தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 4.8 தொகுப்புரை

    இதுகாறும் உயிர் ஈறுகள் ஒவ்வொன்றிற்குமான புணர்ச்சி விதிகளாக நன்னூலார் கூறியனவற்றைத் தக்க சான்றுகளுடன் பார்த்தோம். அவற்றை ஈண்டுத் தொகுத்துக் காண்போம்.

    செய்யிய என்னும் வினையெச்சம், அகர ஈற்றுப் பெயரெச்சம், அகர ஈற்று வினைமுற்று, ஆறாம் வேற்றுமைப் பன்மை உருபு, அகர ஈற்றுப் பன்மைப் பெயர் ஆகியவற்றின் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும் என்பதைத் தெரிந்து கொண்டோம். குறிப்பாக இக்காலத் தமிழில் வந்த பையன், ஓடிய பையன், சென்ற பையன், நல்ல பையன் என்பன போல எவ்வளவோ அகர ஈற்றுப் பெயரெச்சங்கள் வழங்குகின்றன. இவற்றை வல்லினம் மிகாமல் எழுத நன்னூலார் கூறும் புணர்ச்சி விதிகள் மிகவும் பயன்படக் காண்கிறோம்.

    பல, சில என்னும் சொற்கள் தம்முன் தாமும், தம்மொடு பிற சொற்களுமாகப் புணரும் திறத்தை அறிந்து கொண்டோம்.

    நாழி, உரி போன்ற பழங்கால முகத்தல் அளவைப் பெயர்கள் புணர்ச்சியில் வருவதை அறிந்து கொண்டோம். நாழி + உரி = நாடுரி என்றாகி அச்சொல் ஒன்றரைப்படி என்னும் பொருளைத் தருவதையும் அறிந்து கொண்டோம்.

    இகர, ஐகார ஈற்றுச் சொற்களின் முன்னர் வரும் வல்லினம் எழுவாய்த் தொடர், உம்மைத்தொகை ஆகியவற்றில் இயல்பாதலை அறிந்து கொண்டோம். அதே வல்லினம் இருபெயரொட்டுப் பண்புத்தொகை, உவமைத்தொகை ஆகியவற்றில் மிகுதலையும் தெரிந்து கொண்டோம்.

    ஒடு உருபு, அது உருபு, முற்றியலுகர ஈற்று எண்ணுப் பெயர், வினைத்தொகை, அது, இது, உது என்னும் சுட்டுப் பெயர்கள், எது என்னும் வினாப் பெயர் ஆகியவற்றின் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும் என்பதை நன்கு அறிந்து கொண்டோம்.

    பனை என்ற பெயரோடு, க, ச, த, ப என்னும் வல்லின மெய்கள் புணரும்போது, பனை என்ற சொல் ஈற்று ஐகாரம் கெட்டு அம் சாரியை பெறும் என்பதை, பனங்கிழங்கு, பனஞ்சாறு, பனந்தோப்பு, பனம்பழம் முதலிய சான்றுகளால் அறிந்து கொண்டோம். இச்சொற்கள் யாவும் இன்றும் பனையோடு தொடர்புடையனவாய் வழங்கி வருவதை அறிந்து கொள்கிறோம்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    ஒடு உருபின் முன்னர் வரும் வல்லினம் எவ்வாறு ஆகும்?
    2.
    அது உருபின் முன்னர் வரும் வல்லினம் மிகுமா?
    3.
    வினைத்தொகையில் வல்லினம் மிகுமா? இரு சான்றுகள் தருக.
    4.
    பூப்பெயர் முன்னர் வரும் வல்லினம் பொதுவிதிப்படி எவ்வாறு ஆகும்?
    5.
    ஏகார இடைச்சொல்லுக்கு முன் வரும் வல்லினம் எவ்வாறு ஆகும்? ஒரு சான்று தருக.
    6.
    பனை முன்னர்க் கொடி என்னும் சொல் எவ்வாறு புணரும்?
    7.
    ஆவிரை + வேர் = சேர்த்து எழுதுக.
    8.
    புன்னையங்கானல் - பிரித்து எழுதுக.
    9.
    பனந்தோப்பு - பிரித்து எழுதுக.
    10.
    பனை + அட்டு = சேர்த்து எழுதுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-08-2017 15:50:41(இந்திய நேரம்)