Primary tabs
- 1.5 தொகுப்புரை
இதுவரை நீங்கள் படித்ததை மீண்டும் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் கண்முன் தமிழகத்தின் நாணயமும், கல்வெட்டும் பசுமையாக நிற்கின்றன அல்லவா?
பழங்காலத்தில் செய்திகளைக் கல்லில் பொறித்தனர் என்பதையும், நாணயம் அச்சுக் கருவி மூலம் வார்க்கப்பட்டது என்பதையும் அறிந்தீர்கள். கல்வெட்டுகள் சமண முனிவர் தங்கிய மலைக் குகைகளில் காணப்பட்டன. தென்பிராமி எழுத்துகளே தமிழ் என்று கூறப்பட்டது. கே.வி. சுப்பிரமணியம் அவர்களின் முயற்சியால்தான் கல்வெட்டெழுத்துகள் முதலில் படிக்கப்பட்டன. அகழாய்வு நடந்த இடங்களில் பல்வேறு தொல்பொருள்கள் கிடைத்தன. அவற்றில் சங்ககால மன்னர் பெயர்கள் காணப்பட்டன. தனிக் கல்லில் கல்வெட்டுகளைப் பொறித்துக் கோயில் சுவர்களில் பதித்தனர். கல்வெட்டுக் காணப்படும் இடங்கள், அவை கூறும் செய்திகள், அரசு ஆணைகள், கல்வெட்டின் தொடக்கம், அதில் இடம்பெறும் செய்திகளின் வைப்புமுறை, மெய்க்கீர்த்தி, கல்வெட்டைப் படி எடுப்போர் அதில் காணப்படும் அரும் சொற்கள் முதலியவையும் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.