தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

 • 3.0 பாட முன்னுரை

  முதற்பாடத்தில் எழுத்துகளின் பிறப்புப் பற்றிய பொதுவான கருத்துகளைத் தெரிந்து கொண்டீர்கள். இரண்டாம் பாடத்தில் உயிர்எழுத்துகள் பிறப்பது குறித்து அறிந்து கொண்டீர்கள். முதல் எழுத்துகள் முப்பது என்பதை நாம் முன்னரே கண்டோம். அவற்றுள் பன்னிரண்டு உயிர்எழுத்துகளும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் அடங்கும். உயிர்எழுத்துகள் பன்னிரண்டு நீங்கலாக எஞ்சியிருக்கும் பதினெட்டு மெய்யெழுத்துகளின் பிறப்புக் குறித்து இப்பாடத்தில் அறிந்து கொள்வோம். அவற்றுடன் சார்பெழுத்துகளின் பிறப்புப் பற்றியும் இப்பாடத்தில் காண்போம்.

  மெய்யெழுத்துகள் தோன்றுகின்ற முறை குறித்து அறிந்து கொள்வதற்கு முன்னர், மெய்யெழுத்துகள் அமைக்கப்பட்டிருக்கும் வரிசை முறையை அறிந்து கொள்வது நல்லது. மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை இந்த மூன்று வரிசைப்படி அடுக்கப்படவில்லை. மெய்யெழுத்துகள் பதினெட்டில் முதலில் வரும் பத்து எழுத்துகள் ஒரு வல்லினம், ஒரு மெல்லினம் என்ற அமைப்பில் அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருக்கின்றன. அதன் பின்னர் இடையின எழுத்துகள் ஆறும் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளன. கடைசியில் இருக்கும் இரண்டு எழுத்துகளும் ஒரு வல்லினம், ஒரு மெல்லினம் என்ற முறையில் அமைந்துள்ளன.

  மெய்யெழுத்துகளின் வகைப்பாடு :

  வல்லினம்
  : க், ச், ட், த், ப், ற்
  மெல்லினம்
  : ங், ஞ், ண், ந், ம், ன்
  இடையினம்
  : ய், ர், ல், வ், ழ், ள்

  இப்போது மெய்யெழுத்துகள் அமைக்கப்பட்டிருக்கும் முறையைப் பாருங்கள்.

  முதல் பத்து எழுத்துகள்
  கடைசி எட்டு எழுத்துகள்
  க்
  -
  வல்லினம்
  ங்
  -
  மெல்லினம்
  ச்
  -
  வல்லினம்
  ஞ்
  -
  மெல்லினம்
  ட்
  -
  வல்லினம்
  ண்
  -
  மெல்லினம்
  த்
  -
  வல்லினம்
  ந்
  -
  மெல்லினம்
  ப்
  -
  வல்லினம்
  ம்
  -
  மெல்லினம்
  ய்
  ர்
  ல்
  வ்
  ழ்
  ள்

  இடையின மெய்கள்
  ற்
  -
  வல்லினம்
  ன்
  -
  மெல்லினம்

  முதலில் மெய்யெழுத்துகள் பிறப்பது பற்றித் தொல்காப்பியம் தெரிவிக்கும் கருத்துகளைக் காண்போம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 17:48:22(இந்திய நேரம்)