆடல்கலைஞர்களை ஒற்றர்களாக அனுப்பி வைத்தான். ஒற்று அறிய சென்றவர்கள் சோழ நாட்டில் பல இடங்களிலும் மன்னனின் அரண்மனையிலும் ஆடினார்கள். அவர்களின் ஆட்டத்தின் சிறப்பை அறிந்த சோழ இளவரசி அவர்களைத் தனது அந்தப்புரத்திலும் ஆடச் சொன்னாள்.

    ஒற்று அறிந்து முடித்த ஆடல்கலைஞர்கள் சேர நாட்டுக்குத் திரும்பினார்கள். தாங்கள் ஒற்று அறிந்த செய்தியுடன் சோழ நாட்டு இளவரசி ஆதிமந்தியைப் பற்றியும் அவளது அழகைப் பற்றியும் தெரிவித்தனர். ஆதிமந்தியின் அழகில் மயங்கினான் சேர மன்னன்.

    மேலும் ஒற்று அறிய வேண்டும் என்று சொல்லிக் கொண்டு ஆட்டன் அத்தியே சோழ நாட்டுக்குச் சென்றான்.
     

    5.4.2 ஆட்டன்அத்தி - ஆதி மந்தி காதல்
     

    சோழ நாட்டில் ஆடிய ஆட்டன்அத்தியின் ஆட்டத்தில் மயங்கினாள் ஆதிமந்தி. இருவரின் காதலையும் அறிந்த சோழ மன்னன் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தான்.

    காவிரியில் நீர்ப் பெருக்கு விழா வந்தது. ஆட்டன்அத்தி அவ்விழாவில் ஆடினான். ஆதிமந்தி பாடினாள். விழாவின் முடிவில் காவிரியில் ஆட்டன் அத்தி குளித்தான். அப்போது ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் ஆட்டன் அத்தியை இழுத்துச் சென்றது.
     

    கணவனைத் தேடி, காவிரி ஆற்றின் கரை ஓரமாக ஆதிமந்தி ஓடினாள். காண இயலவில்லை.
     

    5.4.3 நெய்தலி
     

    ஆட்டன் அத்தியை இழுத்துச் சென்ற ஆறு அவனைக் கடலில் கொண்டு போய்ச் சேர்த்தது. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆட்டன் அத்தியை நெய்தலி என்ற மீனவப் பெண் கண்டாள்.
     


     

    மீனவர்களின் உதவியுடன் அவனைக் காப்பாற்றினாள். தனது வீட்டில் அவனைத் தங்க வைத்து அவனது உடலைத் தேறச் செய்தாள். நெய்தலி அந்த மீனவப் பகுதித் தலைவனின் மகள். ஆட்டன் அத்தியை அவள் காதலித்தாள். இருவரும் நடுக்கடலில் பெரிய படகில் தங்கி இன்பமாய் வாழ்ந்தனர்.
     

    5.4.4 நெய்தலியின் மறைவு
     

    காவிரி ஆற்றங்கரை ஓரமாகக் கணவனைத் தேடி ஓடி வந்த ஆதிமந்தி கடற்கரைக்கு வந்து சேர்ந்தாள்; மயங்கி விழுந்தாள். மீனவர்கள் அவளைத் தூக்கி வந்து காப்பாற்றினார்கள். ஆதிமந்தியைக் கண்ட ஆட்டன்அத்தி அவளுடன் சேர்கிறான். அதைக் கண்ட நெய்தலி தனது கழுத்தில் கல்லைக் கட்டித் தொங்கவிட்டபடி கடலில் விழுந்து இறக்கிறாள். வரலாற்றுக் காதலர் இருவரின் வாழ்வில் ஏற்பட்ட இன்னலைக் கலை நயத்துடன் ‘சேர தாண்டவம்’ என்னும் இந்நாடகம் சித்திரிக்கிறது.
     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:03:59(இந்திய நேரம்)