தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நீர்நிலைகள்

  • 6.1 நீர்நிலைகள்

    ஆறு, அணை, குளம், ஏரி, ஏந்தல், வாய்க்கால், கிணறு ஆகிய நீர் நிலைகளைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. நீர்த் தேக்கங்களிலிருந்து குமிழி, தூம்பு, மடை, மதகு, கண், வாய், துளை ஆகியவற்றின் வழியாக நீர் பாய்ந்து நிலத்தை அடைகிறது. வாய் என்பது மதகு. நீரைக் கொண்டு செல்லுவது 'கால்'
    எனப்படும். வாயிலிருந்து செல்லும் கால் வாய்க்கால் ஆயிற்று.

    6.1.1 நீர்நிலை ஏற்படுத்தல்

    'கூவல் (கிணறு) குறைவின்றித் தொட்டான் மிகுபுகழ் பெறுவான்'  என்று நீதி நூல் கூறுகிறது. கூவ நூல் என்ற பழந்தமிழ் நூலொன்று கிணறு தோண்டுவதைப் பற்றிக் கூறுகிறது. கல்வெட்டொன்று 'பருத்தி வயக்கலும் இவ்வயல்களால் கிணறு இரண்டும் இக்கிணற்றால் விளை நிலமும்' என்று கூறுகிறது. குளம் தோண்டுதல், ஏரி வெட்டுதல், சுனை குழித்தல் என்பன கல்வெட்டுத் தொடர்கள்.

    • நீர் பாய்ச்சு முறைகள்

    மழை நீராலும், ஆற்று நீராலும், ஊற்று நீராலும் வேளாண்மை நடைபெறும். 'பாயும் நீர் பாயவும், வாரும்நீர் வாரவும், இறைக்கும் நீர் இறைக்கவும் படுவது' என்ற கல்வெட்டுத் தொடரால் பாய்தல், வாருதல், இறைத்தல் மூலம் நீர் நிலத்தில் சேர்வது தெளிவாகிறது. குற்றேத்தம், நெட்டேத்தம் என இரு முறைகளைக் கல்வெட்டுக் கூறுகிறது. அவை நீர் இறைத்துப் பாய்வதும், தானே பாய்வதும் ஆகும்.

    • கிணறுகள்

    பழங்காலத்தில் செயற்கையாகத் தோண்டும் கிணறுகள் மிக அரிதாகவே இருந்தன. ‘இவ்வூரில் கிணறு பெற்ற மனை’, ‘கிணறு பெற்ற தோட்டம்’ எனக் கல்வெட்டுகள் குறிப்பது இதன் சிறப்பையும், அருமையையும் உணர்த்தும். கூவலூர், காஞ்சிக் கூவல், கொல்லன்கூவல் என்ற ஊர்ப் பெயர்கள் அங்குள்ள கிணறுகளால் பெயர் பெற்றன. ஊர் மக்கள் பயன்படுத்தும் நீர்நிலை ஊருணி எனப்படும்.

    • ஆறுகள்

    சங்க காலத்தில் சோழநாட்டில் காவிரி, அரிசில் என இரண்டு ஆறுகள் இருந்தன. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தேவார காலத்தில் மண்ணி, கொள்ளிடம், கடுவாய், வெண்ணி போன்ற ஆறுகள் புதியதாகக் குறிக்கப்படுகிறது. பழங்காவிரி, புதுக்காவிரி போன்ற தொடர்கள் கல்வெட்டில் உள்ளன.

    • சோழ மன்னர்களும் பேராறுகளும்

    முதல் இராசராசன் (985-1014) திருச்சிக்கு அருகில் ஓடும் உய்யக்கொண்டான் ஆற்றையும், கோனேரிராசபுரம் அருகில் ஓடும் கீர்த்திமான் ஆற்றையும் வெட்டினான். கடுவாய் எனும் பழம் பெயரையுடைய குடமுருட்டி ஆற்றில் பிரியும் முடிகொண்டான் ஆற்றை முதலாம் இராசேந்திரன் (1012-1044) உருவாக்கினான். காவிரியில் பிரியும் வீரசோழன் ஆற்றை வீரராசேந்திர சோழனும் (1063-1070), குற்றாலத்திற்கு அருகே காவிரியில் பிரியும் விக்கிரமன் ஆற்றை விக்கிரம சோழனும் (1118-1136) வெட்டினர்.

    • ஏரிகள்

    சோழவாரிதி, வீரநாராயணன் ஏரி ஆகியவைகளை முதல் பராந்தகன் (907-953) வெட்டினான். வீரநாராயணன் ஏரி வீராணம் எனப்படுகிறது. கண்டராதித்தப் பேரேரி, செம்பியன் மாதேவிப் பேரேரி ஆகியவை கண்டராதித்த சோழனால் (950-957) அமைக்கப்பட்டன. உத்தமசோழன் (970-985) மதுராந்தகப் பேரேரியையும், சுந்தரசோழன் (957-970) சுந்தர சோழப் பேரேரியையும், அவன் மகள் குந்தவையார் குந்தவைப் பேரேரியையும் உருவாக்கினர். முதலாம் இராசேந்திரன் கங்கை வெற்றியின் நினைவாகக் கங்கை கொண்ட சோழப் பேரேரியை வெட்டினான். அது ‘நீர் மயமான வெற்றித்தூண்’ என்று புகழப்பட்டது. இப்போது பொன்னேரி என வழங்கப்படுகிறது. சோழநாட்டிலும் சோழர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் வேளாண்மை செழிக்கும் பொருட்டுச் சோழர் பல ஏரிகளை ஏற்படுத்தினர்.

    6.1.2 நீர்நிலை பாதுகாத்தல்

    ஆண்டுதோறும் ஏரிகள் தூர்வாரப்பட்டது. இதனை ஏரி குத்திக்கட்டுதல் என்பர். ‘எம்மூர் ஏரி ஆட்டாண்டு தோறும் கல்லுவிப்போமானோம்’ என்பது ஒரு கல்வெட்டுத் தொடர். (ஆட்டாண்டு – ஆண்டாண்டு) சில ஏரிகளில் மாதம் தோறும் குழி குத்துதல் என்ற பெயரில் தூர்வாரப்பட்டதை அறிகிறோம்.

    (கல்லுவிப்போம் – குழிதோண்டுவோம்)

    • தூர் வாருதல்

    நங்கவரம் கல்வெட்டில் ஓடத்தைக் குளத்தில இயக்கி நாள்தோறும் ஆறு ஆள் மண் தோண்ட வேண்டும் என்றும், ஒரு நடைக்கு 140 கூடை மண் கரைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், ஒரு நாளைக்கு 4 முறை மண் தோண்டிக் கொண்டுவர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-10-2017 15:13:51(இந்திய நேரம்)