தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மடங்கள்

  • 4.2 மடங்கள்

    சமய நம்பிக்கைக்கும், வழிபாட்டிற்கும் உரியனவாகக் கோயில்கள் விளங்குவதைப் போல, சமயப் பணிகட்கும், சமய வளர்ச்சிக்கும் மடங்கள் ஏற்பட்டன. தேவார காலத்திலேயே சுமார் 20 மடங்கள் தமிழ்நாட்டில் இருந்தன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சமய அடியார்களும், அரசர்களும் பல மடங்களை ஏற்படுத்தினர். அவை பெரும்பாலும் கோயில்களைச் சார்ந்தே இருந்தன.

    • மடங்களின் பெயர்கள்

    திருநீலவிடங்கன் மடம், கூத்தாடு நாயனார் மடம் என இறைவன் பெயரிலும், அருள்மொழித்தேவன் மடம், வீரபாண்டியன் மடம் என அரசர் பெயரிலும், நமிநந்தியடிகள் மடம், பரஞ்சோதி மடம் என நாயன்மார் பெயரிலும், திருமாளிகைப்பிச்சன் மடம், அன்பர்க்கு அடியான் மடம் எனச் சமய அடியார் பெயரிலும், பன்மாகேசுவரர் மடம், நாற்பத்தெண்ணாயிரவர் மடம் எனப் பல குழுவினர் பெயரிலும் மடங்கள் ஏற்பட்டன.

    • பலவகை மடங்கள்

    திருமுருகன் திருமடம், அறப்பெருஞ்செல்வி சாலை, சங்கரதேவன் அறச்சாலை என்ற அமைப்பில் திருமடம், சாலை, அறச்சாலை எனவும் மடங்கள் அழைக்கப்பட்டன. ஒரே ஊரில் பல மடங்கள் இருந்தன. சோழ மாதேவியில் மேலைமடம், கீழைமடம் என இரு மடங்கள் இருந்தன.

    4.2.1 மடங்களின் நிருவாகம்

    மடத்தின் தலைவர் மடபதி அல்லது மடாதிபதி எனப்பட்டார். மடத்தை ஒட்டியுள்ள பகுதிகள் மடவளாகம் என்றும், மடத்திற்குரிய கொடை நிலம் மடப்புறம் எனவும் கூறப்பட்டன. மடங்களில் பூசிக்கும் ஆண்டார், கும்பிட்டிருக்கும் ஆண்டார் ஆகியோர் இருந்தனர். அவர்கள் தவசியர் என்றும் கூறப்பட்டனர். மடத்து நிர்வாகத்திற்குச் சில இடங்களில் ஏழுபேர் கொண்ட குழு இருந்தது. அவர்கள் மடத்துச் சத்தப் பெருமக்கள் எனப்பட்டனர்.

    4.2.2 சமண, பௌத்த மடங்கள்

    பொதுவாக சமணர்களும் பௌத்தர்களும் மடங்களில் தங்கியிருந்தனர். அதற்குரிய சான்றுகள் பல கிடைத்துள்ளன.

    • சமண மடங்கள்

    சமண காஞ்சி எனப்படும் திருப்பருத்திக் குன்றத்திலும், பாடலி என அழைக்கப்பட்ட திருப்பாதிரிப் புலியூரிலும் சமணர் மடங்கள் இருந்தன. திண்டிவனத்திற்கும், செஞ்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மேல் சித்தாமூரில் இன்றும் திகம்பர சமண மடம் ஒன்று சிறப்புடன் விளங்குகிறது. தமிழகத்தின் சமணத் தலைமைப் பீடமாக அது விளங்குகிறது. வச்சிரணந்தி, சிம்மசூரி, சர்வநந்தி போன்ற சமணப் பெரியார்கள் சமண மடத்துடன் தொடர்புகொண்டவர்களாகக் குறிக்கப்படுகின்றனர். பல சமணப் பள்ளிகளில் தீர்த்தங்கரர் உருவங்கள் வணங்கப்பட்டன.

    • பௌத்த மடங்கள்

    இன்று பூதமங்கலம் எனப்படும் போதிமங்கை, காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் பௌத்த அறநிலையங்கள் இருந்தன. தமிழகக் கடலோரப் பகுதியான தொண்டி போன்ற பல இடங்களில் பௌத்த மடங்கள் இருந்தன. பல பௌத்தப் பள்ளிகளில் புத்தபெருமான் வணங்கப்பட்டார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-08-2017 20:00:36(இந்திய நேரம்)