தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தளிச்சேரிப்பெண்கள்

  • 3.2 தளிச்சேரிப் பெண்கள்

    தளி என்பது கோயிலைக் குறிக்கும் சொல். சேரி என்பது சேர்ந்து வாழும் இடம் ஆகும். கோயிலில் ஆடல், பாடல், பணிகளைச் செய்த மக்கள் பெரும்பாலும் பெண்கள் தங்கிய இடம் தளிச்சேரியாகும். தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராசராசன் 402 தளிச்சேரிப் பெண்களை நியமித்துக் கோயில் அருகே தளிச்சேரி ஏற்படுத்தி நான்கு வரிசை வீதிகளில் அவர்களைத் தங்க வைத்ததைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அவர்கள் சோழ நாடெங்குமுள்ள கோயில்களில் பணிபுரிந்தவர்கள் ஆவர்.
     

    3.2.1 பணிநிலையும் பட்டமும்
    • பணிநிலை

    இவர்கள் நக்கன், மாணிக்கம், மாணிக்கி, சதுரி, தளியிலார், பதியிலார், தேவரடியார், இஷபத் தளியிலார், கூத்திகள், கணிகையார், அடிகள்மார் என்று பல்வேறு கோயில்களில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டார்கள். இவர்கள் நிலையான பணியில் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்குப் பின் இவர்கள் வாரிசுதாரர்கள் பணி செய்யலாம். வாரிசுதாரர் கலைவல்லா ராக இல்லாவிடில் கலைவல்ல பிறரை நியமித்து, இவர்கள் உரிய சம்பளம் - நெல் பெறலாம். வாரிசுதாரர் இன்றி யாராவது இறந்தாலோ அல்லது பணிபுரிந்த கலைவல்லவராய் வேறு ஊர் போய்விட்டாலோ அக்கோயில் ஆளும் குழுவினரே தக்கவர்களை நியமிக்கலாம் என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
     

    • தலைக்கோல் பட்டம்

    இவர்களில் பெண்கள் சிலர் நல்ல நாட்டியப் பயிற்சி பெற்று அரசு அவையில் அல்லது கோயிலில் அரங்கேற்றம் என்னும் தலையரங்கு ஏறித் தலைக்கோல் பட்டம் பெற்றனர். அவர்கள் தலைக்கோலி என்று அழைக்கப்பட்டனர்.
     

    (திருவிடை மருதூர்க் கல்வெட்டு - முதல் பராந்தகன் காலம்)

    ‘ஆரூர் தேவனார் மகள் நக்கன் பிரமதேவியாகிய
         மும்முடிசோழத் தலைக்கோலி’

    ‘உறவாக்கின தலைக்கோலி’
    ‘புங்கத்துறை வல்லவத் தலைக்கோலி’
    ‘பதியிலார் தியாகவிநோதத் தலைக்கோலி’
                                (திருவாரூர்க்கோயில் கல்வெட்டுகள்)

    என் னும் கல்வெட்டுகள் தலைக்கோல் பட்டம் பெற்ற கலைவல்ல மகளிர் சிலரைக் குறிப்பிடுகின்றன.

    1)

    கலைவல்லார் பெற்ற சிறப்புப் பட்டங்கள் யாவை?

    2)

    தளி என்பதன் பொருள் என்ன?

    3)

    தலைக்கோல் என்றால் என்ன?

    4)

    சாந்திக்கூத்து என்றால் என்ன?

    5)

    பழமையான இசைக் கல்வெட்டு எங்கே உள்ளது?

புதுப்பிக்கபட்ட நாள் : 27-10-2017 12:40:02(இந்திய நேரம்)