தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆகார ஈற்றுச் சிறப்பு விதிகள்

  • 4.2 ஆகார ஈற்றுச் சிறப்பு விதிகள்

    ஆகார ஈற்றுச் சிறப்பு விதிகளை நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலில் இரண்டு நூற்பாக்களில் குறிப்பிடுகிறார்.

    • ஆகாரத்தின் முன் வல்லினம் இயல்பாதல்

    அல்வழிப் புணர்ச்சியில் ஆ என்னும் பெயர்க்கும், மா என்னும் பெயர்க்கும், மியா என்னும் முன்னிலை அசைச்சொல்லுக்கும், ஆகார ஈற்று எதிர்மறைப் பலவின்பால் வினைமுற்றுக்கும் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும்.

    அல்வழி ஆ, மா, மியா, முற்று முன்மிகா         (நன்னூல், 171)

    ( - பசு ; மா - விலங்கு, மரம்)

    சான்று:

    ஆ + தின்றது = ஆ தின்றது
    மா + பெரிது = மா பெரிது
    கேண்மியா + கண்ணா = கேண்மியா கண்ணா
    உண்ணா + குதிரைகள் = உண்ணா குதிரைகள் (உண்ணமாட்டா குதிரைகள்)

    • தனிக்குறிலை அடுத்து வரும் ஆகார ஈற்றுச் சொற்கள்

    நிலா, சுறா, இறா, கனா, உணா (உணவு) போன்றவை தனிக்குறிலை அடுத்து வரும் ஆகாரத்தை ஈற்றிலே உடைய சொற்கள். இத்தகைய சொற்கள் செய்யுளில் எவ்வாறு வரும் என்பது பற்றி நன்னூலார் கூறியுள்ளார். அவர் கூறுவதைச் சான்றுடன் காண்போம்.

    தனிக்குறிலை அடுத்து வரும் ஆகாரத்தை ஈற்றிலே உடைய சொற்கள் செய்யுளில் வரும்போது, இறுதியில் உள்ள ஆகாரம் அகரமாகக் குறுகுதலும், அதனோடு உகரம் பெறுதலும், அவ்விரண்டும் அல்லாமல் இயல்பாய் நிற்றலும் ஆகிய மூன்று விதிகளை உடையன.

    குறியதன் கீழ்ஆக் குறுகலும், அதனோடு
    உகரம் ஏற்றலும், இயல்புமாம், தூக்கின்                     (நன்னூல், 172)

    (தூக்கின் - செய்யுளில்)

    சான்று:

    நிலவிரி கானல்வாய் நின்று
               - ஈற்றில் உள்ள ஆ என்பது அ எனக் குறுகியது.
    மருவின் என் செய்யுமோ நிலவு
              -
    ஆ என்பது அ எனக் குறுகி உகரம் ஏற்றது.
    நிலா வணங்கும் வெண்மணல் மேல் நின்று
               - இயல்பாயிற்று.

    செய்யுளில் இம்மூன்றும் (நில, நிலவு, நிலா) வரும். எனவே, வழக்கில் இரண்டும் ஒன்றும் வரப்பெறும் என்பது பெறப்படும். அவ்வாறு வரும்போதும், ஆகாரம் குறுகி உகரம் ஏற்காமல் நிற்றல் (நில என நிற்றல்) வருவதில்லை. மற்ற இரண்டில், இரண்டுமோ, ஒன்று மட்டுமோ வழக்கில் வரும்.

    சான்று:

    நிலவு உதித்தது, நிலா உதித்தது
    கனவு கண்டேன், கனாக் கண்டேன்

    இச்சான்றுகளில் வரும் நிலா, கனா என்னும் சொற்கள் குறுகி, உகரம் ஏற்றல், இயல்பு என்ற இரண்டும் பெற்று வந்தன.

    சுறா
    இறா

    இவை வழக்கில் இயல்பு என்ற ஒன்றுமட்டும் பெற்று வந்தன. இவை சுறவு, இறவு என வழங்குவது வழக்கில் இல்லை.

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 18:47:17(இந்திய நேரம்)