தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

சிற்றிலக்கியங்கள்

  • 2.1 சிற்றிலக்கியங்கள்

    Audio Button

    சிற்றிலக்கியங்கள் பல வகைப்படும். கோவை, உலா, அந்தாதி, கலம்பகம், தூது, மாலை, பரணி, மடல், பள்ளு, குறம் முதலாகிய பலவகைச் சிற்றிலக்கியங்கள் தமிழில் உள்ளன. கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து சிற்றிலக்கியங்கள் தோன்றியுள்ளன. காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி, இரட்டை மணிமாலை ஆகியவற்றைப் பாடியுள்ளார். இவை காலத்தால் மிகவும் பழமையானவை.

    • தெய்வங்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள் ஆகியோரைப் பாடுதல்.
    • சிலேடை என்ற இருபொருள் அமையப் பாடுதல்.
    • பலரையும் கவரவேண்டும் என்ற கருத்தில் பெண்களை வருணித்தல்.
    • தம் புலமையை வெளிக்காட்டும் எண்ணத்தோடு பாடுதல்.

    ஆகியன சிற்றிலக்கியங்கள் படைத்தோரின் நோக்கங்களாக இருந்தன.

    2.1.1 சிற்றிலக்கியங்களின் பண்புகள்

    சமயம், சாதி, இன, குலப்பிரிவுகள் போன்றவை தமிழரிடையே ஆதிக்கம் செய்யத் தொடங்கிவிட்டமையினைப் பிற்காலப் பாண்டியர் கால, நாயக்கர் காலத் தமிழகம் காட்டுகின்றது. பேரிலக்கியங்கள் தோன்றுகின்ற காலச்சூழல் மறைந்து, அந்தாதி, உலா, கலம்பகம், பிள்ளைத் தமிழ், தூது, பரணி, கோவை, மாலை போன்ற சிற்றிலக்கியங்கள் பெருகத் தோன்றும் காலம் மலர்ந்தது. சமயத் தலைவர்களையும், கொடையாளிகளையும், தெய்வங்களையும், குறுநில மன்னர்களையும், புலவர்கள் புனைந்து பாடத் தொடங்கினர். அளவுக்கு மீறிய புகழ்ச்சி, மீண்டும் மீண்டும் பல நூல்களில் இடம்பெறும். அலுப்பூட்டக்கூடிய, செயற்கையான வருணனைகள், பிறமொழி கற்பித்த உத்திகள், அணிகள், பிறமொழிச் சொற்கள் ஆகியன இக்காலத்து இலக்கியங்களின் பண்புகளாக அமைந்தன.

    வகை

    விளக்கம்

    உதாரணம்

    கலம்பகம்

    பல பூக்களால் தொடுத்த மாலை போன்று, பல பாவினங்கள், பல உறுப்புக்கள் கலந்து பாடுவது.

    நந்திக் கலம்பகம்
    திருவரங்கக் கலம்பகம்
    மதுரைக் கலம்பகம்

    கோவை

    தலைவன்,
    தலைவியருடைய களவு
    ஒழுக்கம், கற்பு ஒழுக்கம்
    பற்றிப் பலதுறைகளில்
    (400) பாடுவது.

    திருக்கோவையார்
    பாண்டிக்கோவை
    திருவெங்கைக்கோவை

    பரணி

    போரில் 1000 யானைகளைக் கொன்ற வீரனைப் பற்றிப
    பாடுவது.

    கலிங்கத்துப்பரணி
    தக்கயாகப்பரணி
    இரணியவதைப்பரணி

    பள்ளு

    பள்ளர் (உழவர்)களின்
    வாழ்க்கையை விளக்கும்
    நாடகச் சிற்றிலக்கியம்.

    முக்கூடற்பள்ளு
    குருகூர்ப்பள்ளு
    திருவாரூர்ப்பள்ளு

    பிள்ளைத்
    தமிழ்

    தெய்வங்களையும்,
    தமிழ்ப் பெரியோர்களையும்
    குழந்தையாகக் கருதி,
    அவர்களைப் புகழ்ந்து
    பாடுவது.

    மீனாட்சியம்மை
    பிள்ளைத்தமிழ்,
    முத்துக்குமாரசாமி
    பிள்ளைத்தமிழ்,
    சேக்கிழார் பிள்ளைத்தமிழ்.

    உலா

    தலைவன் வீதியில் உலா
    வரும்பொழுது ஏழு
    வெவ்வேறு பருவ நிலையில் உள்ள பொது
    மகளிர் காமுறுவதாகப்
    பாடுவது

    மூவர் உலா
    ஏகாம்பரநாதர் உலா
    சொக்கநாதர் உலா

    தூது

    தலைவனிடம் மையல்
    கொண்ட தலைவி தென்றல், வண்டு, கிளி, மயில், மேகம்
    போன்றவற்றைத் தன்
    ஆற்றாமையை இயம்பத்
    தூது அனுப்புவதாகப்
    பாடுவது.

    தமிழ் விடுதூது
    கிள்ளை விடுதூது
    பண விடுதூது

    அந்தாதி

    ஒரு பாடலின் இறுதிப்
    (அந்தம்) பகுதியை அடுத்த பாடலில் முதலாக (ஆதி)
    அமைத்துப் பாடுவது.

    பொன்வண்ணத்தந்தாதி
    திருவரங்கத்தந்தாதி
    அபிராமி அந்தாதி

    குறவஞ்சி

    தலைவனிடம் கொண்ட
    காதல் (குறம்) நிறைவேறுமா எனக்
    குறப்பெண்ணிடம்
    தலைவி குறி கேட்பதாக
    அமைவது.

    திருக்குற்றாலக் குறவஞ்சி
    பெத்லேகம் குறவஞ்சி
    சரபேந்திர பூபாலக்குறவஞ்சி

    மடல்

    தான் விரும்பிய காதலரை அடையப் பெறாத காதலர் பனை மடலால் செய்த பரியின் மீது அமர்ந்து
    பாடுவது.

    பெரிய திருமடல்
    சிறிய திருமடல்
    வருணகுலாதித்தன் மடல்

    2.1.2 கற்பனைப் போக்கு

    சைவம், வைணவம், இசுலாம், கிறித்துவம் ஆகிய நான்கு சமயங்களும் தத்தம் சமயம் சார்ந்த கடவுளர், பெரியோர், வள்ளல்களைப் புனைந்து பாடும் நெறியில் இவ்வகைச் சிற்றிலக்கிய நூல்கள் பாடப் பெற்றன. இலக்கியத்துள் சாதி ஒரு தகுதியான இடத்தைப் பிடித்துக் கொள்ளத் தொடங்கி விட்டது. குறவஞ்சி, பள்ளு நூல்களும், கலம்பகத்தில் இடம்பெறும் இடைச்சியார், வலைச்சியார் போன்ற உறுப்புக்களும், சாதிய வழக்கங்களைக் குறித்துக் காட்டின. வளமிகுந்த புலமை எல்லையில்லாத கற்பனை வானில் கொடிகட்டிப் பறந்தது. உயர்வு நவிற்சிகளும், சொல் விளையாட்டுக்களும் மிகுந்த நிலையில், புலவர்கள் நடைமுறை உலகை மாற்றிப் பாடத் தொடங்கினர். தம் வித்தகப் புலமை ஆற்றலால், எதையும் பாடமுடியும் என்ற ஆற்றலைக் காட்டவே அவர்கள் இந்த இலக்கியங்களைத் தேர்ந்தனர்.

    2.1.3 போலிப் புகழ்ச்சி

    உண்மையில் உயர்ந்தோங்கிய புகழ் கொண்ட தலைவர்களைப் பாடும் மனப்போக்கு, அக்காலத்தில் இல்லை. எதற்கும் தகுதியற்றவர்களையும் இந்திரன் சந்திரன் என்று தம் புலமையால் போற்றும் நிலை உருவாகிவிட்டது. இவ்வாறு பாடும்போது இவர்கள் எளிய மக்களைச் சென்றடைய வேண்டுமென்று பாடவில்லை. மாறாக நிலஉடைமைச் செல்வர்களும், குறுநில மன்னர்களும், தத்தம் சமய வட்டத்தைச் சார்ந்தவர்களும் ஏற்றுப் போற்றுதற்கென்றே பாடினர். முற்காலச் சோழர் காலத்தில் நாடு அமைதியாயிருந்தது; செல்வச் செழிப்புற்றிருந்தது. கல்வி, கலை முயற்சிகள் பெருகின. பெருங்காவியங்கள் தோன்றின. சோழராட்சி மறைந்தபின் சிற்றரசுகளும் குறுநிலத் தலைமைகளும் தத்தம் பகுதிகளில் அதிகாரம் செலுத்தினர். இவர்களைக் குறித்து வையாபுரிப்பிள்ளையவர்கள் சொல்வதைப் பாருங்கள்:

    “இவர்கள் பெரும்பாலும் தோத்திரப் பிரியர்களாக இருந்தனர். தம்மைப் பற்றிப் புகழ்ந்து பாடிப் பிரபந்தங்கள் முதலியன இயற்றிய கவிஞர்களையே இவர்கள் போற்றி வந்தனர். இவ்வகைப் பாடல்களைக் குறித்து :

    கல்லாத ஒருவனைநான் கற்றாய் என்றேன்
         காடறியும் மறவனைநா டாள்வாய் என்றேன்
    பொல்லாத ஒருவனைநான் நல்லாய் என்றேன்
         போர்முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்
    மல்லாரும் புயம்என்றேன் சூம்பல் தோளை
         வழங்காத கையனைநான் வள்ளல் என்றேன்
    இல்லாத சொன்னேனுக்கு இல்லை என்றான்
         யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே.

    Audio Button

    என்று ஒரு புலவர் இரங்குகின்றார். இப்பாடலிற் குறிக்கப் பெற்றோரைப் போன்றுள்ளவர்கள் மீது தூது, மடல், நொண்டி, காதல் முதலிய பிரபந்தங்கள் உண்டாயின. இப்பிரபந்தங்கள் உண்டாகும் சூழ்நிலை காவியம் தோன்றுதற்குச் சிறிதும் இடந்தரமாட்டாது என்பது வெளிப்படை".

புதுப்பிக்கபட்ட நாள் : 19-10-2017 16:44:47(இந்திய நேரம்)