தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சார்பெழுத்துகளின் பிறப்பு

  • 3.5 சார்பெழுத்துகளின் பிறப்பு

    இதுவரை பதினெட்டு மெய்யெழுத்துகளும் பிறக்கின்ற முறையினைக் கண்டோம். உயிர்எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யெழுத்துகள் பதினெட்டும் சேர்த்து முப்பது முதல் எழுத்துகளும் எவ்வாறு பிறக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டீர்கள். இனி அடுத்த நிலையில் சார்புஎழுத்துகளின் பிறப்பினைப்பற்றித் தெரிந்து கொள்வோம்.

    நீங்கள் முந்தைய பாடங்களில் சார்புஎழுத்துகள் பத்து என்று படித்து இருப்பீர்கள். அவை,

    (1)
    உயிர்மெய்
    (2)
    ஆய்தம்
    (3)
    உயிரளபெடை
    (4)
    ஒற்றளபெடை
    (5)
    குற்றியலிகரம்
    (6)
    குற்றியலுகரம்
    (7)
    ஐகாரக்குறுக்கம்
    (8)
    ஒளகாரக்குறுக்கம்
    (9)
    மகரக்குறுக்கம்
    (10)
    ஆய்தக்குறுக்கம்

    ஆகியன.

    சார்புஎழுத்துகளைப் பத்து என்று வகைப்படுத்தியிருப்பது நன்னூல். ஆனால் தொல்காப்பியம் சார்பெழுத்துகளை மூன்று என்று மட்டுமே தெரிவிக்கின்றது. அவை,

    (1)
    குற்றியலிகரம்
    (2)
    குற்றியலுகரம்
    (3)
    ஆய்தம்

    ஆகியன.

    சார்பெழுத்துகள் பிறக்கும் முறையினைப் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளைத் தனித்தனியே காண்போம்.

    3.5.1 சார்பெழுத்துகள் பிறப்புப் பற்றித் தொல்காப்பியம்

    தொல்காப்பியம் முப்பது முதல்எழுத்துகளின் பிறப்பினை விளக்கிய பின்னர்ச் சார்புஎழுத்துகளின் பிறப்பினை எடுத்துக் கூறுகின்றது.

    தாமே தனித்து வரும் இயல்பில்லாமல் சில எழுத்துகளைச் சார்ந்துவரும் இந்தச் சார்புஎழுத்துகள் மூன்றும் தத்தமக்குச் சார்பாகிய எழுத்துகளின் பிறப்பிடத்திலேயே பிறக்கும் என்று தொல்காப்பியம் விளக்குகிறது. (எழுத்து. 3 : 10)

    ஆய்தம் மட்டும் குற்றெழுத்தைச் சார்ந்து வரும் எனினும், அது தலையில் தங்கி வெளிப்படும் காற்றினால் பிறப்பதால், உயிரோடு சேர்ந்து வரும், வல்லெழுத்தினைச் சார்ந்தே பிறக்கும். வல்லின மெய்கள் தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எனத் தொல்காப்பியம் கூறுவதை முன்பு கண்டீர்கள்.

    3.5.2 சார்பெழுத்துகள் பிறப்புப் பற்றி நன்னூல்

    நன்னூல் சார்பெழுத்துளைப் பத்து என்று பட்டியலிட்டுக் கூறியிருப்பதை முன்னரே அறிந்து கொண்டீர்கள். இந்தப் பத்தினுள் ஆய்தம் பிறக்கும் இடம் தலை ஆகும். ஆய்தம் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சி வாயைத் திறத்தல். இது நீங்க, எஞ்சியிருக்கும் ஒன்பது சார்புஎழுத்துகளும் தத்தம் முதல் எழுத்துகள் பிறக்கும் இடத்தில் பிறப்பன. அந்த முதல் எழுத்துகளுக்குத் தேவைப்படும் முயற்சியே இவை பிறப்பதற்குத் தேவைப்படுவன. இதனை,

    ஆய்தக்கு இடம்தலை; அங்கா முயற்சி; சார்புஎழுத்து ஏனவும் தம்முதல் அனைய (நூற்பா. 86)

    என்னும் நன்னூல் நூற்பா விளக்குகின்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:50:08(இந்திய நேரம்)