தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வழக்குகளும் வரிவித்தலும்

 • 5.4 வழக்குகளும் வரிவிதித்தலும்

  அக்காலத்தில் ஏற்பட்ட சில வழக்குகள் பற்றியும், அவைகளை விசாரித்தமை பற்றியும், அளித்த தண்டனைகள் பற்றியும் கல்வெட்டுகள் மூலம் சில குறிப்புக்கள் கிடைக்கின்றன. சிற்றூர்களில் கரணம் என்ற பெயரிலும், பேரூர்களில் அதிகரணம் என்ற பெயரிலும் நீதிமன்றங்கள் இருந்தன. அவற்றில் பணிபுரிந்தவர்கள் கரணத்தான் எனப்பட்டனர். இவற்றில் வழக்குகள் முடியாவிட்டால் மேல்முறையீடு செய்யத் தருமாசனம் என்ற நீதி அமைப்பும் இருந்ததைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. தர்மாசன அலுவலர் மத்யஸ்தன் அல்லது நடுவிருக்கை எனப்பட்டனர்.

  5.4.1 வழக்குகளும் தண்டனையும்

  இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டான். அக்கொலைக்குக் காரணமான ஐந்து சகோதரர்கள் கண்டுபிடிக்கப்பட்டு முதலாம் இராசராசன் காலத்தில் அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டால் அறிகிறோம். முதலாம் இராசராசன் காலத்தில் மதுராந்தகன் கண்டராதித்தன் என்னும் கோயிலை மேற்பார்வையிடும் உயர் அலுவலன், பல கோயில்களில் நடந்த கையாடல்களையும், வரி ஏய்ப்பையும் கண்டுபிடித்துச் சரியாக நடைபெற ஏற்பாடு செய்ததுடன் குற்றம் புரிந்தவர்களையும் தண்டித்தான். இதனையும் கல்வெட்டுகள் கூறுகின்றன.

  • தூக்குத்தண்டனை

  கொலைக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. அதற்குத் தலைவிலை என்று பெயர். ஆனால் ஈரோடு மாவட்டம் சாத்தம்பூர் என்னும் ஊரில் பூந்துறை நாட்டார் கூடி, அநியாயம் அழிபிழை செய்த தீயவர்களைக் கொன்றால் கொலை செய்தவர்களுக்குத் தலைவிலை இல்லை என்று தீர்மானம் செய்தனர் என்பதை, அவ்வூர் வல்லாள ஈசுவரன் கோயிலில் வெட்டப்பட்ட ஒரு கல்வெட்டுத் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு கொங்குச் சோழன் குலோத்துங்கன் (1149-1183) காலத்ததாகும்.

  • விளக்கேற்றுதல்

  ஓர் ஊரில் சகோதரர் இருவர் சண்டையிட்டதில் தம்பியால் அடிபட்டு அண்ணன் இறந்தான். தகுந்த சாட்சியங்களால் குற்றம் நிரூபிக்கப்பட்ட போதிலும், வயோதிகப் பெற்றோருக்கு வேறுமக்களோ, ஆதரிப்பவரோ, சொத்தோ, நிலமோ இல்லாத காரணத்தால், நாட்டுச்சபையார் இளையவனின் தலைவிலையை நீக்கிக் கோயிலுக்கு விளக்கேற்றுமாறு கூறினர் என்பதை, ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. பிற்காலச் சோழர் காலத்தில் கி.பி. 12, 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் இச்செய்திகள் கூறப்படுகின்றன.

  • இறைப்பணியாளர் குற்றம்

  கோயில்களில் இறைப்பணி புரியும் அர்ச்சகர்கள் செய்யும் குற்றங்களுக்குத் தண்டனையாக அவர்கள் நிலம் பறிமுதல் செய்யப்பட்டது. நிலம் இல்லாவிடில் அவர்களைப் பணியிலிருந்து நீக்கி, அவர்கள் பணிசெய் நாளைப் பிற அர்ச்சகர்கட்கு விற்பனை செய்து பெற்ற பொன்னைக் கோயில் கருவூலத்தில் சேர்த்து, ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்தனர்.

  • தவறான கொலைக்குரிய தண்டனை

  வேட்டைக்குச் சென்ற இடத்தில் ஒருவன் அம்பெய்தபோது தவறுதலாக வேறு ஒருவன் மீதுபட்டு அவன் இறந்தான். கொலை புரியவேண்டும் என்ற தீய நோக்கம் இன்றித் தற்செயலாக ஆயுதம் பட்டு ஒருவன் இறந்தான். இப்படிப்பட்ட கொலைக்குற்றங்களுக்குத் தண்டனை கடுமையாக விதிக்காமல், கோயிலுக்கு ஆயுள் முழுவதும் விளக்கேற்றுமாறு செய்துள்ளனர்.

  • சாதிக்கு ஏற்ற தண்டனை

  சாதிக்கு ஏற்ற தண்டனையும் அக்காலத்தில் நிலவியது. சிவாச்சாரியார் இருவர் மிகக் கொடிய குற்றங்களைச் செய்தனர். வழக்கமாக அவர்கட்கு எளிய தண்டனை இல்லாமல் கீழ்ச்சாதிக்காரர்களுக்கு அளிக்கும் தண்டனைபோல் அவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது என்பதையும் ஒரு கல்வெட்டு மிக விரிவாகக் கூறுகிறது.

  5.4.2 வரி விதித்தல்

  வரி அல்லது கடமை என்பது அக்காலத்தில் அரசின் முக்கிய வருவாயாக இருந்தது. நிலத்தின் மீதும், தொழிலின்மீதும், வணிகத்தின்மீதும் இவை விதிக்கப்பட்டன. ஆனாலும் பெரும்பாலான கொடை நிலங்கள் இறையிலி என்று வரி நீக்கப்பட்டிருந்தன. பிற்காலக் கல்வெட்டுக்கள் மூலம் குறவன், கூத்தாடி, தொட்டியர், தொம்பர், பட்டர், புலவர், மறவர், மாணிக்கி, வலையர், வேட்கோவர், ஆண்டிகள் போன்ற சமூகத்தார்க்குச் சில ஊர்களில் அல்லது சில உள்நாட்டுப் பகுதியில் வரி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.

  • வரியைக் குறைத்தல்

  அரசுக்கோ நாட்டுச்சபைகட்கோ கொடுக்க வேண்டிய வரிகளைக் குறைக்குமாறு சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளமையைக் கல்வெட்டுகளில் காணுகின்றோம். “மச்சுனன் அழகப் பெருமாள் சொன்னமையில்”, “பெருந்தரம் வீரசோழ மூவேந்தவேளான் சொல்லி நினைப்புமிட்டமையில் இறை இழிச்சினோம்’ என்று கூறி, வரியைப் பாதியாகவோ மூன்றில் ஒரு பங்காகவோ குறைத்துள்ளனர். (இழிச்சுதல் - குறைத்தல்).

  'காடெழு கரம்பு நீரேறாப்பாழ்' போன்ற தரிசு நிலத்தைப் பயிர் செய்தவர்கட்கும், புதிதாகக் குடியேற்றப்பட்ட வேளாளர்கட்கும், கைக்கோளர் முதலிய தொழில் புரியும் மக்களுக்கும் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு வரி இல்லையென்றும், அடுத்துவரும் ஆண்டுகட்கு மூன்றில் ஒன்றும், பின்னர் வரும் ஆண்டுகட்குப் பாதியும் வரி வாங்கப்பட்டது என்பதையும் கல்வெட்டு மூலமாக அறிகிறோம். தவறாக வரிவாங்கிய இடங்களில் வரி திருப்பிக் கொடுக்கப்பட்ட விபரமும் கல்வெட்டால் அறிகிறோம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-08-2017 12:28:49(இந்திய நேரம்)