Primary tabs
- 5.3 வீரவழிபாடு
போர்க்களத்தில் வீரம் காட்டிப் போர் செய்து வீரமரணம் அடைந்தவர்கட்குச் சமுதாயத்தில் மிக நல்ல மரியாதை இருந்தது. அவர்களைப் புதைத்த இடத்தை மேடாக்கிக் கல்வட்டம் அமைத்து அவ்விடத்தில் நீண்டு உயர்ந்த கல் ஒன்றை நடுவர். அது நெடுங்கல் அல்லது நெடுநிலை நடுகல் எனப்படும். அக்கல்லில் அவ்வீரன் பெயரையும், அவன் பெருமைகளையும் கல்வெட்டாகப் பொறிப்பர். அதற்கு மாலைசூட்டி, ஆட்டுக் கிடாயைப் பலிகொடுத்து, கள் படைத்து வழிபடுவர்.
செய்யுள்களும், இலக்கியங்களும், இலக்கணங்களும், இதிகாசங்களும், புராண ஆகமங்களும், தோத்திரங்களும், சாத்திரங்களும் உயர்ந்தோராகிய மேன்மக்களின் வழக்கு ஆகும். வரலாற்றில் ஊற்றுக் கண்ணாகத் திகழும் குடிமக்களின் பண்பாட்டை அறிய, அக்காலச் சமுதாயத்தின் உண்மை நிலையை அறிய, நடுகற்களாகிய வீரக்கற்களே சான்றாக விளங்குகின்றன.
- வீரக்கல் எடுக்கப்பட்டோர்
பண்டைய நடுகற்கள் மன்னர்களுக்கோ உயர்ந்தோர்களுக்கோ எடுக்கப்படவில்லை. அவை சமுதாயத்தில் பெரும் தொகையாக விளங்கிய மறவர், எயினர், மழவர், வேடர், வடுகர், கோவலர், கள்வர், பறையர், பாணர் குடிகளைச் சேர்ந்த சேவகன், இளமக்கள், தொறுவாளன், இளையோர், ஆள், இளமகன், அடியாள், அடியார், மன்றாடி, மனைமகன் ஆகியோருக்கு மட்டுமே எடுக்கப்பட்டன.
- வீரக்கற்களின் சிறப்பு
பண்டைய நாளில் ஊர் மக்களையும், ஊரையும் காப்பாற்ற புலி, யானை, காட்டுப்பன்றி ஆகியவற்றைக் குத்தி வீரமரணம் அடைந்தோர்க்கும், போரில் வீரமரணம் அடைந்தோர்க்கும் நடுகற்கள் எடுக்கப்பட்டன. அந்நடுகற்களின் மூலம் அக்கால ஆடை, அணிகலன், போர் ஆயுதங்கள், போர்முறை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். நடுகல்லில் உள்ள வீரனை அவ்வீரனின் தலைவன், மனைவி, மக்கள், உற்றார் ஆகியோர் வழிபடுவர். அக்காலச் சமுதாயத்தைப் பற்றி அறிய நடுகல் ஆய்வு ஒரு முக்கியமான ஆதாரமாகத் திகழ்கிறது. பெரும்பாலான நடுகற்களில் இறந்த வீரனின் பெருமையும் பெயரும் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டிருக்கும்.