தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

எகர வினா, முச்சுட்டின் முன்னர் நாற்கணமும் புணர்தல்

  • 3.2 எகரவினா, முச்சுட்டின் முன்னர் நாற்கணமும் புணர்தல்

    எ என்னும் எழுத்து வினாப் பொருளைத் தருவதால் வினா எழுத்து எனப்படும். அ,இ,உ என்னும் மூன்று எழுத்துகளும் சுட்டுப் பொருளைத் தருவதால் சுட்டு எழுத்துகள் எனப்படும். அ என்பது சேய்மைச் சுட்டு; இ என்பது அண்மைச்சுட்டு; உ என்பது இடைநிலைச் சுட்டு; இடைநிலைச் சுட்டாகிய உ என்பது தற்போது வழக்கில் இல்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் வழங்கும் தமிழில் வழக்கில் உள்ளது. நாற்கணம் என்பது உயிர், வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய நான்கனைக் குறிக்கும்.

    எகர வினா எழுத்தின் முன்னரும், அ,இ,உ என்னும் மூன்று சுட்டு எழுத்துகளின் முன்னரும் நாற்கணமும் வந்து புணரும் புணர்ச்சி பற்றி நன்னூலார் பின்வரும் மூன்று விதிகளைக் குறிப்பிடுகிறார். அவற்றைச் சான்றுகளுடன் காண்போம்.

    1.

    எ என்னும் வினா எழுத்தின் முன்னரும், அ,இ,உ என்னும் மூன்று சுட்டு எழுத்துகளின் முன்னரும் உயிர் எழுத்துகளும், யகர மெய்யும் வந்தால் அவற்றிற்கு இடையில் வகரமெய் தோன்றும்.

    சான்று:

    எ + அளவு > எ + வ் + அளவு = எவ்வளவு
    அ + இடம் > அ + வ் + இடம் = அவ்விடம்
    இ + உலகம் > இ + வ் + உலகம் = இவ்வுலகம்
    உ + இடம் > உ + வ் + இடம் = உவ்விடம்

    எ + யானை > எ + வ் + யானை = எவ்யானை
    அ + யாழ் > அ + வ் + யாழ் = அவ்யாழ்
    இ + யாழ் > இ + வ் + யாழ் = இவ்யாழ்
    உ + யானை > உ + வ் + யானை = உவ்யானை

    இச்சான்றுகளில் எகர வினா முச்சுட்டுகளின் முன்னர் உயிரும், யகரமும் வர, அவற்றிற்கு இடையில் வகர மெய் தோன்றியதைக் காணலாம்.

    2.

    எகர வினா, முச்சுட்டுகளின் முன்னர் உயிரும் யகரமும் நீங்கிய பிற வல்லின, மெல்லின, இடையின மெய் எழுத்துகள் வரும்போது அவற்றிற்கு இடையில், வருகின்ற அந்தந்த மெய் எழுத்துகளே மிகும்.

    சான்று:

    வல்லினம்
     
    எ + குதிரை
    = எக்குதிரை
     
    அ + குதிரை
    = அக்குதிரை
     
    இ + குதிரை
    = இக்குதிரை
     
    உ + குதிரை
    = உக்குதிரை
    மெல்லினம்
     
     
    எ + நாள்
    = எந்நாள்
     
    அ + நாள்
    = அந்நாள்
     
    இ + நாள்
    = இந்நாள்
     
    உ + நாள்
    = உந்நாள்
    இடையினம்
     
     
    எ + விதம்
    = எவ்விதம்
     
    அ + விதம்
    = அவ்விதம்
     
    இ + விதம்
    = இவ்விதம்
     
    உ + விதம்
    = உவ்விதம்

    இச்சான்றுகளில் எகர வினா, முச்சுட்டுகளின் முன்னர் வல்லினமும், மெல்லினமும், யகரம் நீங்கிய இடையினமும் வர அவற்றிற்கு இடையில், வருகின்ற மெய் எழுத்துகளே மிக்கு வந்துள்ளதைக் காணலாம்.

    3.

    செய்யுளில் சுட்டு எழுத்து நீண்டு வரும்போது, அதற்கும் வருமொழியின் முதலில் உள்ள உயிர்க்கும் இடையில் யகரமெய் தோன்றும்.

    சான்று:

    அ + இடை > ஆ + இடை > ஆ + ய் + இடை = ஆயிடை

    இதில் வந்துள்ள ய் என்பது உடம்படுமெய் அன்று. ஆ+இடை என்னும் இரு சொற்களுக்கு இடையே, யகரமெய் தோன்றல் என்னும் புணர்ச்சி விதி காரணமாகத் தோன்றியதாகும்.

    இத்தகைய சுட்டு நீண்டு அமையும் புணர்ச்சி செய்யுளில் மட்டுமே வரும். அதற்கேற்ப ஆயிடை என்றசொல்,

    வடவேங்கடம் தென்குமரி
    ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்

    என்ற தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் வந்துள்ளதைக் காணலாம்.

    மேலே கூறப்பட்ட புணர்ச்சி விதிகளை நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலில் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.

    எகர வினாமுச் சுட்டின் முன்னர்
    உயிரும் எகரமும் எய்தின் வவ்வும்,
    பிறவரின் அவையும், தூக்கில் சுட்டு
    நீளின் யகரமும் தோன்றுதல் நெறியே.        (நன்னூல் - 163)

    (தூக்கில் = செய்யுளில்)

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    தமிழ் இலக்கண நூலார் குறிப்பிடும் உடம்படுமெய்கள் யாவை?
    2.
    இ ஈ ஐ - முன்னர் உயிர்வரின் இடையே வரும் உடம்படுமெய் யாது?
    3.
    வரவில்லை, திருவருள் - இவற்றைப் பிரித்துக்காட்டி இடையில் உள்ள உடம்படுமெய்யைக் குறிப்பிடுக.
    4.
    சே + அடி - இது எவ்வெவ்வாறு புணரும்?
    5.
    முச்சுட்டு என்று கூறப்படுவன யாவை?
    6.
    எகர வினா, முச்சுட்டின் முன்னர் உயிரும் யகரமும் வரின் இடையே தோன்றும் மெய் யாது?
    7.
    செய்யுளில் சுட்டு நீண்டு வருவதற்கு ஒரு சான்று தருக.
    8.
    எகர வினா, முச்சுட்டின் முன் பொருள் என்ற சொல் எவ்வாறு புணர்ந்து வரும்?
    9.
    இ + உலகம் - எவ்வாறு சேர்ந்து வரும்?
    10.
    அவ்விடம் - பிரித்துக் காட்டுக.
புதுப்பிக்கபட்ட நாள் : 15-08-2017 13:04:59(இந்திய நேரம்)