தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உயிர் ஈற்றின்முன் வல்லினம் புணர்தல்

  • 3.4 உயிர் ஈற்றின்முன் வல்லினம் புணர்தல்

    நிலைமொழியின் இறுதியில் இயல்பு ஈறாகவோ, விதி ஈறாகவோ நிற்கும் உயிர்களின் முன்னர், வருமொழியின் முதலில் வருகின்ற க,ச,த,ப என்னும் வல்லின மெய்கள், பெரும்பாலும் மிகும்; (சிறப்பு விதிகளில் சொல்லாதவையாய் இருந்தால்.)

    இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
    க ச த ப மிகும் விதவாதன மன்னே.           (நன்னூல் - 165)

    (விதவாதன - சிறப்பு விதிகளில் சொல்லாதவை.)

    இந்நூற்பாவில் கூறப்படும் இயல்பு ஈறு, விதி ஈறு என்பனவற்றை விளங்கிக் கொள்வது இன்றியமையாதது.

    • இயல்பு ஈறு

    நிலைமொழியின் ஈற்றில் உள்ள உயிரானது, எத்தகைய விகாரமும் அடையாமல் இயல்பாய் இருப்பது இயல்பு ஈறு எனப்படும்.

    சான்று:

    பலா, வாழை, மலை

    (இவற்றுள் சொல்லின் இறுதியில் உள்ள உயிர் எழுத்துகள் இயல்பாய் அமைந்தவை.)

    • விதி ஈறு

    நிலைமொழியின் ஈற்றில் இயல்பாய் நிற்கின்ற உயிர், மெய் ஆகிய இரண்டனுள், ஏதேனும் ஓர் இலக்கண விதி காரணமாக, உயிரானது நீங்கி வேறோர் உயிர் ஈறாய் நிற்பதும், மெய்யானது நீங்கி உயிர் ஈறாய் நிற்பதும், மெய்யின் மேல் ஓர் உயிர் ஏறி நிற்பதும் விதி ஈறு எனப்படும்.

    சான்று:

    நேற்று - நேற்றை
    மரம் - மர
    தாழ் - தாழ

    (இவற்றுள் சொல்லின் இறுதியில் உள்ள உயிர் எழுத்துகள் விதி காரணமாக அமைந்தவை.)

    இனி, இயல்பு ஈறாகவும், விதி ஈறாகவும் நிற்கும் உயிர்களின் முன்னர், க,ச,த,ப என்னும் வல்லின மெய்கள் வந்து புணர்தலைச் சான்றுகளுடன் காண்போம்.

    • இயல்பு உயிர் ஈறுகளின் முன்னர் வல்லினம் வந்து மிகுதல்

    சான்று:

    எட்டி + காய் = எட்டிக்காய்
    பலா + சுளை = பலாச்சுளை
    வாழை + தோப்பு = வாழைத்தோப்பு
    மலை + பழம் = மலைப்பழம்

    இச்சான்றுகளில் எட்டி, பலா, வாழை, மலை என்னும் நிலைமொழிகளின் இறுதியில் இ, ஆ, ஐ என்னும் உயிர் ஈறுகள் இயல்பாய் நிற்றலால் இயல்பு உயிர் ஈறுகள் ஆகும். இவற்றின் முன்னர் வந்த க,ச,த,ப என்னும் வல்லின மெய்கள் மிக்கு வந்துள்ளதை இச்சான்றுகள் காட்டுகின்றன.

    • விதி உயிர் ஈறுகளின் முன்னர் வல்லினம் வந்து மிகுதல்

    சான்று:

    நேற்று + பொழுது = நேற்றைப்பொழுது
    மரம் + கிளை = மரக்கிளை
    தாழ் + கோல் = தாழக்கோல்

    இச்சான்றுகளில் நேற்று என்பது நேற்றை என்றும், மரம் என்பது மர என்றும், தாழ் என்பது தாழ என்றும் சில இலக்கண விதிகளின் காரணமாக மாறியுள்ளன.

    இவ்வாறு விதிகளின் காரணமாக மாறியுள்ள நிலைமொழிச் சொற்களாகிய நேற்றை, மர, தாழ என்பனவற்றில் முறையே இறுதியில் வரும் ஐ, அ என்பன விதி உயிர் ஈறுகள் ஆகும். இவ்விதி உயிர் ஈறுகளின் முன்னர் வந்த க, ச, த, ப என்னும் வல்லின மெய்கள் மிக்கு வந்துள்ளதை இச்சான்றுகள் காட்டுகின்றன.

    சிறப்பு விதிகளில் சொல்லாதவை பெரும்பாலும் மிகும் என்றமையால், சிறப்பு விதிகளில் சொல்லியவை பெரும்பாலும் வல்லினம் மிகா என்பது பெறப்படும். அதனை அடுத்து வரும் உயிர் ஈற்றுச் சிறப்பு விதிகள் என்ற பாடத்தில் பார்க்கலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 15-08-2017 14:10:19(இந்திய நேரம்)