தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உயிர் ஈற்றுப் புணர்ச்சி - சிறப்பு விதிகள்

  • பாடம் - 4

    C02134 உயிர் ஈற்றுப் புணர்ச்சி - சிறப்பு விதிகள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    மொழிக்கு இறுதியில் வரும் பன்னிரண்டு உயிர்களில் எ, ஒ, ஔ என்னும் மூன்று உயிர்கள் நீங்கலான ஏனைய ஒன்பது உயிர் ஈறுகள் பற்றி நன்னூலார் கூறும் புணர்ச்சி விதிகளை விளக்கிச் சொல்கிறது. நன்னூலார் உயிர் ஈற்றுப் புணர்ச்சி விதிகளை அகர ஈற்றுச் சிறப்பு விதிகள், ஆகார ஈற்றுச் சிறப்பு விதிகள் என்றவாறு ஒவ்வோர் உயிர் ஈற்றிற்கும் தனித்தனியாகவே கூறுகிறார். நன்னூலார் கூறும் நெறிமுறையில் ஒவ்வோர் உயிர் ஈற்றிற்கான புணர்ச்சி விதிகளை இப்பாடம் தக்க சான்றுகள் காட்டி விளக்கிச் சொல்கிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அகர ஈற்றுப் பெயரெச்சம் போன்ற பல்வேறு அகர ஈற்றுச் சொற்களுக்கு முன்னர் வரும் வல்லினம் மிகாமல் இயல்பாதலை அறிந்து கொள்ளலாம்.
    • பல, சில என்னும் இருசொற்களும் தம்முன் தாமும், தம்மொடு பிறசொற்களுமாகப் புணரும் திறத்தை அறிந்துகொள்ளலாம்.
    • பழந்தமிழகத்தில் இருந்த நாழி, உரி என்னும் முகத்தல் அளவைப் பெயர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
    • இகர, ஐகார ஈற்றுச் சொற்கள் முன்னர் வரும் வல்லினம் எழுவாய்த் தொடரிலும், உம்மைத் தொகையிலும் இயல்பாக வருதலை அறிந்துகொள்ளலாம்.
    • இருபெயரொட்டுப் பண்புத்தொகையிலும், உவமைத்தொகையிலும் வல்லினம் மிகுவதைத் தெரிந்து கொள்ளலாம்.
    • பனை என்ற சொல்லின் முன்னர்க் கசதப என்னும் வல்லின மெய்கள் வரும்போது, அச்சொல் ஈற்று ஐகாரம் கெட்டு அம் சாரியை பெறுதலை இன்றும் வழக்கில் இருப்பதை அறியலாம்.

     

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2017 12:51:13(இந்திய நேரம்)