தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மெய்யெழுத்துகளின் பிறப்பும் மொழியியல் கருத்தும்

 • 3.7 மெய்யெழுத்துகளின் பிறப்பும் மொழியியல் கருத்தும்

  எழுத்துகளின் பிறப்புக் குறித்து இலக்கண நூல்கள் தெரிவித்த பொதுவான கருத்துகளை மொழியியல் அறிஞர்களின் கருத்துகளோடு ஒப்பிட்டு அறிந்தீர்கள். பின்னர் உயிர்எழுத்துகளின் பிறப்புக் குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவித்த கருத்துகளையும் மொழியியல் கருத்துகளோடு ஒப்பிட்டுத் தெரிந்து கொண்டீர்கள். இந்தப்பாடத்தில் மெய்யெழுத்துகளின் பிறப்புக் குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவித்திருக்கும் கருத்துகளை மொழியியல் கருத்துகளோடு பொதுவாக ஒப்பிட்டுக் காண்போம்.

  தொல்காப்பியமும் நன்னூலும் மெய்யெழுத்துகள் பிறக்கின்ற இடத்தை அடிப்படையாக வைத்து மூன்று வகையாகப் பிரித்துள்ளன. அவை:

  வல்லின மெய்கள்
  -
  பிறப்பிடம் நெஞ்சு (நன்னூல்); தலை (தொல்.)
  மெல்லின மெய்கள்
  -
  மூக்கு
  இடையின மெய்கள்
  -
  கழுத்து (மிடறு)

  மொழியியல் அறிஞர்களும் மெய்யொலிகளை முதலில் அவை பிறக்கின்ற இடத்தை வைத்துப் பிரிக்கின்றனர். அடுத்த நிலையில் அந்த மெய்யொலி பிறப்பதற்கு முயற்சியில் ஈடுபடும் உறுப்புகளின் அடிப்படையில் பிரிக்கின்றனர். எனவே மொழியியல் அறிஞர்கள் அறிவியல் முறைப்படி ஆராய்ந்து வெளியிட்டுள்ள பாகுபாடு, இலக்கண நூல்கள் கூறும் பிறப்பிலக்கண அடிப்படையில் அமைந்திருக்கும் சிறப்பு வெளிப்படக் காண்கிறோம்.

  பிறப்பிடம் குறித்த செய்திகள் ஒப்பிட்டு அனைத்தையும் ஆராய்வது மிகவும் நீண்டு விடும். எனவே, மெல்லின மெய்களின் பிறப்பிடத்தை மட்டும் ஒப்பிட்டுக் காண்பது போதுமானதாக அமையும்.

  மொழியியல் அறிஞர்கள் மெல்லின மெய்களை அவற்றின் பிறப்பிடம் நோக்கி ‘மூக்கொலி’ (Nasal) என்று வரையறுக்கின்றனர். இந்த மூக்கொலிகளுள் ஒன்றாகிய மகரம் பிறப்பதை,

  இதழ்இயைந்து பிறக்கும் பகார மகாரம் (எழுத்து. 3 : 97)

  என்று தொல்காப்பியமும்,

  மீகீழ் இதழ்உறப் பம்மப் பிறக்கும் (நூற்பா. 80)

  என்று நன்னூலும் தெரிவிக்கின்றன.

  மொழியியல் அறிஞர்கள் மகரத்தை முதலில் மூக்கொலி என்று வகைப்படுத்தி விட்டுப் பின்னர் அது ஈரிதழ் ஒலி என்று விளக்கிக் கூறுகின்றனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:50:14(இந்திய நேரம்)